RSS

விஸ்வரூபம் எடுத்திருக்கும் தரங்கவும் அடங்கமாட்டேன் என்று காட்டும் டில்சானும்.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது ஒரு நாள் சர்வதேசப் போட்டி நேற்று(12/21/2009) கட்டாக், Barabati மைதானத்தில் இடம் பெற்றது.


இதில் இந்திய அணியினர் 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டினர்.




இரு போட்டித் தடைகளுக்குள்ளான தோனிக்குப் பதிலாக தலைமைப் பொறுப்பை ஏற்றுகொண்ட விரேந்தர் சேவாக்கின் தலைமையிலேயே இவ் வெற்றி பெறப்பட்டது.





நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சங்கக்கார முதலில் துடுப்பெடுத்தாட இணங்கினார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரால் 44.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.



இதில் அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கட் போட்டி என்றாலே தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துவிடும் டில்சான் இப்போட்டியிலும் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துவிட்டார். வெறும் 18 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக டில்சான் 41 ஓட்டங்களைப் பெற்றார். டில்சான் அடித்தாடிய விதம் ”நீ என்னதான் செய்தாலும் நான் அடங்கவேமாட்டேன்” என்று சேவாக்கிற்கு எச்சரிக்கைவிடுப்பதாகவே இருந்தது.




டில்சானின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இந்த தொடரில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் தரங்க 81 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்றார்(6’s 1,4's 6).
தொடர்ந்து துடுப்பெடுத்தாடியவர்களில் சங்கக்காரவைத்(46) தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடவில்லை. மத்திய வரிசையை தொடர்ந்து காப்பாற்றி வந்த மத்தியூசின் இழப்பு இப்போட்டியின்போது பெரிதும் உணரப்பட்டது.



இந்திய அணிசார்பாக சிறப்பாகப் பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா, நெஹ்ரா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் ஹர்பஜான், சேவாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.



240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.




இந்திய அணி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களைப் பெற்றார். வெற்றியிலக்கு எட்டப்பட்டுவிட்டதால் 4 ஓட்டங்களால் சச்சின் தனது சதத்தினைத் தவறவிட்டார்.

சேவாக் 44 ஓட்டங்கள், காம்பீர் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.காயம் காரணமாக முதல் இரு போட்டிகளிலும் விளையாடாத யுவராஜ் சிங் 23 ஓட்டங்களைப் பெற்றார்.



இலங்கை அணிசார்பாக பந்துவீச்சில் வெலகெதர 2 விக்கெட்டுகளையும், ரண்டிவ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.



இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என்ற அடிப்படையில் இந்திய அணியினர் முன்னிலை வகிக்கின்றனர்.



மூன்று போட்டிகளையும் பொறுத்தவரையில் இலங்கை அணிசார்பாக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் வீரர்கள் மட்டுமே தொடர்ந்தும் பிரகாசிக்கின்றனர். மற்றைய வீரர்கள் போமிற்கு வந்ததற்கான எந்தவொரு அறிகுறியையும் காணமுடியவில்லை.




வீரர்களின் ஒழுங்கற்ற தெரிவும், சிறப்பாக விளையாடிவந்த மத்தியூசின் இடத்தை ஓரளவேனும் பொருத்தமான வீரரால் பதிலீடு செய்யாததுமே இலங்கை அணியினரிர் தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.



தொடரின் தீர்மானமிக்க 4வது போட்டியிலாவது பூரணமான அணியுடன் சிறப்பாக ஆடி தொடரைத் தக்கவைத்துக் கொள்ளுமா இலங்கை அணி??



நம்பிகையோடு காத்திருப்போம்…..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS