RSS

நுனலும் தன் வாயால் கெடும்…...





மேஜர் ஜெனரல் சரத்ஃபொன்சேகா இலங்கை மக்களால் தேசிய வீரராகப் போற்றப்பட்டவர் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் ஹீரோவாகப் பார்க்கப்பட்டவர். இலங்கையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர். கடந்த ஜனாதிபத்தித்  தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவர். இப்படி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட சரத் ஃபொன்சேகாவின் தட்போதைய நிலை என்ன???



     
மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். வெகுவிரைவில் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற தகவல்களும் வெளியிடப்படுகின்றன.  கைது செய்யப்படும்போது அடித்து, பிடரியில் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஃபொன்சேகா அவர்களின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது
”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலையில் கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும்.”
என்ற வரிகளின் ஆழம் புரிகின்றது.

எது எப்படியிருந்தபோதும் சரத் ஃபொன்சேகாவின் கைதுக்கு பலர் அரசியல் சாயம் பூசினாலும் கைது இராணுவ சட்டத்துக்கு அமைவாகவே இடம் பெற்றதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்..
இராணுவ சட்டத்தின் 57(01)வது சரத்துகமையவே சரத் ஃபொன்சேகா கைது செய்யப்பட்டதாகவும், இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கும் காலப்பகுதியில் ஒருவர் குற்றங்களைப் புரிந்திருப்பின் அதன் பின்னரான 6 மாத காலப்பகுதிக்குள் அவர் ஓய்வு பெற்றிருந்த போதிலும் அவரை இராணுவ சட்டத்துக்கமைய கைது செய்ய முடியும். இதன் படி சரத் ஃபொன்சேகா இராணுவ சட்டதுக்கு புறம்பாக நடந்துகொண்டார் என்பது உறுதியானதன் பின்னரே கைது செய்யப்பட்டார் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடற் படையின் தலைமையகத்தில் சரத் ஃபொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மீது இராணுவத்தினரே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வார்கள். மேலும் ஃபொன்சேகா அவர்களின் மனைவி அனோமா ஃபொன்சேகா அவரை என்னேரமும் சென்று பார்வையிட அனுமதியளிக்கப் பட்டிருப்பதாகவும்  இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.




இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தான் தயார் என்று அவர் கருத்து வெளியிட்ட மறுநாளே இக்கைது இடம் பெற்றிருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் பெற்றோலை ஊற்றிவிட்டது போல இவரது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக செம கடுப்பில் இருந்த அரசாங்கத்தை இன்னும் உசுப்பேத்திவிடுவது போல் கருத்துக்களை வெளியிட்டால்….. இது தான் நடக்கும்.  சமையம் பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு இப்போது அவதிப்படுகிறார்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயத்தில் கண்டம் இருக்கும் சரத் ஃபொன்சேகாவிற்கோ வாயில்தான் கண்டம்.



ஏற்கனவே, சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் எந்த உரிமையுமில்லை என்பது போன்ற கருத்தினை வெளியிட்டு வாங்கிக்கட்டிக் கொண்டார், பின்னர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை சுட்டுக் கொன்றமை தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டு சர்சையைக் கிளப்பினார், தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசுக்கெதிராக ஏகப்பட்ட கருத்துக்களை வெளியிட்டார், தொடர்ந்து தன் மீதான துன்புறுத்தல்களை அரசு நிறுத்தாவிட்டால் அரசின் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்று கடந்த 30ம் திகதி இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்டார் இதெல்லாம் போதாதென்று  இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தான் தயார் என்று திருவாய் மலர்ந்தருளினார்.. இப்போது….

இலங்கையில் தற்போதைய நிலைமை, கருத்துக்களை வெளியிடுவதற்குள்ள சுதந்திரத்தின் அளவு என்பவற்றை அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
தனது பின்புலத்தை அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும். தனது பின்புலம் பலவீனமாக இருக்க அரசாங்கத்தோடு மோதுவதா..??
     


ஃபொன்சேகாவின் கருத்துக்கள் அரசாங்கத்தினை ஆட்டம் காணவைக்கும் கருத்துக்கள், சர்வதேச ரீதியில் அரசிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருத்துக்கள். எனவே அரசு கொஞ்சம் முந்திக்கொண்டது.

அப்போது தனக்கு சல்யூட் அடித்த கைகள் இப்போது கைதுசெய்து இழுத்துச் செல்கின்றன, அப்போது தன் கட்டளைக்கு அடிபணிந்தவர்கள் இப்போது தன்னையே விசாரிக்கிறார்கள், தனக்கு முன் எழுந்து நின்றவர்கள் இப்போது கால் மேல் கால் போட்டமர்ந்து ஏழனம் செய்கிறார்கள் இப்படியொரு நிலை முன்னாள் இராணுவத் தளபதிக்கு.



இதைத்தான் “யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே”என்று கண்ணதாசன்  எழுதினாரோ…..

தற்போது ஃபொன்சேகா அவர்களின் கைதினை எதிர்த்து நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதும் அதனைப் பொலீசார் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் அதி அழுத்தம் கொண்ட நீர்ப்பிரயோகம் செய்து கலைப்பதும் நிகழ்கின்றது.

எவ்வித பாரிய அசம்பாவிதங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதும், தேசிய வீரரின் கெளரவத்தினைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தவிரவும் சர்வதேசத்தினை சமாளிக்க வேண்டியதும், சர்வதேச தடைகள் வராமல் காத்துக் கொள்வதும் அரசாங்கத்திற்குள்ள பாரிய சவால்களாகும்.

எது எப்படியோ பழிவாங்கும் அரசியலை விடுத்து நாட்டினதும், மக்களினதும் வளமான எதிர்காலத்திக்கு வழியமைப்பது தொடர்பில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாக இருக்கின்றது.



அனைவருக்கும் திருப்தியான முடிவும், சரத் ஃபொன்சேகா அவர்களுக்கு உரிய கெளரவமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் காத்திருப்போம்……………………

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS