RSS

ரஜரட்டைப் பல்கலைக் கழகம் கால வரயறையின்றி மூடப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களும் வளாகத்தைவிட்டு வெளியேறவேண்டும் என உத்தரவு.

இது ஒரு கறுப்பு சரித்திரம்
இலங்கை ரஜரட்டைப் பல்கலைக் கழகத்தின் மிகிந்தலை வளாகத்தில் பிரயோக விஞ்ஞான பீடம், முகாமைத்துவ  பீடம், சமூக விஞ்ஞான பீடம் என்பன அமைந்திருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலருக்கும் பிரதேசவாசிகள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. இதனால் கோபமுற்ற பிரதேச வாசிகள் பல்கலைக் கழக
 மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். பிரச்சினையில் சம்பந்தப்படாத, ஏனைய பீட மாணவர்களும் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இதனால் பிரச்சினை பூதகரமானது மட்டுமல்லாமல் பிரச்சினை மொத்த பல்கலைக் கழக மாணவர்களுக்கும் ஊரவர்களுக்கும் என்று மாற்றம் பெற்றது.

நேற்றிரவு 8 மணியளவில் ஊர்மக்கள் ஒன்று கூடி வந்து மாணவர் விடுதிகளைத் தாக்கினர். இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் திருப்பித் தாக்கியதில் ஊர் மக்களில் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பிரச்சினை இன்னும் பெரிதானது.

ஊர்மக்கள் தொடர்ந்தும் பல்கலைக் கழகத்தினுள்ளும், விடுதிகளினுள்ளும் நுழையமுற்பட்டபோதும் மாணவர்களின் கடுமையான எதிர்த் தாக்குதல்களினால் அவை முறியடிக்கப்பட்டன. ஆனாலும் பல்கலைக் கழக வளாகத்திற்கு வெளியே நின்று கற்களைக் கொண்டு தாக்கியதில் கட்டிடங்களுக்கு ஓரளவு சேதமேற்பட்டது.

அதே வேளை பல்கலைக் கழகத்திற்கு வெளியே பலகலைக் கழக நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் விடுதிகளுக்குள்  நுழைந்தவர்கள் அவற்றைச் சேதமாக்கியதோடு, சில பொருட்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். 

பல்கலைக் கழக வளாகத்திற்கு வெளியே பல விடுதிகள் அமைந்திருந்தன. அவற்றில் ஊர்மக்களை எதிர்க்கக் கூடிய அளவிற்கு மாணவர்கள் தங்கியிருக்கவில்லை.  இதனால் ஊர்மக்கள் திரண்டு வருவதை அறிந்த மாணவர்கள் நட்ட நடு இரவில் அங்கிருந்து உடனடியாக வெளியேறி அருகிலுள்ள பற்றைக் காடுகளுக்குள் பதுங்கியிருந்தனர். இதனால் மாணவர்களுக்கு பாதிப்புகள் வரவில்லை. அதிகாலை 3மணிவரை பற்றைகளுக்குள் தஞ்ஞமடைந்திருந்த மாணவர்கள் பொலிசாரினால் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் விடுதிகளில் சேர்க்கப்பட்டனர்.

இதேவேளை தகவல் அறிந்து விரைந்துவந்த பொலீசார் பல்கலைக் கழகத்தின் பிரதான நுழைவாயிலில் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஏனைய பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்படவில்லை. இதனால் மற்றய பகுதிகளினூடாக ஊர்மக்கள் நுழைய முற்படுவதும், கற்களைக் கொண்டு தாக்குவதும் தொடர்ந்தும் நிலவியது.

இதனைத் தடுக்க அனைத்து மாணவர்களும் இணைந்து சுழற்சி முறையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். கிரிக்கட் துடுப்பு மட்டை, விக்கட், தடிகள் மற்றும் இரும்புக் குழாய்கள் சகிதம் களமிறங்கிய மாணவர்கள் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  வெளி விடுதிகளிலுள்ள மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டதோடு, அனைத்து மாணவ, மாணவியரும் பல்கலைக் கழக வளாகத்தின் மத்திய பகுதிகளில் அமைந்திருந்த விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.(காரணம் ஏனைய விடுதிகளுக்கு கல்லெறித் தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.)

உயரமான கட்டிடங்களின் மேல் ஏறிய சில மாணவர்கள் அங்கிருந்து கொண்டு கையடக்கத் தொலைபேசி மூலமாகவும்,  விசேட சமிஞ்ஞைகள் மூலமாகவும் வெளியே நடக்கும் விடயங்களையும், ஊர்மக்களின் நடமாட்டங்களையும் பற்றித் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.
யாரவது சந்தேகத்திற்கிடமாக நடமாடினாலோ, அல்லது வளாகத்திற்குள் நுழைய முற்பட்டாலோ உடனே தகவல் கீழே தயார் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு திரண்டுவந்து தாக்குதல்களை நடத்தி அவர்களை விரட்டியடிப்பர்.

இந்த பாதுகாப்பு நடைமுறை சுழற்சி முறையில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரதேசவாசிகள் வளாகத்திற்குள் நுழைய பல தடவைகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

இதேவேளை மறுநாள் காலை உபவேந்தர் தலைமையில் ஒன்று கூடிய பல்கலைக் கழக செனற் சபை நிலைமைகளை ஆராய்ந்தபின்னர் பல்கலைக் கழகம் நண்பகல் 12.30 இலிருந்து காலவரையறையின்றி மூடப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் மாலை 4 மணிக்கு முதல் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், மாணவர்களின் வெளியேற்றத்திற்குரிய பாதுகாப்பை செய்து தருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் முன்னதாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலீசார் அறிவித்திருந்தனர். எனவே அந்த 4 மாணவர்களும் விடுதலை செய்யப்படும்வரை யாரும் வெளியேறப் போவதில்லை என்று அனைத்து மாணவர்களும் உறுதியாகத் தெரிவித்திருந்தனர். இதனால் பல்கலைக் கழக மாணவ சங்கத் தலைவர்கள், பல்கலைக் கழக நிருவாகிகள் மற்றும் பொலீசாருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கைதான அந்நான்கு மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக வளாகத்தைவிட்டு வெளியேற இணங்கிக் கொண்டனர்.  அதேவேளை வெளியே முறுகல் நிலை தொடர்ந்தவண்ணமே இருந்தது.

மாணவர்களை பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பிரகாரம் மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக பஸ் வண்டிகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு பொலீசார் மற்றும் இலங்கை இராணுவத்தின் கஜபா படையினரின்(மோட்டார் வண்டிப் படையணியினரின்) விசேட பாதுகாப்போடு ஊர்மக்களின் கூக்குரல் மற்றும் எதிர்ப்புகளையும் கடந்து அநுராதபுரம் பிரதான பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டனர்.

தற்போது பல்கலைக் கழகத்திற்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அநேகமாக ஏப்ரல் விடுமுறையின் பின்னரே பல்கலைக் கழகம் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பல்கலைக் கழகம் வரும்போது மிகிந்தலை மக்கள் பிரச்சினைகளை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்வார்களா? இல்லை மனதில் வைராக்கியம் வைத்து கொலை வெறியோடு பழிவாங்கப் போகிறார்களா..?
இறைவனுக்கே வெளிச்சம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS