RSS

ஏப்ரல் என்கெளன்டர்

இந்த ஏப்ரல் விடுமுறைக்கு எங்காவது போகனுமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நண்பர் பாசித்திடமிருந்து அழைப்பு வந்தது, நாளை காலை உல்லை போவம் வாரீங்களா என்று கேட்டார். சரி என்று ஏற்றுக் கொண்டேன்.



ஞாயிற்றுக் கிழமை காலை 7மணியளவில் ஊரிலிருந்து உல்லை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பமானது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நாங்கள் நால்வர். ஏற்கன்வே அதிகாலையிலேயே அங்கே சென்றிருக்கும் நண்பர்களோடு இணைந்து உல்லையவே கலக்குற. இதுதான் திட்டம்.



நான் எனது சகோதரரின் passion plus மோட்டார் சைக்கிளிலும், பாசித் நண்பரின் pulsar மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டோம். சம்மாந்துறையிலிருந்து உல்லை ஏறத்தாள 72கி.மீ

காலை உணவு, எரிபொருள் நிரப்பியமை என்பவற்றைச் சேர்த்து 72 கி.மீ தூரத்தை ஒன்றரை மணித்தியாலத்துக்குள் ஓடி முடித்தோம்.



ஓட்டமா அது. சும்மா பறந்தோமில்ல. எனது மோட்டார் சைக்கிளின் அதியுயர் வேகம் மணித்தியாலத்திற்கு 90கி.மீ. சம்மாந்துறையிலிருந்து அக்கரைப்பற்று வரையில் சராசரியாக மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வேகத்திலும் அக்கரைப்பற்றிலிருந்து உல்லைவரை சராசரியாக மணித்தியாலத்திற்கு 85 கி.மீ வேகத்திலும் பறந்தோம். எனது மோட்டார் சைக்கிளின் பின் டயரில் எந்த விதமான தவாளிப்புகளுமே இல்ல. இப்படியானதொரு நீண்ட தூரப் பயணத்திற்கு அதனைப் பயன்படுத்தவே முடியாது, ஆனாலும் வீதிகள் எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருந்தமையால் நம்பிக்கையோடு அதியுயர் வேகமான மணிக்கு 90 கி.மீ வேகத்தில் அதிக தூரத்தைக் கடக்க முடிந்தது.



காலை 8.30 மணியளவில் உல்லை வந்தாச்சு.

அங்கிருந்த நம்ம நண்பர்களோடு இணந்து உல்லையை அதாவது கடற்கரையை உற்சாகமாய் ஒரு வலம் வந்தோம். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மக்களின் வருகை அதிகமாகவிருந்தது.



உயரமான பறன் ஒன்றின் மேலேறி அக்கடற்கரையின் வனப்பைக் கண்டுகளித்தோம். அந்த பறன் மீதிருந்தே ஏராளமான புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். பின்னர் 9 மணியளவில் குளிப்பதற்காக கடலில் இறங்கினோம் சொன்னா நம்பமாட்டீங்க சுமார் 6 மணித்தியாலங்கள் கடலை விட்டு வெளியில் வரவே இல்லை.

(கடலைக் காணாமல் கண்டியா..? என்னதான் குளிச்சாலும்…….. இது போன்ற மொக்கை கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது.)



பந்து மாற்றுதல், சுழியோடுதல், மணலினால் குளிப்பாட்டுதல், மணலினால் தாக்குதல், அலையை எதிர்த்து நிற்றல் என்று ஏகப்பட்ட விளையாட்டுக்கள். பந்து மாற்றி விளையாடும் போது எதிரணியைச் சேர்ந்த ஒருவனின் நகம் பட்டு எனது தோள்பட்டையில் சிறிய காயம், அதிலும் கடல் நீர் படுவதால் பயங்கர எரிச்சல் வேறு என்ன செய்ய…..



இவ்வாறு 6 மணித்தியாலக் குளியல்.விளைவு ஏற்கனவே அஜித் மாதிரி அழகா வெள்ளையா இருந்த நான் கொஞ்சம் கறுப்பாகிட்டன்.

(பின்ன அந்த வெயிலுக்குள்ள 6 மணி நேரம் குளிச்சா என்ன பண்ணும்.)



ஒருவாறாக அங்கிருந்து புறப்பட்டு பகல் உணவையும் உண்டுவிட்டு 3.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர். மீண்டும் சராசரியாக மணித்தியாலத்திற்கு 85 கி.மீ வேகத்தில் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.



எனக்கு முன்னால் Pulsarஇல் சென்று கொண்டிருந்த பாசித்தும், றுமைஸும் (பின்னாலிருந்தவர் றுமைஸ்) விழுந்து எழும்பிக் கொண்டிருந்தார்கள். வேகமாக வந்து ஒரு வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் சறுக்கி இருவரும் விழுந்துவிட்டார்கள். மோட்டார் சைக்கிள் விழுந்து சுமார் 10 அடி தூரத்திற்கு சறுக்கிச் சென்றிருந்தது. நல்ல வேளை வீதியின் மறு ஓரத்தில் மணல் இருந்ததால் பாரிய காயங்களோ, சேதங்களோ வரவில்லை. தெய்வாதீனமாக எதிரே எந்த வாகனமும் வராததினால் ஒன்றும் நடக்கவில்லை. இல்லையேல்…………………………..

றுமைஸின் தலைக் கவசத்திலுருந்த காயத்தைப் பார்த்த போது புரிந்தது அவர் அந்த தலைக் கவசத்தைப் போடாது விட்டிருந்தால் என்ன ஆயிருக்குமென்று… உண்மையில் மரண அடி அது.



எல்லாவற்றையும் சீர் செய்து கொண்டு, பயண வேகத்தைக் குறைப்பதென்ற முடிவோடு புறப்பட்ட போது பாசித்தும் றுமைஸும் கேட்ட முதல் கேள்வி எந்த வழியால நாம வந்தம், இப்ப எதால போகப்போறம் என்றதுதான். காரணம் விழுந்த அதிர்ச்சி ஒன்று மற்றது மோட்டார் சைக்கிள் சுழன்று; வந்த திசைக்கு எதிர் திசையை நோக்கியிருந்தது.



வேறு ஒருவரை வாகனத்தை ஓட்டச் சொல்லிவிட்டு அவ்விருவரையும் எங்களின் மோட்டார் சைக்கிள்களில் வருமாறு அழைத்தோம், இல்லை எங்களால் சமாளிக்க முடியும் என்று அவர்கள் கூறினர், பயணம் தொடர்ந்தது.



ஒலுவில் கடற்கரைக்குச் சென்று அங்கும் சிறிது நேரம் கலர்ஸ் காட்டிவிட்டு மாலை 6.30 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Vijay சொன்னது…

72 கி.மீ தூரத்தை ஒன்றரை மணித்தியாலத்துக்குள் ஓடி முடித்தோம்" - சரி சரி நீங்க நல்லா ஓடுவிங்க...

"அஜித் மாதிரி அழகா வெள்ளையா இருந்த நான் கொஞ்சம் கறுப்பாகிட்டன்" - சிறிய மாற்றம் அஜித் மாதிரி அழகா வெள்ளையா வரணும் என்றுதான் குளிச்சன், எங்க என்ர களர் மாறப்போகுது...

Unknown சொன்னது…

at-last you all went for a trip and i missed it, bad luck ;)