RSS

இலங்கை அணி இம்முறை சாதிக்குமா..??

ஐ.சி.சியின் 3வது T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.


இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை/நியூசீலாந்து அணிகளும் மே.இ.தீவுகள்/அயர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

கடந்த வருடம் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டி இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் அணியிடம் தோற்று பரிதாபகரமாக கிண்ணத்தை இழந்த இலங்கை அணி இம்முறை சாதிக்குமா…?


15 பேர் கொண்ட இலங்கை அணிவருமாறு

குமார் சங்கக்கார(தலைவர்)               முத்தையா முரளீதரன்(உபதலைவர்)
தினேஸ் சந்திமால்                                 திலகரட்ன டில்சான்
சிந்தக ஜயசிங்க                                       சனத் ஜயசூரிய
மஹெல ஜயவர்தன                               சுராஜ் ரன்டிவ்
சாமர கபுகெதர                                          நுவன் குலசேகர
லசித் மலிங்க                                            ஏஞ்செலொ மெத்தியூஸ்
அஜந்த மெண்டிஸ்                                  திஸ்ஸர பெரேரா
சானக வெலெகெதர

அனுபவமும்,இளமையும், துடிப்பும் கலந்த ஒரு அணி இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. பல புதுமுக வீரர்கள் இம்முறை அறிமுகத்தை மேற்கொள்கின்றனர்.

மூத்த வீரர்களைப் பற்றிப் பார்த்தோமானால் இம்முறை நடைபெற்ற ஐ.பி.எல் போடிகளில் இலங்கையின் அதிரடி வீரர்களான சனத் ஜயசூரிய, டில்சான் ஆகியோர் சோபிக்கவில்லை. குமார் சங்கக்கார மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் (சில போட்டிகளைத் தவிர) சராசரியாகவே விளையாடினர். மஹெல ஜயவர்த்தன, லசித் மலிங்க, முத்தையா முரளிதரன் ஆகியோரே மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இதேவேளை நேற்று தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியினர் 5 விக்கட்டுகளினால் தோல்வியடைந்தனர். முரளி, மலிங்க, மெண்டிஸ் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் வானவேடிக்கை நிகழ்த்திய கபுகெதர 35 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்களையும் 3 நான்கு ஓட்டங்களையும் விளாசி ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்றார். சனத் ஜயசூரிய 33 ஓட்டங்களைப் பெற்றார். ஆனாலும் தென்னாபிரிக்க அணியினர் 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியீட்டிக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக எதிரணியினருக்கு தலையிடி கொடுக்கப்போகும் வீரர்களாக மஹெல ஜயவர்தன,ஏஞ்சலோ மெதியூஸ், லசித் மலிங்க, முரளீதரன், சனத் ஜயசூரிய, சாமர கபுகெதர ஆகியோர் திகழ்வார்கள். டில்சான் சிலவேளைகளில் திசர பெரேரா, குமார் சங்ககார ஆகியோரும் விஸ்வரூபமெடுக்கலாம்.

டில்சான் இன்னும் ஃபோமுக்கு வரவில்லை. சனத் - டில்சான் மிகச்சிறந்த அதிரடி வீரர்கள். இவ்விருவரும் ஃபோமுக்குத் திரும்பினால், பந்துவீச்சில் மலிங்க, முரளி அசத்தினால் அப்புறம் என்ன? T20 உலகக் கிண்ணம் எமக்குத்தான்.

ஐ.பி.எல் போட்டிகளில் எழுந்துள்ள சர்ச்சைகளோடு இந்திய அணியினர் குறைந்தது அரையிறுதிவரையாவது முன்னேறாதுவிட்டால் ஐ.பி.எல் போட்டிகளின் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறியே… இந்திய ரசிகர்களைத் தெரியாதா..??

இன்று நான் எதிர்பார்க்கும் இலங்கை அணி

குமார் சங்கக்கார
திலகரட்ன டில்சான்
சனத் ஜயசூரிய
மஹெல ஜயவர்தன
சாமர கபுகெதர
ஏஞ்செலொ மெத்தியூஸ்
லசித் மலிங்க
முத்தையா முரளீதரன்
திஸ்ஸர பெரேரா
சானக வெலெகெதர
அஜந்த மெண்டிஸ்

மிகச்சிறந்த போட்டியொன்றைக் காண உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS