RSS

ஸாக்கிர் நாயக்

ஸாக்கிர் அப்துல் கரிம் நாயக் (ஸாக்கிர் நாயக்) 1965ம் வருடம் ஒக்டோபர் 18ம் திகதி மும்பாயில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை St. Peter's High School இலும் அதன்பின்னர் Kishinchand Chellaram College இலும் தொடர்ந்தார். வைத்தியரான இவர் தனது மருத்துவக் கல்வியை Topiwala National Medical College and Nair Hospital இல் கற்றார். MBBS பட்டத்தினை University of Mumbai இல் பெற்றுக் கொண்டார்.




மறைந்த மா மேதை அஹ்மட் தீதாத் அவர்களின் தஃவாப் பணியினால் உந்தப்பட்ட ஸாகிர் நாயக் அவர்கள் 1991 ம் ஆண்டிலிருந்து தன்னையும் தஃவாத் துறையில் ஈடுபடுத்தத் தொடங்கினார். 45 வயதாகும் ஸாக்கிர் நாயக் அவர்கள் இஸ்லாம் தொடர்பாக மற்றவர்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்குவதில் அயராது பாடுபடுகின்றார். இஸ்லாத்தினை அல்குர்ஆன், அல்-ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்குவதோடு தர்க்க ரீதியிலும் விஞ்ஞான அடிப்படையிலும் இவர் வழங்கும் விரிவுரைகள் அற்புதமானவை.



நேயர்களின் நேரடிக் கேள்விகளுக்கு உடனடியாகவும் தெளிவாகவும் விளக்கமளிப்பது இவரது தனிச்சிறப்பு. அனைத்து மத நூல்களையும் படித்து மனனமிட்டுள்ள இவர் நொடிப் பொழுதில் அனைத்து நூல்களினையும் அத்தியாயம் வரிகளோடு ஆதாரமாகக் குறிப்பிட்டு விளக்கமளிப்பதால் இவரது உரை உலகப் புகழ்மிக்கதாகத் திகழ்கின்றது. இவரது ஞாபக சக்தி அபரிமிதமானது.



இவரது அற்புதமான விளக்கத்தினால் இவர் உரை நிகழ்த்தும் அதே சபையில் பலர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றார்கள்.



Indian Express பத்திரிகையானது 2009ம் வருடம் பெப்ரவரி 22ம் திகதி வெளியிட்ட “100 Most Powerful Indians in 2009” என்ற தரப்படுத்தலில் ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு 82ம் இடம் வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று

"Top 10 Spiritual Gurus of India" என்ற விசேட தரப்படுத்தலில் ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருந்தது.



ஸாக்கிர் நாயக் அவர்கள் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்ற பல விவாதங்களில் பங்குபற்றியிருக்கின்றார்.

இவற்றுள் 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிக்காக்கோவில் Dr. William Campbell அவர்களுடன் "The Qur'an and the Bible: In the Light of Science" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதமும், 2006ம் வருடம்ஜனவரி 21ல் Sri Sri Ravi Shankar அவர்களுடன் God in Islam and Hinduism என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இதில் ஏறத்தாழ 50,000 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

2006 செப்டம்பரில் 16வது போப் பெனடிக் அவர்களை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஸாக்கிர் நாயக் அவர்கள் அழைத்த போதும் 16வது போப் பெனடிக் அதனை நிராகரித்துவிட்டார்.

உலகெங்கிலுமுள்ள பல பிரபலமான பல்கலைக் கழகங்களில் இஸ்லாம் தொடர்பாக பல முக்கிய விரிவுரைகளையும், விவாதங்களையும் ஸாக்கிர் நாயக் நிகழ்த்தியிருக்கிறார்.

2007 நவம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் டெல்லியில் ஸாக்கிர் நாயக் அவர்கள் தனது தலைமையில் 10 நாள் சமாதான மாநாட்டினை நடாத்தி வருகின்றார். இதில் உலகெங்கிலுமிருந்து பல மார்க்க அறிஞ்சர்கள் கலந்து மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்திவருகின்றார்கள்.

IRF (Islamic Research Foundation) என்ற அமைப்பின் நிறுவனத் தலைவரான இவர் இதன் மூலம் பல தாயீக்களை உருவாக்கி வருகின்றார். Pease TV என்ற தொலைக்காட்சி ஒலிபரப்பின் மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இவர் தனது தஃவாப் பணியினைத் தொடர்கின்றார்.



ஸாக்கிர் நாயக்கிற்கு எதிராக பல விமர்சனங்கள் வெளிவந்தாலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து தனது தஃவாப் பணியில் தொடர்ந்தும் பயணிக்கின்றார்.

இப்படி பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஸாக்கிர் நாயக் அவர்கள் இன்று மாலை 6.45 மணிக்கு கொழும்பு சுகததாச திறந்த வெளியரங்கில் "Peace Through Religion" என்ற தலைப்பில் மாபெரும் சொற்பொழிவினை நிகழத்தவிருக்கின்றார். சொற்பொழிவின் முடிவில் பார்வையாளர்களின் நேரடிக் கேள்விகளுக்கும் பதிலளிக்கக் காத்திருக்கின்றார்.



எனவே இஸ்லாம் தொடர்பாக உங்களுக்குள்ள சந்தேகங்களையும், தெளிவின்மையையும் போக்கிக் கொள்ள இந்த அற்புதமான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். விசேடமாக முஸ்லிம் அல்லாத நண்பர்களை இஸ்லாம் தொடர்பான தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.



ஸாக்கிர் நாயக் அவர்களின் தஃவாப் பணி வெற்றிகரமாகத் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS