RSS

தொடரட்டும் இலங்கை அணியின் வெற்றி நடை....

ஐ.சி.சி T20 போட்டிகளில் இடம்பெற்ற மிகவும் விறுவிறுப்பானதும் கடைசிப் பந்தில் வெற்றி பெறப்பட்டதுமான சுவாரஸ்யமான போட்டி. நேற்று இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

மிக முக்கியமானதும், மிகுந்த விறுவிறுப்பானதுமான போட்டியில் இலங்கை அணியினர் மிகச் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணியினர் முண்ணேறியிருக்கின்றனர்.


நேற்றைய போட்டியானது இலங்கை, இந்தியா,மேற்கிந்தியத் தீவுகள் அணியினருக்கு மிகுந்த முக்கியமான போட்டியாகவிருந்தது. இலங்கை அணியினர் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பு அதிகமாகும். இலங்கை அணியினரை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டால் இந்திய அணியினருக்கும் அரையிறுதிக்கு ஒரு சிறிய வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலையில் நேற்றைய போட்டி ஆரம்பமானது.

மிக முக்கியமான நாணயச் சுழற்சியில் வெற்றியடைந்த இந்திய அணியினர் எதிர்பார்த்ததைப் போன்றே முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தனர்.
சிறப்பான ஆரம்பத்தை இந்திய அணியினர் பெற்றுக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்திய அணியினர் 190 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுவிடக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனாலும் அவர்களால் 163 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இந்திய அணியினர் முதல் 10 ஓவர்களில் 90/1 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும் இறுதி 10 ஓவர்களில் 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். இதற்கான முக்கிய காரணம் இலங்கை பந்துவீச்சாளர்களான திசர பெரேரா மற்றும் லசித் மலிங்க ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சு. அதிலும் திசர பெரேராவின் இறுதி ஓவர்கள் அற்புதம். யோக்கர் பந்துகளை விக்கட்டுக்கு வெளியே அகலமாக வீசும் நுட்பத்தின் மூலமாக இந்திய அணியினரின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்தினார்.



இலங்கை அணிக்கு இறுதி ஓவர்களை லசித் மாலிங்கவுடன் இணைந்து சிறப்பாக வீச அருமையான வீரர் திசர பெரேராதான். இவ்விரு வீரர்களையும் கொண்டு இறுதி 5 ஓவர்களை சிறப்பாக கையாளலாம்.

குமார் சங்கக்கார கெளதம் காம்பீரின் பிடி ஒன்றையும், சுரேஸ் ரெய்னாவின் ஸ்டம் ஒன்றையும் தவறவிட்டார். மற்றப்படி இலங்கை அணியினரின் களத்தடுப்பு சிறப்பாகவிருந்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கிய பயணத்தில் இலங்கை அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. கடந்த போட்டிகளில் அதி உன்னத துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மஹெல ஜயவர்தன 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு இடி விழுந்தது. தொடர்ந்து சனத் ஜயசூர்யவும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியாவுடன் நடந்த நிலைதானோ என்ற கவலை இலங்கை ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.(சனா…. இனி கஸ்டம்)


தொடர்ந்து ஜோடி சேர்ந்த சங்ககார - டில்சான் ஜோடி இலங்கையின் இனிங்சிற்கு புது இரத்தம் பாய்ச்சினர். டில்சான் முக்கியமான நேரத்தில் ஃபோமுக்கு திரும்பிவிட்டார். டில்சான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மீண்டும் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன் பின் இணைந்த சங்கக்கார - மெத்தியூஸ் ஜோடி விக்கட்டில் நிலைத்து நின்று ஓட்டங்களை படிப்படியாக அதிகரித்தனர்.


இலங்கை இனிங்சின் 11வது ஓவரில் ஓட்ட வேகத்தை சடுதியாக அதிகரிக்க நினைத்த சங்கக்கார - மெத்தியூஸ் ஜோடி அதில் வெற்றியும் கண்டனர். அதிரடியாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சங்கக்கார 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சற்றுத் தழம்பல் நிலை ஏற்பட்டது. பின்னர் ஜோடி சேர்ந்த மெத்தியூஸ் - கபுகெதர ஜோடி (என்னைப் பொறுத்தவரை இலங்கையின் எதிர்கால தலைவர், உபதலைவர்கள்) சிறப்பாக நிதானமான அதிரடியினை வெளிப்படுத்தினர்.

இந்திய அணிக்கு முதலாவது இலக்கு இலங்கை அணியினரை 143 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்பது. இலங்கையணியினரின் முதலாவது இலக்கு 143ஐத் தாண்டவேண்டுமென்பது. போட்டி சுவாரஸ்யம் கூடியது. ஒரு கட்டத்தில் 14- 17ம் ஓவர் வரை இலங்கையணியினரின் திட்டம் 143ஐ எடுத்தால் மட்டும் போதுமென்பது போல் இருந்தது. காரணம் அதிரடியாக ஆடாமல் சாதாரணமாக ஆடினார்கள்.

போட்டியின் உச்சக்கட்டம்….



8 பந்துகளில் 25 ஓட்டங்கள் பெறவேண்டும். 19வது ஓவரின் 5வது பந்துவிச்சில் கபுகெதர 6 ஓட்டமொன்றை விளாசியதன் மூலம் இந்தியாவின் 143 என்ற இலக்கு தகர்க்கப்பட்டது. 19வது ஓவரின் இறுதிப் பந்தில் மற்றுமொரு 6 ஓட்டத்தை கபுகெதர விளாச போட்டி உச்சம் பெற்றது.
இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் பெறவேண்டும்… இறுதி ஓவரின் முதல் பந்தில் மெத்தியூஸ் அற்புதமான 6 ஓட்டமொன்றைப் பெற்றுக் கொடுத்தார். அடுத்த பந்தில் மெத்தியூஸ்(46) ரன்-அவுட்.

இறுதிப் பந்தில் 3 ஓட்டம் பெறவேண்டும்….

அசிஸ் நெஹ்ரா கபுகெதரவை நோக்கி வீசிய பந்து கபுகெதர தனது முன்னங்காலில் பாய்ந்து ஓங்கி அடிக்கின்றார்… ஆம் கவர் திசையில் அற்புதமான ஆறு ஓட்டம்.

இலங்கை அணி 5 விக்கட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளதோடு அரையிறுதிக்கும் முன்னேற்றம். இலங்கை அணியினரின் சிறப்பான சகலதுறை ஆட்டம் மூலமாக பெறப்பட்ட வெற்றியிது.                         இலங்கை அணிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கபுகெதர ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 36 ஓட்டங்கள். போட்டியின் ஆட்ட நாயகன் ஏஞ்சலோ மெத்தியூஸ்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS