RSS

வந்தாள் - சென்றாள் - மீண்டும் இறந்துவந்தாள்



அவள் ஒரு அழகிய தேவதை…… பார்ப்பவரை கவர்ந்திழுக்க தேவையான அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகி அவள். பாடசாலை விடுமுறை என்பதால் தன் சொந்த ஊரான சாய்ந்தமருதில் இருந்து எங்கள் ஊரிலுள்ள அவளது உறவினர்களான எங்கள் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களோடு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தாள்…. அளவாகப் பேசினாள் ஆனால் அழகாகப் பேசினாள்எங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாள்; சென்றுவிட்டாள்

சரியாக 2 வாரங்கள்தான் போயிருக்கும் அவள் மீண்டும் வந்தாள்இல்லை இல்லை கொண்டுவரப்பட்டாள்.. அவளது குடும்பத்தைச் சேர்ந்த 5 ஜனாசாக்களோடு ஆறாவதாய் அவளும் உழவு இயந்திரப் பெட்டியில் கொண்டுவரப்பட்டாள்….
.
அந்த அழகிய முகம் முழுவதும் சேறு….. அழகாய் அளவாய்ப் பேசிய வாய் நிறைய கடல் மணல், அற்புத அபிநயங்கள் காட்டிய கைகளிலும் உடலிலும் காயங்கள். ஆக மொத்தத்தில் பெளர்ணமி நிலவு அன்று அமாவாசையாய்க் காட்சி தந்தது. சுனாமியின் கோரப் பிடியில் அந்த தேவதையும் சிக்கிக்கொண்டாள். சிதைந்து போனாள்….

அன்று அழுதன என் கண்கள்பலர் மத்தியில் வெட்கமின்றி அழுதன என் கண்கள்..

அவள் பிரிந்து இன்றுடன் 9 வருடம் ஆனபோதும் இன்னும் நினைவில் இருக்கிறது அவள் முகம்.

எங்கோ இருந்து வந்து ஒரு நாள் பழகிய யாரோ ஒரு உறவுக்காக எனக்கே அந்த வலி அந்த கவலையென்றால்….

இந்தச் சுனாமியால் பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சகோதரனை, சகோதரியை, உறவுகளை இழந்த உள்ளங்கள் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கும்?
உணர முடிகிறது உணரமட்டும்தான் முடிகிறது.

இந்த சுனாமியில் உயிர்நீத்த அத்தனை உயிர்களையும் இறைவன் பொருந்திக்கொள்ளவேண்டும்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS