RSS

விஸ்வரூபம் எடுத்திருக்கும் தரங்கவும் அடங்கமாட்டேன் என்று காட்டும் டில்சானும்.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது ஒரு நாள் சர்வதேசப் போட்டி நேற்று(12/21/2009) கட்டாக், Barabati மைதானத்தில் இடம் பெற்றது.


இதில் இந்திய அணியினர் 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டினர்.




இரு போட்டித் தடைகளுக்குள்ளான தோனிக்குப் பதிலாக தலைமைப் பொறுப்பை ஏற்றுகொண்ட விரேந்தர் சேவாக்கின் தலைமையிலேயே இவ் வெற்றி பெறப்பட்டது.





நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சங்கக்கார முதலில் துடுப்பெடுத்தாட இணங்கினார். இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரால் 44.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.



இதில் அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கட் போட்டி என்றாலே தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துவிடும் டில்சான் இப்போட்டியிலும் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துவிட்டார். வெறும் 18 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக டில்சான் 41 ஓட்டங்களைப் பெற்றார். டில்சான் அடித்தாடிய விதம் ”நீ என்னதான் செய்தாலும் நான் அடங்கவேமாட்டேன்” என்று சேவாக்கிற்கு எச்சரிக்கைவிடுப்பதாகவே இருந்தது.




டில்சானின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இந்த தொடரில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் தரங்க 81 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்றார்(6’s 1,4's 6).
தொடர்ந்து துடுப்பெடுத்தாடியவர்களில் சங்கக்காரவைத்(46) தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடவில்லை. மத்திய வரிசையை தொடர்ந்து காப்பாற்றி வந்த மத்தியூசின் இழப்பு இப்போட்டியின்போது பெரிதும் உணரப்பட்டது.



இந்திய அணிசார்பாக சிறப்பாகப் பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா, நெஹ்ரா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் ஹர்பஜான், சேவாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.



240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.




இந்திய அணி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களைப் பெற்றார். வெற்றியிலக்கு எட்டப்பட்டுவிட்டதால் 4 ஓட்டங்களால் சச்சின் தனது சதத்தினைத் தவறவிட்டார்.

சேவாக் 44 ஓட்டங்கள், காம்பீர் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.காயம் காரணமாக முதல் இரு போட்டிகளிலும் விளையாடாத யுவராஜ் சிங் 23 ஓட்டங்களைப் பெற்றார்.



இலங்கை அணிசார்பாக பந்துவீச்சில் வெலகெதர 2 விக்கெட்டுகளையும், ரண்டிவ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.



இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என்ற அடிப்படையில் இந்திய அணியினர் முன்னிலை வகிக்கின்றனர்.



மூன்று போட்டிகளையும் பொறுத்தவரையில் இலங்கை அணிசார்பாக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் வீரர்கள் மட்டுமே தொடர்ந்தும் பிரகாசிக்கின்றனர். மற்றைய வீரர்கள் போமிற்கு வந்ததற்கான எந்தவொரு அறிகுறியையும் காணமுடியவில்லை.




வீரர்களின் ஒழுங்கற்ற தெரிவும், சிறப்பாக விளையாடிவந்த மத்தியூசின் இடத்தை ஓரளவேனும் பொருத்தமான வீரரால் பதிலீடு செய்யாததுமே இலங்கை அணியினரிர் தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.



தொடரின் தீர்மானமிக்க 4வது போட்டியிலாவது பூரணமான அணியுடன் சிறப்பாக ஆடி தொடரைத் தக்கவைத்துக் கொள்ளுமா இலங்கை அணி??



நம்பிகையோடு காத்திருப்போம்…..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

டில்சானின் அதிரடியும் மத்தியூசின் அசத்தலும்

நேற்று இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம் பெற்ற விறுவிறுப்பான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 1-1 என்று சமப்படுத்தியிருக்கிறது. (இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன.)




நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணித் தலைவர் MS.தோனி முதலில் துடுப்பெடுத்தாட இணங்கியதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.




இதில் கடந்த போட்டியில் இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சேவாக் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததன் மூலம் இந்த்திய அணியினரின் ஓட்டத்தை மட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த தோனி நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்து அதிரடியாக நிறைவு செய்தார். தோனியை ஆட்டமிழக்கச் செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவை நழுவவிடப்பட்டன். சுமார் 5 வாய்ப்புகள் தோனிக்கு வழங்கப்பட்டன. இத்தனை வாய்ப்புகள் தோனிக்கு வழங்கப்பட்டால் அவர் 107 பெறுவது பெரிய விடயமல்ல. ரெய்னா ஆரம்ப முதலே சிறப்பாக அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார்.




302 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிசார்பாக சிறப்பான ஆரம்பத்தை நேற்றைய போட்டியிலும் டில்சான் - தரங்க ஜோடி வழங்கியிருந்தது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டில்சான் 123 ஓட்டங்களைக் குவித்து அடுத்தடுத்து 2 சதங்களைப் பூர்த்தி செய்தார். தரங்க 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் டில்சானின் அதிரடி தொடர்ந்தது.



சங்ககார, மஹேல ஆகியோர் சராசரியான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை சற்றுத் தடுமாறியது.




டில்சானின் ஆட்டமிழப்போடு இலஙகை அணியின் வெற்றி கேள்விக்குறியாய் நிற்க இலங்கை ரசிகர்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே நம்பிக்கை Anjelo Methews .எல்லோருடைய நம்பிக்கையையும் வீணடிக்காமல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி போட்டியை வெற்றியோடு நிறைவு செய்தார் Methews. உண்மையில் இலங்கை கிரிக்கட் வரலாற்றில் நான் கண்ட தலை சிறந்த அற்புதமான சகலதுறை வீரர் இவர். நுட்பமான பந்துவீச்சு, சிறந்த களத்தடுப்பு, நிதானமான துடுப்பாட்டம் இவைதான் Methews இன் அழகு.

இலங்கை அணியின் அண்மைக்கால போட்டிகளைப் பார்த்தால் டில்சான் அதிரடியாக ஆரம்பித்துவைப்பதும் அதை Methews வெற்றியாக முடித்துவைப்பதும்தான் நிகழ்கிறது.





நேற்றைய போட்டியில் 49.1 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி வெற்றியீட்டியது.



எது எப்படியோ... அண்மைய போட்டிகளை அவதானிக்கும் போது இலங்கையின் துடுப்பாட்டம் திருப்திகரமாக இருக்கிறது. ஆனால் மஹெல, ஜயசூரிய, கபுகெதர போன்றோர் form இற்கு வந்தால் இலங்கையின் துடுப்பாட்டம் இன்னும் பலம் பெறும்.




பந்துவீச்சினைப் பொறுத்தவரை அனுபவமான பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சற்றுத் தடுமாறினாலும் இளம் வீரர்களின் பங்களிப்பும் ஓரளவு திருப்தியாகவுள்ளது.

லசித் மலிங்கவை அணியில் இணைத்துக் கொண்டால் பந்துவீச்சும் பலம் பெறும். (மலிங்கவை அணியில் இணைத்துக் கொள்ளாமல் இருக்கும் மர்மம்தான் என்னவோ?)




நேற்றைய போட்டியில் இலங்கை அணி சார்பாக இரு வீரர்கள் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்கள். 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றி போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் விருது வென்ற சுராஜ் ரன்டீவ் (முன்னர் சுராஜ் முஹம்மட்) சிறப்பான அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.



இலங்கை அணியினரின் களத்தடுப்பு மோசமாகவுள்ளது. ஓரிரு வீரர்களைத் தவிர மற்றவர்கள் சொதப்பிவிடுகிறார்கள். அவற்றையும் திருத்திக்கொண்டால் மூன்றாவது ஒரு நாள் போட்டியும் எம்வசமே.




நம்பிக்கையோடு காத்திருப்போம்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சங்கக்கார இலங்கை கிரிக்கட் அணியின் மிகச் சிறந்த தலைவர்????

இலங்கை இந்திய அனிகளுக்கிடையில் நேற்று (15-12-2009) இடம் பெற்ற விறுவிறுப்பான போட்டியை இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் மட்டுமல்ல உலக கிரிக்கட் ரசிகர்கள் கூட ஒரு போதும் மறந்திடமாட்டார்கள். அவுஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம் பெற்ற உலக சாதனை கிரிக்கட் போட்டிக்குப் பின்னர் ரசிகர்களுக்கு கிடைத்த மிகவும் சுவாரஸ்யமான போட்டி என்றால் அது நேற்றைய போட்டிதான்.




நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சங்ககாரவின் வேண்டுகோளுக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தடிய இந்திய அணி 50 ஓவர்களில் 414 என்ற மிகப் பிரமாண்டமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டது. சேவாக்கின் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கையை இலகுவாகப் பெற முடிந்த்து.

415 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தை தரன்க - டில்சான் ஜோடி பெற்றுக்கொடுத்தது.


தொடர்ந்து களமிறங்கிய சங்ககார தனது முழு வீச்சினாலான அதிரடியை டில்சானுடன் இணைந்து வழங்க இந்திய அணிக்கு தலைவலி தொடங்கியது. துடுப்பாட்ட வீரர்களுக்கான Power Play இன் போது சங்ககார ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து போட்டியின் போக்கு மாறியது. தொடர்ந்து மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாட வந்த சனத், மஹெல ஆகியோரின் பொறுப்பற்ற ஆட்டத்தின் காரணமாக இறுதியில் இலங்கை அணியினர் 3 ஓட்டங்களால் தோல்வியுற்றனர்.




டில்சானின் அதிரடி துடுப்பாட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை படு பயங்கரமாகவே இருந்திருக்கும் இந்திய அணிக்கு. இறுதிவரை ரசிகர்களை கதிரையின் நுனியிலேயே இருத்திய இந்தப் போட்டியின் முடிவு இலங்கை ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தைத்தான் தந்தது. இவ்வளவு பெரிய இலக்கை துரத்தி செல்லும் ஆற்றல் இலங்கை அணிக்கு உள்ளது என்பதையிட்டு இலங்கை ரசிகர்கள் திருப்தி கொள்ளலாம்.




எது எவ்வாறாயினும் இலங்கை அணியின் தலைவரின் போக்குப் பற்றியும் அவரது தலைமைத்துவத்தின் இருப்புப் பற்றியும் தற்போது எதிர்ப்புகள் புகைய ஆரம்பித்துள்ளன. இந்தப் போட்டியில் அவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தமை மட்டுமல்ல இந்தியாவுடனான் 2வது 20-20 போட்டியின் போது முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்குக் காரணமாகவிருந்த சனத் ஜயசூரியவிற்கு ஒரு ஓவர் தன்னும் கொடுக்காமல் விட்டது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் இலங்கை அணி பரிதாபமாகத் தோற்றது அனைவரும் அறிந்ததே.




பொதுவாக சங்கக்கார சர்வாதிகார தலைமைத்துவத்தைத்தான் மேற்கொள்கின்றார்.

அணி வீரர்களுடன் சகஜமாகப் பழகுவதில்லை, பந்துவீச்சாளர்கள் தவறுவிட்டால் அவ்விடத்திலேயே கத்திப் பேசுவது, மேலும் எதிரணி வீரர்களுடன் முரண்பட்டுக் கொள்ளல், வாக்குவாதத்திலீடுபடல் மட்டுமல்ல மூத்த வீரர்களிடம் ஆலோசனைகளைக் கூட கேற்பதில்லை. இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த அர்ஜுன ரணத்துங்க கூட சக வீரர்களுடன் கலந்தாலோசித்து களத்தடுப்பு வியூகமமைத்தல், பந்து வீச்சு மாற்றம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் போது சங்கக்காரவிற்கு சக வீரர்களைக் கலந்தாலோசிப்பதில் என்ன பிரச்சினை? சாதரண வீரராக, அணியின் உபதலைவராக இருந்தபோது இருந்த அந்த பண்பட்ட சங்கக்கார இப்பொழுது எங்கே?? தலைமைப் பதவி சங்காவின் கண்ணை மறைத்துவிட்டதா???




சிறந்த கிரிக்கட் உணர்வை வெளிப்படுத்திய அணி (Sprit of Cricket) விருதினை தொடர்ச்சியாக 2 தடவை வென்று வந்த இலங்கை அணி சங்கக்காரவின் தலைமைத்துவத்தின் பின்னர் அதை இழந்துவிட்டது. பொதுவாக இலங்கை கிரிக்கட் அணி ஆரம்பப் போட்டிகளில் தட்டுத் தடுமாறி வெற்றியீட்டிய போதும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விழையாடி கிண்ணத்தைச் சுவீகரிப்பது வழக்கம். ஆனால் 20 - 20 உலகக் கிண்ணப் போட்டி தொடக்கம் அதாவது சங்கக்காரவின் தலைமைத்துவத்தின் பின் இந்த நிலைமை மாறிவிட்டது. ஆரம்பப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும் இறுதிப் போட்டிகளில் சொதப்பிவிடுவதே இலங்கை அணியின் வாடிகையாகிவிட்டது. இதற்குக் காரணம் தலைவர் சங்கக்கார சக வீரர்களை அரவணைத்துச் செல்லாமையும் மூத்த அனுபவம் வாய்ந்த வீரர்களின் ஆலோசனையைப் பெறாமையுமேயாகும்.




ஒரு துடுப்பாட்ட வீரராக, ஒரு சாதாரண வீரராக சங்கக்கார சிறந்த நுட்பங்களை கொண்டவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் ஒரு தலைவராக சங்கக்கார இன்னும் பண்பட வேண்டியிருக்கிறது. சங்கக்காரவின் இந்தப் போக்கினால் இலங்கை அணியினால் ஒரு கிண்ணத்தைக் கூட வெல்ல முடியாத நிலை ஏற்படும்.



இந்தியாவுடனான இந்த சுற்றுத்தொடரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கட் நிர்வாகம் அடுத்த தலைமைத்துவத்தை பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.



இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தும் காத்திருப்போம்.



                                                              ***************

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS