RSS

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார் 

“இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். 

அந்தத் தந்தை சொன்னார். 
“நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” 
அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

”ஒரு நாள் மதிய வேளையில் நானும் என் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து என்னிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”


எனக்கு என் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்கவே தயக்கமாக இருந்தாலும்  அவர்களிடம் கேட்டுவைப்பதில் தவறில்லை என்று எண்ணினேன். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டேன்.

“என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?”

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக என்னிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த எனக்கு மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.


பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு பந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும். 

ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச;  ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான்.

முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.

மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட எனது கண்களில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்  போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர்.“அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது.” 
என்று கண்ணீர் மல்க,விம்மிய குரலில் சொல்லி முடித்தார் அந்தத் தந்தை

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.


இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம்  முயற்சிப்போமா?

** சகோதரர் ஒருவர் தனக்கு வந்த மின்னஞ்சல் என்று சொல்லி அவரது ஃபேஸ்புக் குறிப்பில் இட்டதை நான் படித்த போது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது,மனதை உருக்கிவிட்டது. அதை உங்களோடும் பகிர்ந்திருக்கிறேன்.
நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்...?






Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2011 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி கிரிக்கட் அணி

2011 உலகக்கிண்ணத்துக்கான 15வர் கொண்ட இறுதி இலங்கை கிரிக்கட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அணியை அறிவிப்பதற்கான ICC இன் காலக் கெடு இம்மாதம் 19ம் திகதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னதாகவே இலங்கை இறுதி அணி அறிவிக்கப்பட்டிருகின்றது. இதன்படி இதுவரையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளே தமது இறுதி அணியை அறிவித்துள்ளன.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அனுபவம் + இளமை கலந்த அணியே தெரிவு செய்யப்பட்டிருந்தாலும். சில தெரிவுகள் எனக்கு ஏமாற்றமளிக்கின்றன.

நான் எதிர்பார்த்த 15வர் கொண்ட அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது தவிர நான் எதிர்பார்த்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளமை திருப்தியே.

நான் எதிர்பார்த்தவர்களில்
தினேஸ் சந்திமாலுக்குப் பதிலாக திலான் சமரவீர
 சுராஜ் ரண்டீவிற்குப் பதிலாக ரங்கன ஹெரத்.

1.குமார் சங்ககார(தலைவர்) 2.திலகரத்ன டில்சான் 3.உபுல் தரங்க 4.திலான் சமரவீர 5.மஹெல ஜயவர்தன (உப தலைவர்)6.டில்ஹார ஃபெர்னாண்டோ 7.சாமர சில்வா  8.சாமர கபுகெதர 9.ஏஞ்சலோ மெத்யூஸ்
10.திசர பெரேரா 11.முத்தைய்யா முரளீதரன்  12.ரங்கன ஹெரத் 
13.லசித் மலிங்க 14.அஜந்த மெண்டிஸ் 15.நுவன் குலசேகர

துடுப்பாட்ட வீரர்களாக.
குமார் சங்ககார,திலகரத்ன டில்சான்,உபுல் தரங்க,திலான் சமரவீர மஹெல ஜயவர்தன (உப தலைவர்),சாமர சில்வா ,சாமர கபுகெதர ,

சகலதுறை வீரர்கள்:
ஏஞ்சலோ மெத்யூஸ்,திசர பெரேரா

வேகப்பந்துவீச்சாளர்கள்:
நுவன் குலசேகர,டில்ஹார ஃபெர்னாண்டோ,லசித் மலிங்க

சுழல் பந்துவீச்சாளர்கள்:
அஜந்த மெண்டிஸ்,ரங்கன ஹெரத், முத்தைய்யா முரளீதரன்


இதன்படி அண்மைக்காலமாக அணி தொடர்பாக நிலவி வந்த குழப்பங்கள், கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.

சனத் ஜயசூரிய,சமிந்தா வாஸ் ஆகிய மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா…? சனத் தனது செல்வாக்கு ,அரசியலைப் பயன்படுத்தி அணிக்குள் வருவாரா போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டன.

இதன் மூலம் இறுதிப் 15வர் தேர்வில் அரசியல்தலையீடோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ இடம்பெறவில்லை என நம்பலாம்.

ஆனாலும் சுராஜ் ரண்டீவிற்கு இடம் கிடைக்காமை எனக்கு ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது. அதற்காக தெரிவுக் குழு தலைவர் அரவிந்த டீ சில்வா சொல்லும் காரணம் ஏற்புடையது என்றாலும் மெண்டிசை விட ரண்டிவை தெரிவு செய்திருக்கலாம் என்பது எனது வாதம்.

டினேஸ் சந்திமாலின் வெளியேற்றமும் கவலை அளிக்கிறது என்றாலும் நான் எதிர்பார்த்ததே… கடந்த காலங்களில் உலகக்கிண்ண இறுதி அணிக்கு வருவார்கள் என்ற சங்கக்கார உட்பட பலர் நம்பிக்கையுடன் கூறிவந்த இருவர் டினேஸ் சந்திமால், ஜீவன் மெண்டிஸ் இவ்விருவரும் அணியில் இல்லாதது கவலையே.

அணித்  தெரிவு தொடர்பில் தெரிவுக் குழு தலைவர் அரவிந்த டீ சில்வாவின் கருத்தின் சுருக்கம்.

சனத் மற்றும் வாஸ் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் தொடர்பில்:

புதிய அணியை தெரிவு செய்யும் போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எமது நாட்டின் 20 மில்லியன் மக்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தேர்வு செய்வதே எங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த ஒரு காரணத்தினாலேயே சனத் மற்றும் வாசை தேர்வு செய்யாமல் விட்டோம்.

உலகக்கிண்ணத்தின் பின் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெறக் காத்திருக்கும் இந்த சிரேஸ்ட்ட வீரர்களை அணிக்கு தேர்வு செய்யமுடியாமல் போனது எங்கள் தெரிவுக் குழுவுக்கும் மிகுந்த கவலையும் வேதனையுமே…
இந்த மூத்த வீரர்களின் சேவை கடந்த காலங்களில் அளப்பரியது. அவர்களி அனுபவம் மற்றும் சேவையை எதிர்காலத்திலும் சிறிலங்கா கிரிக்கட் வேண்டி நிற்கிறது.

அவர்கள் தொடர்ந்தும் விழையாட விரும்பினால் அதையும் நாங்கள் வரவேற்கிறோம்.

சனத், வாஸ், சுராஜ் ரண்டிவ் இம்மூவரையும் பற்றிதான் நான் இப்போது கவலைப்படுகிறேன்.

சுராஜ் ரண்டிவின் நீக்கம் தொடர்பில்:
சுராஜ் ரண்டீவில் எந்தப் பிரச்சினையுமில்லை ஆனால், அவரை அணியில் இணைத்துக் கொள்ள முடியாத நிலை. காரணம் ஏற்கனவே அணியில் முரளி மற்றும் மெண்டிஸ் ஆகியோர் ஓஃப் ஸ்பின் வீசுபவர்களாக இருப்பதால் லெக் ஸ்பின் மற்றும் வித்தியாசமான மாற்றங்களோடு பந்துவீசும் வீரர் தேவைப்பட்டார், அந்த வகையில் எமக்குள்ள சிறந்த வீரர் ரங்கன ஹெரத்தான் எனவே அவரை தேர்வு செய்தோம். 

டில்ஹார ஃபெர்னாண்டோ லசித் மலிங்கவிற்கு பின்புலமாக பக்க பலமாக பந்துவீசக்கூடிய வீரர் எனவே அவரைத் தேர்வு செய்தோம்.

சமிந்தவாசுக்குப் போட்டியாக இருப்பவர் நுவன் குலசேகர.
வாஸ் புதிய பந்தினை லாவகமாகக் கையாளக்கூடியவர். குலசேகரவும் புதிய பந்தினை சிறப்பாக கையாள்வார்.
ஆனால் நுவன் குலசேகரவின் கடந்த ஒன்றரை வருடப் பெறுபேறுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் குலசேகரவிற்கு முன்னுரிமை அளித்தோம். ஒரு வேளை குலசேகர காயத்திற்குள்ளானால் அந்த இடத்தினை வாசினைக் கொண்டு நிரப்புவோம்.

மஹெல ஜயவர்தனவை 3வது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பயன்படுத்த எண்ணியுள்ளோம். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தரங்க மற்றும் டில்சான் இருவரில் யாராவது ஒருவர் சிறப்பாக செயற்படாதவிடத்து அந்த இடத்தை மஹெலவைக் கொண்டு நிரப்புவோம்.  

ICC காலக்கெடு இம்மாதம் 19ம் திகதிவரை இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே அணியினை அறிவிக்கக் காரணம்.. இறுதி 15வரைத் தேர்வு செய்து நாளை ஆரம்பமாகும் மாகாணங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே.

ஒப்பீட்டளவில் சிறந்த அணி. சில ஏமாற்றங்களைத் தவிர்த்து அணி திருப்தி அளிக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் உட்சபட்ச திறமைகளை வெளிப்படுத்தி எம் நாட்டுக்கு மீண்டும் ஒரு உலகக்கிண்ணத்தை கொண்டுவர வேண்டும் என்று வாழ்துகிறேன்.

எமது அணியினைப் பலப்படுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை எமது நாடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

** இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை போட்டிகளைப் பாதிக்கலாம் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகின்றது.

நம்பிக்கையோடு காத்திருப்போம். இலங்கை அணியின் வெற்றிக்காய் பிரார்த்திப்போம்.





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக்கு அனுப்பினார்கள்?

அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்திட்டிருந்த காலமது.
பொதுவாக ரஸ்யாவின் அரசவிடையங்கள் யாவும் மிகவும் ரகசியமாகப் பேணப்படும். ஆனால் அமெரிக்காவின் விடையங்கள் பகிரங்கமானது அல்ல எனினும் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் (அப்போது சோவியத் ரஸ்யா) யார் முதலாவதாக விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்புவது என்ற கடும் போட்டி நிலவியது.

இதில் முந்திக்கொண்ட ரஸ்யர்கள் முதன் முதலாக  1957 ஒக்டோபர் 4 ல் லைக்கா என்ற பெட்டை நாயை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்டனர்.

இங்கே ரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக்கு அனுப்பினார்கள் என்று ஆராய்ந்தால் பரீட்சார்த்த முயற்சி என்பதையும் தாண்டி ஒரு சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது.

சோவியத் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் நிலவி வந்த விண்வெளி ஆராச்சியில் முந்திக்கொண்ட சோவியத் ரஸ்யா அமெரிக்காவுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்பியது.

“எங்கள் பெட்டை நாய்கள்கூட வெண்வெளிக்கு செல்கின்றன. ஆனால் அமெரிக்கர்களால் இன்னும் விண்வெளியை அடையமுடியவில்லை”  

என்பதுதான் அந்தச் செய்தி. இதற்காகவே வேண்டுமென்றே சோவியத் ரஸ்யா நாய் ஒன்றை அதுவும் பெட்டை நாயொன்றை முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்பியது

இதன் பின்னர் கடுமையான ஆத்திரம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எஃப்.கென்னடி தங்கள் விஞ்சானிகள் அமைச்சர்கள் உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவர் ரஸ்யாவின் இந்த செயற்பாட்டினால் தாம் அவமானப்பட்டதாகவும். தாமும் உடனடியாக விண்வெளி ஓடமொன்றை விண்ணுக்கு  அனுப்பவேண்டுமென்று ஆக்ரோசமாகப் பேசினார்.


இன்னொரு தகவல்

சந்திரனுக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சிக் குறிப்புகளை குறிப்பெடுத்துக்கொள்ள அங்கே சாதாரண போல் பொயிண்ட் பேனாவினைப் பயன்படுத்த முடியாது. போல் பொயிண்ட் பேனாவானது புவியீர்ப்பின் அடிப்படையில் இயங்குவது.. ஆனால் சந்திரனில் புவியீர்ப்பு விசை மிகக் குறைவு எனவே இந்தப் பேனாக்களைப் பயன்படுத்த முடியாது.

இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பதென்று ஆராய ஒரு கூட்டத்தினை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஏற்பாடு செய்தனர். இதில் பல நிபுணர்கள் கலந்து தங்கள் தீர்வுகளைத் தெரிவித்தனர், இவற்றுள் ஒரு மெக்கனிக்கல் எஞ்சினியர் ஒருவரின் தீர்வே ஒப்பீட்டளவில் செலவு குறைந்ததும் சாத்தியமானதாகவும் இருந்தது.

அவரது தீர்வு மோட்டர் மூலம் இயங்கக்கூடிய பேனாவை உருவாக்குவது என்றதாக அமைந்திருந்தது. அதற்கு செலவு அதிகம் என்றாலும் ஒப்பீட்டளவில் ஏனையவற்றைவிட செலவு குறைவாகவே இருந்தது. எனவே அதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்; இது தமது மாபெரும் கண்டுபிடிப்பென்றும் இதன் மூலம் சந்திரனில் குறிப்பெடுப்பதற்கு இருந்த சிக்கலை தாம் தீர்த்துவிட்டதாகவும் சர்வதேச அரங்கில் மார்தட்டிக் கொண்டனர்.

இதற்கு பதிலலளித்த சோவியத் ரஸ்ய ஆராய்ச்சியாளர்கள்..
மாபெரும் பத்திரிகையாளர் மாநாட்டை ஏற்பாடு செய்து..

இந்தப் பிரச்சனைக்கு நாம் எப்போதோ தீர்வு கண்டுவிட்டோம், பேனாக்களை சந்திரனில் பயன்படுத்த முடியாது என்பது உண்மையே ஆனால் அங்கு சாதாரண பென்சில்களைப் பயன்படுத்துவதில் எந்த சிக்கலுமில்லை. நாங்கள் பென்சில்களையே பயன்படுத்துகிறோம்…
இதற்குப் போய் பல லட்சங்களை செலவிட்ட அமெரிக்கர்களின் முட்டாள்தனத்தை என்னென்பது…?”

என்று நக்கலாக ஒரு அறிக்கைவிட்டனர்.

இதன் போது உடைந்த அமெரிக்கர்களின் மூக்கு எப்போது மீண்டும் ஒட்டிகொண்டது என்பது எனக்குத் தெரியவே தெரியாது.







Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS