தெனகமகே ப்ரபோத் மஹெல டீ சில்வா ஜயவர்த்தன என்ற
முழுப்பெயரைக் கொண்ட மஹெல ஜயவர்த்தன (மைய்யா)1977 மே 27 ல் கொழும்பில் பிறந்தவர்.
இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவர்.வலது
கை துடுப்பாட்ட வீரர்
இந்த மகத்தான வீரன் தனது
17 வருட டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் அடைந்த அடைவுகளும் பெற்றுக்கொண்ட சாதனைகளும் அளப்பரியவை.
சிறந்த துடுப்பாட்ட வீரர், கனவான், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த ஸ்லிப் ஃபீல்டர். கருத்துக்களை நேரடியாகப் பேசும் நேர்மையானவர். சிறந்த அணித் தலைவர். நுட்பங்களுடன் கூடிய சிறந்த கிரிக்கட் அறிவினைக் கொண்டவர். சிறந்த Team Player. இலங்கை கிரிக்கட்டிற்காகவும் அதன்
வெற்றிக்காகவும் தனது
அனைத்தையும் கொடுத்தவர்.மனித நேயமிக்கவர்…. இப்படி மஹெலவின் பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மஹெல தனது
லாவகமான மற்றும் ஸ்டைலான துடுப்பாட்டத்தின் காரணமாக இலங்கையிலும் சர்வதேச ரீதியில் பலலட்சக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டவர்.அவரது cover-drive, flick, cuts & late cut என்பன அற்புதமானவை.
இலங்கை கிரிக்கட் மஹெல சங்காவின் தலைமைத்துவத்தினை அடுத்து தலைமைத்துவ இடைவெளியோடு தடுமாறியபோது இலங்கை அணிக்கு ஒரு ஊன்றுகோலாக அணித்தலைமையை மீண்டும் ஏற்று அணியை வழிநடத்தியமை மஹெலவின் அணி மீதான அர்ப்பணிப்புக் சான்று. பொதுவாக பல முன்னாள் தலைவர்கள் தலைமைப் பதவியிலிருந்து விலகியபின் அணியில் குறைந்த ஈடுப்பாட்டுடன் விளையாடுவதை பலதடவைகளில் அவதானித்திருப்போம். ஆனால் மஹெல
அவ்வாறல்லாமல் தலைமைத்துவத்திலிருந்து விலகிய பின்னரும் அணியின் வெற்றிக்காக புதிய தலைவர்களோடு அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்பட்டமை, தனது அனுபவம் நுட்பம் என்பவற்றை அவர்களோடு பகிர்ந்து அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடியமை ஈகோவினையும் தாண்டிய ஒரு ஈடுபாடு, ஒரு அர்ப்பணிப்பு மஹெலவுக்கு அணி மீதிருந்தமையை பலராலும் உணர்ந்துகொள்ள முடியும்.
நான் அடிக்கடி சொல்வதுபோல் அர்ஜுனவின் தலைமைக்குப் பிறகு இலங்கை அணிக்குக் கிடைத்த மிக அற்புதமான அர்ப்பணிப்பான தலைவர் மஹெல என்றால் அது மிகையாகாது.
இன்று வாரத்தின் முதல் நாள்
திங்கட் கிழமை வேலை நாள்
என்றிருந்தும் மைதானம் நிறைந்த ரசிகர்களின் வருகை மஹெலவுக்கு சொல்லியிருக்கும் அவர்
எப்படிப்பட்ட சேவையை இலங்கைக் கிரிக்கட்டுக்கு வழங்கியிருக்கின்றார். அவரை எந்தளவுக்கு மக்கள் நேசித்தார்கள் என்று.
ஒரு அணியாக இலங்கை வீரர்கள் இந்தத் தொடரை வென்று மஹெலவுக்கு சமர்ப்பித்திருந்தனர். அரங்கு நிறைந்த ரசிகர்கள் மைதானத்திலும் ஏனையவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் தமது
கெளரவத்தினை நமது
சாதனை வீரனுக்கு கொடுத்திருந்தனர்.
இதைவிட எப்படி ஒரு மாவீரனுக்கு அணியினாலும் ரசிகர்களாளும் கெளரவத்தினைக்கொடுத்திட முடியும்??
இந்த வெற்றி, ரசிகர்களின் அன்பு நிச்சயம் மஹெலவுக்கு பிரியாவிடையின் வலியை இயலுமானவரை குறைத்திருக்கும்.
மஹெலவின் குடும்ப மற்றும் கிரிக்கட் வாழ்க்கை.
இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான மஹெல
தனது கிரிக்கட்டின் ஆரம்ப காலகட்டத்தில் தனது தம்பியினை இழந்தார். மஹெலவின் தம்பி தனது 16வது வயதில் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்பு மஹெலவின் தனிப்பட்ட மற்றும் கிரிக்கட் வாழ்கையைப் பெரிதும் பாதித்தது. இந்த இழப்பு; புற்றுநோய்க்கு எதிராக போராட மஹெலவைத் தூண்டியது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட HOPE
cancer project ற்கு தனது
அதியுச்ச பங்களிப்பினை வழங்கிவருகிறார். அத்தோடு தனது சகோதரனின் நினைவாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 750 படுக்கைகளைக் கொண்ட புற்று நோய் பிரிவினை உருவாக்கிவருகிறார். இதற்கு ஏனைய இலங்கை கிரிக்கட் வீரர்களும் பங்களிப்பு செய்துவருகின்றனர்.
ஒரு குழந்தையின் தந்தையான மஹெலவுக்கு அவரது மனைவி க்ரிஸ்டினா மற்றும் மஹெலவின் பெற்றோர் ஆரம்பம் தொட்டே பக்கபலமாக இருந்து வருகின்றமை உலகறிந்தது.
பல கிரிக்கட் ஜாம்பவாங்களை எமக்குத் தந்த நாளந்தாக் கல்லூரியின் பழைய
மாணவர்.
1997 ஆகஸ்ட்டில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் அறிமுகத்தை மஹெல மேற்கொண்டார்.
இவர் இலங்கை அணியின் 69வது டெஸ்ட் கிரிக்கட் வீரராக தனது அறிமுகத்தினை மேற்கொண்டார்.
மகெல அறிமுகமான இப்போட்டியில்தான் இலங்கை அணி டெஸ்
போட்டிகளில் ஒரு இனிங்சில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களான 952/6 என்ற உலகசாதனையை நிகழ்த்தியிருந்தது. இப்போட்டியில் மகெல
66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மஹெலவின் டெஸ்ட் சாதனைகள் :
இதுவரையில் 149 டெஸ்ட் போட்டிகளில் 250 இனிங்ஸ்களில் விளையாடியுள்ள மஹெல 34 சதங்கள் 50 அரைச் சதங்கள் அடங்களாக 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் பெற்றிருக்கின்றார்.
இவரால் தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெறப்பட்ட 374 என்ற ஓட்டம்தான் இலங்கை வீரர் ஒருவரால் டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்… இதன் மூலம் 300 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது இலங்கையின் டெஸ்ட் அணித் தலைவர் என்ற பெருமையையும் ஒரு இனிங்சில் ஒரு வீரரால் பெறப்பட்ட அதுகூடிய ஓட்ட எண்ணிக்கை வரிசையில் நான்காமிடத்தினையும்.ஒரு வலது
கைத் துடுப்பாட்ட வீரர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம் எனும் பெருமைகளையும் பெற்றுக்கொண்டார்.
2006 ல் அப்போது அணித் தலைவராக இருந்த மார்வன் அதபத்து காயம் காரணமாக
அணியிலிருந்து விலக
அவரிடமிருந்து தலைமைப்பதவியைப் பொறுப்பெடுத்த மஹெல
தனது தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தினை இங்கிலாந்தில் எதிர்கொண்டார். இச்சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரினை 1-1 என்று சமப்படுத்தியதோடு ஒருநாள் தொடரை 5-0 என்று இங்கிலாந்து அணியை Whitewash செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
2009ல் பாக்கிஸ்தான் அணிக்கெதிராக பாக்கிஸ்தானில் வைத்துப்பெறப்பட்ட டெஸ்ட் சதத்தின் மூலமாக டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த வீரர் என்ற
பெருமைக்கு உரித்துடையவரானார்.
டெஸ்ட் போட்டிகளில் மூன்று தொடர் நாயகன் விருதினையும் 9 ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருக்கிறார். மஹெல பெற்றுக்கொண்ட 3 தொடர் நாயகன் விருதும் இங்கிலாந்து அணிக்கெதிராகவே பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் தென்னாபிரிக்க மண்ணில் மாத்திரமே மஹெல ஒரு டெஸ்ட் சதத்தையேனும் பெற்றிருக்கவில்லை.
இவ்வருடம் காலியில் நடைபெற்ற பாக்கிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்டின் 2வது இனிங்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியதே மஹெல டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய முதலாவதும் இறுதியுமான சந்தர்ப்பமாகும்.
தான் பெற்றுக்கொண்ட 34 டெஸ்ட் சதங்களில் 5 சதங்கள் 2007 இல் பெறப்பட்டது. இதுவே மஹெலவினால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய டெஸ்ட் சதங்களாகும்.
148 டெஸ்ட் போட்டிகளில் 22 இனிங்ஸ்களில் பந்துவீசியுள்ள மஹெல
310 ஓட்டங்களுக்கு மொத்தமாக 6 விக்கட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டைச் சதங்களைக் கடந்திருக்கின்றார். இதில் ஒரு முச்சதமும் அடங்கும்.
1997ல் இந்தியாவுக்கு எதிராக 7ம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடியமையே மஹெல
விளையாடிய கடைநிலையாகும். இதுவே மஹெல
7ம் இலக்கத்தில் விளையாடிய ஒரேயொரு சந்தர்ப்பம்.
15 தடவைகள் மஹெல
ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருக்கின்றார்.
38 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய மஹெல 18 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார். வெற்றி சதவீதம் 47.36 ஆகும்.
அணித்தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் 59.11 என்ற சராசரியில் 3665 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதி 14 சதங்களும் அடங்கும்.
உலகளாவிய ரீதியில் 50 மைதானங்களில் மஹெல
டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கின்றார்.
மஹெல 60 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கின்றார்.
முரலியின் பந்துவீச்சில் மஹெல மொத்தமா 77 பிடிகளை எடுத்துள்ளார். இதுவே குறித்த ஒரு பந்துவீச்சாளருக்கு குறித்த ஒருவீரர் எடுத்த அதிகூடிய பிடிகளாகும்.
டெஸ்ட் போட்டிகளில் 205 பிடிகளை எடுத்ததன் மூலம் அதிக
பிடிகளை எடுத்தவர்கள் வரிசையில் மஹெல
2வது இடத்திலுள்ளார் (ட்ராவிட் 210)
624 என்ற உலகசாதனை இணைப்பாட்டத்தை குமார் சங்கக்காரவோடு இணைந்து நிகழ்த்தியிருந்தார். இதுவே எந்தவொரு விக்கட்டுக்காகவும் ஒரு இனிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும்.
2009இல் மஹெலவால் பெறப்பட்ட 1194 ஓட்டங்களே குறித்த ஒரு ஆண்டில் மஹெலவால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.
இங்கிலாந்து அணிக்கெதிராக மொத்தமாகப் பெறப்பட்ட 2212 ஓட்டங்களே மஹெலவால் ஒரு அணிக்கெதிராக பெறப்பட்ட மொத்த அதிகூடிய ஓட்டங்களாகும்.
இலங்கைக்கு வெளியே 61 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள மஹெல 39.71 சராசரியோடு 4647 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார்.
அதிக
தடவைகள் நான்காம் இலக்க வீரராகக் களமிறங்கிய மஹெல
9451 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். இது நான்காம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட
எண்ணிக்கைகளில் இரண்டாவதாகும்.(முதலாவதிடம் சச்சின்)
மஹெல மற்றும் மார்வன் அதபத்து ஆகியோர் மாத்திரமே டெஸ்ட் போட்டிகளில் Retired Out முறை மூலம் ஆட்டமிழந்த (வெளியேறிய) இருவீரர்களாவர். 2001ம் ஆண்டு பங்களதேஸ் அணிக்கெதிராக SSC மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போதே
அதபத்து 201 ஓட்டங்களைப் பெற்ற போதும் மஹெல
150 ஓட்டங்களைப் பெற்றபோதும் அணித்தலைவர் சனத் ஜயசூரியவினால் பெவிலியனுக்கு மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
மஹெல பெற்றுக்கொண்ட 34 சதங்களில் 23 உள்நாட்டில் பெறப்பட்டவை. 14 சதங்கள் மஹெல அணித் தலைவராக இருக்கும்போது பெற்றுக்கொண்டவை.
மஹெல பெற்றுக்கொண்ட விருதுகள்.
2006ம் ஆண்டில் ICC இனால் வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த அணித் தலைவர் விருதினை வெற்றிகொண்டார்.
2013 ஆண்டு ICC இன் sprite of cricket விருதினை வென்றிருந்தார்.
முன்னதாக தனது தலைமைத்துவத்தின் கீழ்
2007ம் ஆண்டு sprite of cricket விருதினை அணிக்குப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
2007ம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையினால் வழங்கப்படும்
Wisden Cricketer of the Year விருதினைப் பெற்றுக்கொண்டார்.
1994ம் ஆண்டு best
schoolboy cricketer award இல் இரண்டாமிடத்தினைப் பெற்றார்.
--------------------------------------------------------------------------------------
இப்படிப் பல சாதனைகளின் சொந்தக்காரராக இருந்தும் தலைக்கனம், தற்பெருமை, மேதாவித் தனம் எதுவுமே இல்லாத மனிதர். யாராலும் விரும்பப்படக் கூடிய அற்புத
மனிதர், மனிதநேசர். மஹெலவின் துடுப்பாட்ட ஸ்டைலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பது போல மஹெலவின் அந்தக் குழந்தைச் சிரிப்புக்கும் பல ரசிகர்கள் நிச்சயம் இருப்பார்கள். கிரிக்கட்டின் வாழ்நாள் ஹீரோக்களில் ஒருவர் மஹெல என்றால் அது மிகையாகாது.
மஹெலவின் ஓய்வு என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு மிகுந்த கவலைதான். இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் மஹெல தொடருவார் அவரது cover-drive, flick, cuts & late cuts என்பவற்றை ஒருநாள் போட்டிகளில் காணலாம் என்பதே இப்போதைக்கு எமக்கிருக்கும் ஆறுதல்.
மஹெலவின் ஓய்வு இலங்கைக் கிரிக்கட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோற்கும்போது கிடைத்த வலிகளை விட மஹெலவின்
ஓய்வு தந்த வலி அதிகம்.
மஹெலவின் எதிர்காலம், அவர்தம் குடும்ப வாழ்க்கை, அனைத்தும் மகிழ்சிகரமானதாகவும் அவரின்
எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமானதாகவும் அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
We miss you
Mayyaa!!!!!!!!!!
தகவல் மூலங்கள் : Wikipedia, Island Cricket, Cricinfo & WisdenIndia
0 comments:
கருத்துரையிடுக