RSS

இலங்கை கிரிக்கட் தந்த மற்றுமொரு கிரிக்கட் ஜாம்பவான் ”மஹெல”

தெனகமகே ப்ரபோத் மஹெல டீ சில்வா ஜயவர்த்தன என்ற முழுப்பெயரைக் கொண்ட மஹெல ஜயவர்த்தன (மைய்யா)1977 மே 27 ல் கொழும்பில் பிறந்தவர்.
இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவர்.வலது கை துடுப்பாட்ட வீரர்


இந்த மகத்தான வீரன் தனது 17 வருட டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் அடைந்த அடைவுகளும் பெற்றுக்கொண்ட சாதனைகளும் அளப்பரியவை.

 சிறந்த துடுப்பாட்ட வீரர், கனவான், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த ஸ்லிப் ஃபீல்டர். கருத்துக்களை நேரடியாகப் பேசும் நேர்மையானவர். சிறந்த அணித் தலைவர். நுட்பங்களுடன் கூடிய சிறந்த கிரிக்கட் அறிவினைக் கொண்டவர். சிறந்த Team Player. இலங்கை கிரிக்கட்டிற்காகவும் அதன் வெற்றிக்காகவும் தனது அனைத்தையும் கொடுத்தவர்.மனித நேயமிக்கவர்…. இப்படி மஹெலவின் பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மஹெல தனது லாவகமான மற்றும் ஸ்டைலான துடுப்பாட்டத்தின் காரணமாக இலங்கையிலும் சர்வதேச ரீதியில் பலலட்சக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டவர்.அவரது cover-drive,  flick, cuts & late cut என்பன அற்புதமானவை.

இலங்கை கிரிக்கட் மஹெல சங்காவின் தலைமைத்துவத்தினை அடுத்து தலைமைத்துவ இடைவெளியோடு தடுமாறியபோது இலங்கை அணிக்கு ஒரு  ஊன்றுகோலாக  அணித்தலைமையை மீண்டும் ஏற்று அணியை வழிநடத்தியமை மஹெலவின் அணி மீதான அர்ப்பணிப்புக் சான்று. பொதுவாக பல முன்னாள் தலைவர்கள் தலைமைப் பதவியிலிருந்து விலகியபின் அணியில் குறைந்த ஈடுப்பாட்டுடன் விளையாடுவதை பலதடவைகளில் அவதானித்திருப்போம். ஆனால் மஹெல அவ்வாறல்லாமல் தலைமைத்துவத்திலிருந்து விலகிய பின்னரும் அணியின் வெற்றிக்காக புதிய தலைவர்களோடு அர்ப்பணிப்புடன் இணைந்து  செயற்பட்டமை, தனது அனுபவம் நுட்பம் என்பவற்றை  அவர்களோடு பகிர்ந்து அணியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடியமை ஈகோவினையும் தாண்டிய ஒரு ஈடுபாடு, ஒரு அர்ப்பணிப்பு மஹெலவுக்கு அணி மீதிருந்தமையை பலராலும் உணர்ந்துகொள்ள முடியும்.

நான் அடிக்கடி சொல்வதுபோல் அர்ஜுனவின் தலைமைக்குப் பிறகு இலங்கை அணிக்குக் கிடைத்த மிக அற்புதமான அர்ப்பணிப்பான தலைவர் மஹெல என்றால் அது மிகையாகாது.

இன்று வாரத்தின் முதல் நாள் திங்கட் கிழமை வேலை நாள் என்றிருந்தும் மைதானம் நிறைந்த ரசிகர்களின் வருகை மஹெலவுக்கு சொல்லியிருக்கும் அவர் எப்படிப்பட்ட சேவையை இலங்கைக் கிரிக்கட்டுக்கு வழங்கியிருக்கின்றார். அவரை எந்தளவுக்கு மக்கள் நேசித்தார்கள் என்று.

ஒரு அணியாக இலங்கை வீரர்கள் இந்தத் தொடரை வென்று மஹெலவுக்கு சமர்ப்பித்திருந்தனர். அரங்கு நிறைந்த ரசிகர்கள் மைதானத்திலும் ஏனையவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் தமது கெளரவத்தினை நமது சாதனை வீரனுக்கு கொடுத்திருந்தனர்.
இதைவிட எப்படி ஒரு மாவீரனுக்கு அணியினாலும் ரசிகர்களாளும் கெளரவத்தினைக்கொடுத்திட முடியும்?? 
இந்த வெற்றி, ரசிகர்களின் அன்பு நிச்சயம் மஹெலவுக்கு பிரியாவிடையின் வலியை இயலுமானவரை குறைத்திருக்கும்.

மஹெலவின் குடும்ப மற்றும் கிரிக்கட் வாழ்க்கை.
இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான மஹெல தனது கிரிக்கட்டின் ஆரம்ப காலகட்டத்தில் தனது தம்பியினை இழந்தார்.  மஹெலவின் தம்பி தனது 16வது வயதில் மூளைப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்பு மஹெலவின் தனிப்பட்ட மற்றும் கிரிக்கட் வாழ்கையைப் பெரிதும் பாதித்தது. இந்த இழப்பு; புற்றுநோய்க்கு எதிராக போராட மஹெலவைத் தூண்டியது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட HOPE cancer project ற்கு தனது அதியுச்ச பங்களிப்பினை வழங்கிவருகிறார். அத்தோடு தனது சகோதரனின் நினைவாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 750 படுக்கைகளைக் கொண்ட புற்று நோய் பிரிவினை உருவாக்கிவருகிறார். இதற்கு ஏனைய இலங்கை கிரிக்கட் வீரர்களும் பங்களிப்பு செய்துவருகின்றனர்.

ஒரு குழந்தையின் தந்தையான மஹெலவுக்கு அவரது மனைவி க்ரிஸ்டினா மற்றும் மஹெலவின் பெற்றோர் ஆரம்பம் தொட்டே பக்கபலமாக இருந்து வருகின்றமை உலகறிந்தது.பல கிரிக்கட் ஜாம்பவாங்களை எமக்குத் தந்த நாளந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்.

1997 ஆகஸ்ட்டில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் அறிமுகத்தை மஹெல மேற்கொண்டார். 
இவர் இலங்கை அணியின் 69வது டெஸ்ட் கிரிக்கட் வீரராக தனது அறிமுகத்தினை மேற்கொண்டார்.

மகெல அறிமுகமான இப்போட்டியில்தான் இலங்கை அணி டெஸ் போட்டிகளில் ஒரு இனிங்சில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களான 952/6 என்ற உலகசாதனையை நிகழ்த்தியிருந்தது. இப்போட்டியில் மகெல 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மஹெலவின் டெஸ்ட் சாதனைகள் :

இதுவரையில் 149 டெஸ்ட் போட்டிகளில் 250 இனிங்ஸ்களில் விளையாடியுள்ள மஹெல 34 சதங்கள் 50 அரைச் சதங்கள் அடங்களாக 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் பெற்றிருக்கின்றார்.
 
இவரால் தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெறப்பட்ட 374 என்ற ஓட்டம்தான் இலங்கை வீரர் ஒருவரால் டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்… இதன் மூலம் 300 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது இலங்கையின் டெஸ்ட் அணித் தலைவர் என்ற பெருமையையும் ஒரு இனிங்சில் ஒரு வீரரால் பெறப்பட்ட அதுகூடிய ஓட்ட எண்ணிக்கை வரிசையில் நான்காமிடத்தினையும்.ஒரு வலது கைத் துடுப்பாட்ட வீரர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம் எனும் பெருமைகளையும் பெற்றுக்கொண்டார்.

2006 ல் அப்போது அணித் தலைவராக இருந்த மார்வன் அதபத்து காயம் காரணமாக  அணியிலிருந்து விலக அவரிடமிருந்து தலைமைப்பதவியைப் பொறுப்பெடுத்த மஹெல தனது தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தினை இங்கிலாந்தில் எதிர்கொண்டார். இச்சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரினை 1-1 என்று சமப்படுத்தியதோடு ஒருநாள் தொடரை 5-0 என்று இங்கிலாந்து அணியை Whitewash செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

2009ல் பாக்கிஸ்தான் அணிக்கெதிராக பாக்கிஸ்தானில் வைத்துப்பெறப்பட்ட டெஸ்ட் சதத்தின் மூலமாக டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த வீரர் என்ற பெருமைக்கு உரித்துடையவரானார்.

டெஸ்ட் போட்டிகளில் மூன்று தொடர் நாயகன் விருதினையும் 9 ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருக்கிறார். மஹெல பெற்றுக்கொண்ட 3 தொடர் நாயகன் விருதும் இங்கிலாந்து அணிக்கெதிராகவே பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் தென்னாபிரிக்க மண்ணில் மாத்திரமே மஹெல ஒரு டெஸ்ட் சதத்தையேனும் பெற்றிருக்கவில்லை.

இவ்வருடம் காலியில் நடைபெற்ற பாக்கிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்டின் 2வது இனிங்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியதே மஹெல டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய முதலாவதும் இறுதியுமான சந்தர்ப்பமாகும்.

தான் பெற்றுக்கொண்ட 34  டெஸ்ட் சதங்களில் 5 சதங்கள் 2007 இல் பெறப்பட்டது. இதுவே மஹெலவினால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய டெஸ்ட் சதங்களாகும்.

148 டெஸ்ட் போட்டிகளில் 22 இனிங்ஸ்களில் பந்துவீசியுள்ள மஹெல 310 ஓட்டங்களுக்கு மொத்தமாக 6 விக்கட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டைச் சதங்களைக் கடந்திருக்கின்றார். இதில் ஒரு முச்சதமும் அடங்கும்.

1997ல் இந்தியாவுக்கு எதிராக 7ம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடியமையே மஹெல விளையாடிய கடைநிலையாகும். இதுவே மஹெல 7ம் இலக்கத்தில் விளையாடிய ஒரேயொரு சந்தர்ப்பம்.

15 தடவைகள் மஹெல ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருக்கின்றார்.

38 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய மஹெல 18 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார். வெற்றி சதவீதம் 47.36 ஆகும்.

அணித்தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் 59.11 என்ற சராசரியில் 3665 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதி 14 சதங்களும் அடங்கும்.


உலகளாவிய ரீதியில் 50 மைதானங்களில் மஹெல டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கின்றார்.

மஹெல 60 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கின்றார்.

முரலியின் பந்துவீச்சில் மஹெல மொத்தமா 77 பிடிகளை எடுத்துள்ளார். இதுவே குறித்த ஒரு பந்துவீச்சாளருக்கு குறித்த ஒருவீரர் எடுத்த அதிகூடிய பிடிகளாகும்.

 டெஸ்ட் போட்டிகளில் 205 பிடிகளை எடுத்ததன் மூலம் அதிக பிடிகளை எடுத்தவர்கள் வரிசையில் மஹெல 2வது இடத்திலுள்ளார் (ட்ராவிட் 210)

624 என்ற உலகசாதனை இணைப்பாட்டத்தை குமார் சங்கக்காரவோடு இணைந்து நிகழ்த்தியிருந்தார். இதுவே எந்தவொரு விக்கட்டுக்காகவும் ஒரு இனிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும்.

2009இல் மஹெலவால் பெறப்பட்ட 1194 ஓட்டங்களே குறித்த ஒரு ஆண்டில் மஹெலவால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

இங்கிலாந்து அணிக்கெதிராக மொத்தமாகப் பெறப்பட்ட 2212 ஓட்டங்களே மஹெலவால் ஒரு அணிக்கெதிராக பெறப்பட்ட மொத்த அதிகூடிய ஓட்டங்களாகும்.

இலங்கைக்கு வெளியே 61 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள மஹெல 39.71 சராசரியோடு 4647 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார்.

 அதிக தடவைகள் நான்காம் இலக்க வீரராகக் களமிறங்கிய மஹெல 9451 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றார். இது நான்காம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கைகளில் இரண்டாவதாகும்.(முதலாவதிடம் சச்சின்)

மஹெல மற்றும் மார்வன் அதபத்து ஆகியோர் மாத்திரமே டெஸ்ட் போட்டிகளில் Retired Out  முறை மூலம் ஆட்டமிழந்த (வெளியேறிய) இருவீரர்களாவர். 2001ம் ஆண்டு பங்களதேஸ் அணிக்கெதிராக SSC மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போதே அதபத்து 201 ஓட்டங்களைப் பெற்ற போதும் மஹெல 150 ஓட்டங்களைப் பெற்றபோதும் அணித்தலைவர் சனத் ஜயசூரியவினால் பெவிலியனுக்கு மீள அழைக்கப்பட்டிருந்தனர்.

மஹெல பெற்றுக்கொண்ட 34 சதங்களில் 23 உள்நாட்டில் பெறப்பட்டவை. 14 சதங்கள் மஹெல அணித் தலைவராக இருக்கும்போது பெற்றுக்கொண்டவை.

மஹெல பெற்றுக்கொண்ட விருதுகள்.

2006ம் ஆண்டில் ICC இனால் வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த அணித் தலைவர் விருதினை வெற்றிகொண்டார்.

2013 ஆண்டு ICC இன் sprite of cricket விருதினை வென்றிருந்தார்.

முன்னதாக தனது தலைமைத்துவத்தின் கீழ் 2007ம் ஆண்டு sprite of cricket விருதினை அணிக்குப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

2007ம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையினால் வழங்கப்படும்
Wisden Cricketer of the Year விருதினைப் பெற்றுக்கொண்டார்.

1994ம் ஆண்டு best schoolboy cricketer award இல் இரண்டாமிடத்தினைப் பெற்றார்.

                  --------------------------------------------------------------------------------------


இப்படிப் பல சாதனைகளின் சொந்தக்காரராக இருந்தும் தலைக்கனம், தற்பெருமை, மேதாவித் தனம் எதுவுமே இல்லாத மனிதர். யாராலும் விரும்பப்படக் கூடிய அற்புத மனிதர், மனிதநேசர். மஹெலவின் துடுப்பாட்ட ஸ்டைலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பது போல மஹெலவின் அந்தக் குழந்தைச் சிரிப்புக்கும் பல ரசிகர்கள் நிச்சயம் இருப்பார்கள். கிரிக்கட்டின் வாழ்நாள் ஹீரோக்களில் ஒருவர் மஹெல என்றால் அது மிகையாகாது.

மஹெலவின் ஓய்வு என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு மிகுந்த கவலைதான். இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் மஹெல தொடருவார் அவரது cover-drive,  flick, cuts & late cuts என்பவற்றை ஒருநாள் போட்டிகளில் காணலாம் என்பதே இப்போதைக்கு எமக்கிருக்கும் ஆறுதல்.

மஹெலவின் ஓய்வு இலங்கைக் கிரிக்கட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தோற்கும்போது கிடைத்த வலிகளை விட மஹெலவின் ஓய்வு தந்த வலி அதிகம்.

மஹெலவின் எதிர்காலம், அவர்தம் குடும்ப வாழ்க்கை, அனைத்தும் மகிழ்சிகரமானதாகவும் அவரின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமானதாகவும் அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.


We miss you Mayyaa!!!!!!!!!!


தகவல் மூலங்கள் : Wikipedia,  Island Cricket, Cricinfo & WisdenIndia

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பெருநாள் காசு இல்லனா.. அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே.. அதுதானேய்யா ஒலக வழக்கம்


நான் சுத்தி வழைச்சுப் பேச விரும்பல
சம்பந்தப்பட்டவங்களப் பார்த்து நேரடியாவே கேக்குறன்..
பெருநாள் கொண்டாடுறீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா..?
என்ன பண்ணினான் அந்தப் பையன்? என்னையா தப்பு பண்ணீனான்?
ஏதோ ஆர்வக் கோளாறுல பெருநாள் காசு கேட்டுட்டான்...
பெருநாள் காசு இல்லனா.. சாரி காசு இல்லன்னு அன்பாச் சொல்லிட்டு அனுப்பிடவேண்டியதுதானே..
அதுதானேய்யா ஒலக வழக்கம்.
அத விட்டுப் போட்டு அம்பது பேர் முன்னாடி இந்த வயசுலையும் பெருநாள் காசு கேக்குறார்னு சொல்லி அசிங்கப்படுத்திருக்க நீயி…..
அட அசிங்கப்படுத்தினாலும் பரவால்லையா… போறவாற சின்னப் பிள்ளைங்களையெல்லாம் கூப்பிட்டு அங்கிள் கிட்ட பெருநாள் காசு கேளுங்கடான்னு கடுப்பேத்தியிருக்க நீயி...
அம்புட்டு பசங்களுக்கு பெருநாள் காசு கொடுக்குறதுக்கு இது என்ன கவர்மெண்ட் கஜானாவா இல்ல ஒலக வங்கியா?
ஏதோ அந்தப் பையன் பாடியில அவன் வீட்ல சாப்பிட்ட பலகாரம், மஸ்கட் தந்த எனர்ஜி இருந்ததனால அவன் ஓடி எஸ்கேப் ஆகிருக்கான்யா….
அப்டில்லாம அந்தப் பசங்க கிட்ட மாட்டி காசப் பறிகொடுத்திருந்தா அவன் dongle ற்கு யாரு ரீலோர்ட் பண்றது அவன் ஃபேஸ்புக் அக்கெளண்ட யாரு மெயிண்டைன் பன்றது…?
இவ்வளவு ஏன் முந்த நாள் கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துது.
இதே பையன் இன்னொரு சொந்தக்காரன் வீட்ட போய் பெருநாள் காசு கேட்டான்யா…
ஆனா அந்த சொந்தக்காரங்க அந்தப் பையன உன்னைய மாதிரி இம்புட்டு அசிங்கப்படுத்தல்ல..
ஒரு ஒரு மணிநேரம் ஆறுதலாப் பேசிட்டு அனுப்பிருக்காங்கையா
அதுவும் எப்டி பிள்ளைக்கு மனம் நோகக் கூடாதுங்குறதுக்காக ஃபலூடா, ஐஸ்கிறீம், அப்பிள், ஒரேஞ்னு வெராய்டி வெராய்டியா கொடுத்துட்டு. அப்புறம் பெருநாள் காசு இல்லனு நாசூக்கா சொல்லி அனுப்பிருக்காய்ங்கை..
அந்த நாகரீகம் கூட தெரியாது உனக்கு…..?
எப்டியெல்லாம் அசிங்கப்படுத்திப்போட்ட…
ஒரு பச்சத் தண்ணி கூட கொடுக்காம திருப்பி அனுப்பிருக்க நீயி…
எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தான் அவன்…
கடைசிவரை ஒன்னுமே கொடுக்காம அனுப்பிருக்க..
இரக்கமில்லையா உனக்கு….?
(யாவும் கலப்படமற்ற கற்பனை )

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்

** நாட்குறிப்பில் ஒரு பக்கம் ***
----- VOPL உம் அண்ணனின் அட்டகாசங்களும்.------

கடந்த வருடம் நம்ம அண்ணாத்தை ஒருவர் VOPL (Virakesari Online Primer League) விளையாட ஒரு மாதத்துக்கு முதலே ரெடியாகிட்டார். அடிக்கடி ஃபோன் பண்ணி ரூம்லதானே நிப்ப நான் கொழும்பு வந்தா உன் ரூம்லதான் தங்கணும் என்று ஒரு மாதமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு நாள் கொழும்பில் எனது ரூமில் தங்கியிருக்கிறேன் நம்ம அண்ணாத்தை ஃபோன் பண்ணினார்.

அவர் :எங்கடா கொழும்புலதானே இருக்க காலைல கொழும்புக்கு உண்ட ரூமுக்கு வாறன்.

(காலை 4.30க்கு வந்து சேர்ந்தார். நானும் அவருக்கு தூங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு வசந்தம் டீவியின் எமது பார்வை நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தயாரானேன்.)

நான் : பாஸ் நீங்க தூங்குங்க ப்ரோகிராம் முடிச்சிட்டு 7.15க்குள்ள வந்துடுவன வந்த உடனே கிளம்பிடுவம்.

அவர் : சரிடா சரிடா உன் லெப்டொப்ப ஒன் பண்ணி தந்துட்டு போ. ஒன்லைன்ல உண்ட நிகழ்ச்சியப் பாப்பம்.

நான் : அப்போ தூங்கலையா…?

அவர் : தூங்குறதான் எதுக்கும் ஒன் பண்ணி தந்துட்டு போ…

(நானும் லெப்டொப்பை ஒன்பண்ணிக் கொடுத்துட்டு நிகழ்ச்சிக்காக கலையகம் சென்று மீண்டும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 7.15 ற்கெல்லாம் ரூமிட்கு திரும்பிவிட்டேன். ரூமுக்கு வந்து பார்த்தால் ரூம் அப்பவே சுத்தமாத்தான் இருந்தது நம்ம பாசு மேலும் சுத்தப்படுத்திவிட்டு மெச் விளையாடப் போக தயாராக இருந்தார்.
நானும் தயாரானேன் நான் தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் நம்ம அண்ணாத்தை நிண்ட இடத்துல துள்ளுறார் ஓடுறார், கைய கால நீட்டுறார்.. )

நான் : என்ன பாஸ் இது

அவர் : வோம் அப்டா வோம் அப்…

நான் : ஓஹ்ஹ்ஹ் ஓகே ஓகே

நான் : சரி வாங்க போகலாம் (பைக்ல போகும்போது) பாஸ் சாப்பிட்டுட்டு போவமா..?

அவர் : இல்லடா ஏற்கனவே லேட் ஆகிட்டு கிரவுண்டுக்கு போயிட்டு அங்க பக்கத்துல ஏதும் கடையில சாபிடுவம்

(கிறவ்ண்டுக்க வந்தா சும்மா இரிப்பம்னு இல்ல பெட்ட வாங்கி ரெண்டு சொட் போளை வாங்கி ரெண்டு போள்.. ஃபுல் ப்ரக்டிஸ் )

நான் : பாஸ் சாப்பிட்டுட்டு வருவமே செம பசி

அவர் : இருடா இரு

(அப்டி சொல்லிட்டு ஏதோ சாவு வீட்டுக்கு வந்த அரசியல்வாதி அங்க இருக்கிர எல்லார்க்கிட்டையும் வாண்டட்டா போய் அளவளாவுற மாதிரி நம்ம அண்ணாத்தையும் எல்லார்கிட்டையும் சுக நலம் விசாரிக்குது. எனக்கோ பசி அகோரம். )

நான் : பாஸ் வாரீங்களா இல்ல நான் போய் சாப்பிட்டு வரட்டுமா…?

அவர் : சரி வா போவம்….

நான் : பைக்ல போவமா

அவர் : இல்ல நடந்து போவம் பக்கத்துலதான் ஒரு கடை இருக்கு குயிக்கா போய்ட்டு வந்துருவம்.

(சாப்பாட்டுக் கடையில வெறும் பொல்ரொட்டியும் கட்ட சம்பலும்தான் இருந்துது. )

நான் : பாஸ் என்ன சாப்பிடுறீங்க….?

அவர் : இல்லடா நான் ஒண்டும் சாப்பிடல; சாப்பிட்டா சரியா விளையாட முடியாது ஒரு டீ மட்டும் குடிக்கிறன்.

நான் : ஒரு பொல் ரொட்டியாவது சாப்பிடுங்க பாஸ்…

அவர் : இல்லடா பசியோட போனதான் வெறியோட விளையாடலாம்

நான் : ஓ.. ஓகே ஓகே நமக்கு அப்டியெல்லாம் இல்ல பாஸு, வயிறுதான் முக்கியம். ( சொல்லிட்டே நான் ரெண்டு பொல் ரொட்டி ஒரு டீ நம்ம பாஸு பாதி ரொட்டி ஒரு டீ சாப்பிட்டோம்.சாபிட்டுவிட்டு கிரவுண்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம்….
வரும்போதே நம்ம பாஸ் துள்றாரு பாயுறாரு கைய முன்னுக்கு பின்னுக்கு சுத்துறாரு… )

நான் : என்ன பாஸ் வோமப்பா….?

அவர் : ஓமடா ஓமடா…..

நான் : ஓ… இருக்கட்டும் இருக்கட்டும்….

அவர் : டேய் வாடா கொஞ்சம் ஓடுவம்… அப்பதான் உடம்பு வேருக்கும் எல்லா தசைகளும் இழுபடும்….

நான் : ஓ இதுவும் வோமப்ல வருதா பாஸ்…..

அவர் :ஓம்டா ஓடுவமா..?

நான் : ஓகே ஓடிட்டா போச்சு…..

வோமப் பில்டப் எல்லாத்தையும் முடிச்சாச்சு. அண்ணன் ஒரு டீம் நான் வேறொரு டீம்…
அண்ணண்ட டீமுக்குதான் முதல் மெச் அண்ணந்தான் ஓபனர். அண்ணன் கலக்குவார் எண்டு நானும் நம்பி உட்கார்ந்து பார்த்தன்

அண்ணனை நோக்கி வேகமாக வீசப்பட்ட பந்து ஆம் அண்ணன் ஓங்கி அடித்தார் மட்டையில் படாமல் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு அண்ணன் ஆட்டமிழந்தார்.

அடுத்த மெச்சிலும் அண்ணன் முதலாவது பந்திலேயே ஓங்கியடித்து மட்டையில் படாமல் LBW முறையில் ஆட்டமிழந்து அண்ணன் வெளியேறினார்.

3வது போட்டியில் அண்ணனுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இப்படி ஊர்ல இருந்து சில பல ஆயிரங்கள செலவு பண்ணி கொழும்பு வந்து எல்லாப் போட்டிகளிலும் டக்-அவுட் ஆகிப்போன நம் அண்ணனை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தேன்.

தொடரில் நான் விளையாடிய அணி சம்பியன். அண்ணனின் அணி படு தோல்வி. எல்லா மெச்களும் முடிந்து ரூமுக்கு வரும் வரை அண்ணன் என்னருகில் வரவே இல்லை. வந்தால் ஏதும் சொல்லிடுவேனோ என்ற தயக்கம். அங்கு வந்திருந்த பிரபல அறிவிப்பாளார் ஒருவரின் குட்டி மகனோடு ஒரு ஓரமாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்தக் குட்டிப் பையனோடு விளையாடத்தான் தான் சரி என்பதை அவர் தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்…

ரூமுக்கு வந்ததும் அண்ணனின் வேண்டுகோள் கட்டாயப்படுத்தலின் காரணமாக சினி சிட்டி தியட்டரில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் பார்த்து அண்ணனின் சோகத்தைக் கொஞ்சம் குறைத்தோம். என்னா டைமிங்.

குறிப்பு : இதில் வரும் அண்ணாத்தை யாரென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இந்தக் கதையை ஒரு குறும்படமாக இயக்கினால் @ Kanapathipillai Prapakaran அவர்தான் இந்தக் கதையின் ஹீரோ…..
காரணம் அவரால் மாத்திரமே இந்த கதையை உள்வாங்கி உயிரோட்டமாக ,யதார்த்தமாக நடிக்க முடியும்.
பாஸ் கால்சீட் கொஞ்சம் ஒதுக்கி வைங்கோ

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS