RSS

அனைவருக்கும் வளமான எதிர்காலம்

இலங்கை வரலாற்றிலேயே மிகுந்த சுவாரஸ்யமானதும், விறு விறுப்பானதுமான ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்றுவிட்டது.

பாரிய வன்முறைகள் எதுவுமில்லாமல் எதிர்பார்த்ததைவிடவும்
அமைதியாக இத் தேர்தல் இடம்பெற்றமை மிகவும் மகிழ்ச்சியான விடயமே.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றியீட்டியிருக்கின்றார்.




“வளமான எதிர்காலம்” என்ற தொனிப்பொருளோடு போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இது அளிக்கப்பட்ட வாக்குகளின் 57.88 வீதமாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் ஃபொன்சேகா 4,173,185 வாக்குகளை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டார். இது அளிக்கப்பட்ட வாக்குகளின் 40.15 வீதமாகும்.

மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும் 6 மாவட்டங்களில் சரத் ஃபொன்சேகாவும் வெற்றியீட்டினர்.


இத்தேர்தலில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவரான சரத் ஃபொன்சேகாவிற்கே வாக்களிக்கும் வாய்பில்லை. தனக்கு தானே வாக்களிக்க முடியாத நிலைமை. அதுவும் பிரதான வேட்பாளருக்கே இந்த நிலைமை. இந்த முறை வாக்காளர் இடாப்பில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. இதைக் கொண்டு வாக்களிப்பின் இறுதி ஓரிரு மணித்தியாலங்களில் ஏகப்பட்ட செய்திகளும், வதந்திகளும் பரவின பின்னர் இப்பிரச்சினை ஓரளவாகத் தணிந்தது. இருந்தபோதும் இது தற்காலிகமே.. ஒரு வேளை ஃபொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் இப்பிரச்சினை நிச்சயம் பூதாகரமாகியிருக்கும்.



தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் தேர்வு செய்யபட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக தனது முடிவை அறிவித்துவிட்டார். இருந்த போதும் வழமை போன்றே எதிர்கட்சிகள் தங்களுக்கே உரித்தான பாணியில் இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இத்தேர்தல் நீதியாக இடம்பெறவில்லை என்றும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றார்கள்.



ஒரு வேளை எதிர்கட்சிகள் குறிப்பிடுவது போன்ற முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் அரசாங்கமே வென்றிருக்க வேண்டுமே. ஏன் அவ்வாறு வெற்றிபெறவில்லை. அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஃபொன்சேகா வெற்றிபெற்றிருந்தாரே.. இது மட்டும் எப்படி சாத்தியமானது?



சரத் ஃபொன்சேகா கூறியிருந்தார் தான் கலந்துகொண்ட பிரச்சாரக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டதாகவும் ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை என்றும் கூறியிருந்தார். கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரும் அவருக்குத்தான் வாக்களித்திருக்க வேண்டும் என்றுகூறுவது சிறுபிள்ளைத்தனமானது.



ஃபொன்சேகா என்பவர் இலங்கை மக்களால் வீரத்தளபதியாகப் போற்றப்பட்டவர். மிகப்பிரபலமானவர் அவரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் பலர் வந்திருப்பார்கள். சிலர் கூட்டத்திற்கென்றே வந்திருப்பார்கள். சிலர் பொழுதுபோக்கிற்காக வந்திருப்பார்கள். வாக்களிக்க தகுதிபெறாத இளையவர்கள் வந்திருப்பார்கள். (எத்தனை பேர் சைட் அடிக்கமட்டுமே வந்தார்களோ…..) ஒரு கூட்டத்திற்கு வந்த அதே கூட்டத்தினரே மற்றைய கூட்டங்களுக்கும் வந்திருக்கலாமே…. வந்திருந்தவர்களின் பலரின் வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளிற்குள் இடம்பெற்றிருக்கலாமே….



குறிப்பிட்ட குறித்த எண்ணிக்கையான வாக்குகளினால் வித்தியாசம் நிலவியிருந்தாலும் பரவாயில்லை. இது பல இலட்சங்கள், ஆக அவர்கூறும் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியதே…



அரச வளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்தியமை தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே. அதில் அரசு பாரிய தவறிழைத்துவிட்டது. அரச ஊடகங்களை உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டது அரசு.



தேர்தல் இடம்பெற்ற அன்றிலிருந்து ஃபொன்சேகா தனியார் ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருந்தார். அதன் காரணம் என்னவென்று தெரியாது. அவர் கூறுவது போன்று கொலை அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். அதேவேளை மாறி யோசித்தால் அரசின் மீது களங்கம் ஏற்படுத்தவும் தனது பாதுகாப்பு தொடர்பில் மக்களினதும், சர்வதேசத்தினதும் பார்வையை தன்பக்கம் திருப்பும் நோக்கமாகவும் இருக்கலாம்.

தற்போது அவர் ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டார், ஆனாலும் அவர் வெளிநாடு செல்ல முடியாதவண்ணம் சில ஏற்பாடுகளை அரசு தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தோணுகின்றது. பார்க்கலாம்.



எதிர்பார்க்கப்பட்ட பழிவாங்கள்கள் உடனடியாக நிகழாவிட்டாலும் திரைமறைவில் நிகழ்வதாகவே நினைக்கின்றேன், ஒரு வேளை பொதுத் தேர்தல் இடம்பெறவிருப்பதால் அரசாங்கம் சற்று அடக்கி வாசிங்கின்றதோ என்னவோ??? இப்போது ஏதாவது செய்யப்போய் சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாகிடாமல் பொதுத் தேர்தல்வரை அரசாங்கம் காத்திருக்க எண்ணியிருக்கலாம்.



சரத் ஃபொன்சேகாவிற்கு வழங்கிய பாதுகாப்பையும் அரசாங்கம் அகற்றியிருப்பதாகத் தெரிகிறது. என்ன உள்நோக்கமோ தெரியாது.. ஆனாலும் அவரது பாதுகாப்பில் அரசாங்கம் முன்னரைவிட தற்போதுதான் விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கும். காரணம் ஃபொன்சேகாவிட்கு என்ன நடந்தாலும், யார் என்ன செய்தாலும் பழிவிழப்போவது அரசாங்கத்தின் மீதே.. அரசாங்கத்திற்கு களங்கத்தை உண்டுபண்ண எதிர்க்கட்சிக்காரர்களே ஃபொன்சேகாவிட்கு ஏதும் சதி பண்ணலாம். இது விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.



எது எவ்வாறாயிருந்தபோதும் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டன. எனவே ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் வெல்லுவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டும்.



அதே நேரம் தம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை நிவர்த்திசெய்து, தனது சகோதரர்களின் அட்டகாசத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதியும் போராட வேண்டியிருக்கும்.



ஜனாதிபதித் தேர்தலின் சூடு தணியும் முன் மற்றுமொரு தேர்தலுக்காக இலங்கையின் அரசியல் களம் தயாராகிறது..



அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டதுபோன்று ஆட்சியையும் தக்கவைக்க அரசாங்கமும், ஆட்சியையாவது கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சிகளும் அடுத்த கட்டத்திற்கு தயாராகின்றன.



இலங்கையின் அரசியல் களத்தில் அடுத்து இடம்பெறப்போகும் மாற்றங்களை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருப்போம்…..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வளமான எதிர்காலம் Vs நம்பிக்கைக்குரிய மாற்றம்


இலங்கை வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானதும், இறுக்கமானதும், சுவாரஸ்யமானதுமான தேர்தல் இம்முறைதான் இடம்பெறப்போகின்றது. அண்மைய கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அரசியல்வாதி முதல், வாக்களிக்கும் குடிமகன்வரை அனைவருமே மிகவும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

யார் எந்தக்கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாத அளவுக்கு கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றன. மக்களோ தெளிவான குழப்பத்தில்……


இம்முறை வாக்குறுதிகளை அள்ளி வீசுவதைவிட எதிர் வேட்பாளர்களின் குப்பைகளைக் கிளறும் நடவடிக்கைகளே அதிகம் இடம்பெறுகின்றன. சேறு பூசல்களுக்கு குறைவே இல்லை.



விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான பணம் விரயமாக்கப்படுகின்றது. (யார் வீட்டுப் பணமோ..??)

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கிடையில் விளம்பரங்கள் வரும் ஆனால் இப்பொது விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

வித்தியாசமான கூட்டணிகள்…., கொள்கையடிப்படையிலும் கடந்த கால வரலாறுகளின் அடிப்படையிலும் பரம எதிரிகளான பல கட்சிகள் தங்களுக்குள் கை கோர்த்து பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன.


தேர்தல் ஆணையாளரே "என்னவாச்சும் பண்ணிக்கங்கப்பா.... இதோட ஆள விட்டுடுங்க" என்று விரக்தியுற்று புலம்பிக்கொண்டிருக்கும் அளவுக்கு வன்முறைகளும், தேர்தல் சட்ட மீறள்களும் பரவலாக இடம்பெறுகின்றன.

குண்டுத்தாக்குதல்களை நடத்திவிட்டு பழியைப் போடுவதட்கு இன்னொரு தரப்பு இல்லாததால் குண்டுகள் மட்டும் வெடிக்கவில்லை. இப்போது குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால் நேரடியாகவே பழி தம்மீது விழுந்துவிடும் என்பதால் யாரும் அந்த வழியில் யோசிக்கவில்லை போல் தெரிகிறது… (முன்பென்றால் பழிபோட …………….. இருந்தார்கள் இப்போதுதான் அவர்கள் இல்லையே...)


யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி இலகுவாக தேர்தலில் வென்றுவிடலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டிய மகிந்த ராஜபக்சவுக்கு இப்படி ஒரு இடி விழும் என்று அவர் கனவிலும் எண்ணியிருக்கமாட்டார். ஃபொன்சேகா என்ற புயல் மகிந்த ராஜபக்சவின் கட்பனைக் கோட்டையை ஆட்டங்காணவைத்துவிட்டது. இதை ஏற்கனவே அறிந்திருந்தால் மீதி இரு வருடங்களையும் ஆட்சிசெய்துவிட்டு அப்புறம் பலப் பரீட்சையில் இறங்கியிருப்பார்.(உளவாளிகள் சொதப்பிவிட்டார்கள்….)


சொத்து சேகரிப்பு, குடும்ப அரசியல், ஏராளமான ஊழல்கள் என்பனவே மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகும்.


இலங்கை சிங்களவர்களிட்கு மட்டுமே சொந்தமானது அதில் சிறுபான்மையினர் எதனையும் உரிமை கொண்டாடக் கூடாது என்ற ஃபொன்சேகாவின் அமுத வாக்கும், யுத்தக் கைதிகள் சரணடைய வந்தவர்கள் பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்களும், ஆயுதக் கொள்வனவில் அவர் செய்ததாகச் சொல்லப்படும் ஊழல்களுமே ஃபொன்சேகாவிற்கு எதிராக அமைந்துள்ளன.



ஆக இருவர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

எது எவ்வாறாக இருந்த போதும் தேர்தலில் யார் வெல்லுவார் என்பது தொடர்பில் உறுதியாக எந்த ஊகத்தையும் சொல்லிவிட முடியாதளவிற்கு மிகவும் இறுக்கமாக இருக்கிறது இந்த தேர்தல் களம்.

ஆனால் ஒன்று, தேர்தலுக்கு முன்னுள்ள காலங்களிலும் சரி தேர்தலின் பின்னர் வரும் நாட்களிலும் சரி ஏராளமான வெட்டுக்குத்துகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

தேர்தலின் பின்னர் நிறையப்பேர் வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்து கொள்ள வேண்டியுமிருக்கும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரியே….

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில் என்னதான் நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கின்றேன்.


இலங்கை மக்களாகிய எமக்கு இத்தேர்தலின் முடிவில் கிடைக்கப் போவது
“வளமான எதிர்காலமா” இல்லை “நம்பிக்கைக்குரிய மாற்றமா”




முடிவுக்காய் காத்திருப்போம்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் வாழ்வில் மற்றுமொரு மைல்கல்.

என் உள்ளத்து உணர்வுகளை என் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பேரவாவுடனேயே இப்பதிவினை எழுதுகின்றேன்.

2010ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே என் இலக்குகளில் ஒன்றை அடைந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் நான் திளைத்திருக்கின்றேன்.
(பில்டப் எல்லாம் போதும் விசயத்த சொல்லுப்பா என்று நீங்கள் சொல்றதெல்லாம் புரியிது நேரடியா விசயத்துக்கே வந்துவிடுகின்றேன்.)


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலின் பண்பலையில் ஒரு அறிவிப்பாளனாக எனது குரல் முதல் முறையாக ஒலித்துவிட்டது.(Alhamdhulilah)
கடந்த புதன் கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை தென்றலில் ஒலிபரப்பான “இதம் தரும் ரிதம்” நிகழ்ச்சியின் மூலமாகத்தான் எனது அறிமுகம் இடம்பெற்றது.

(13/01/2010புதன் கிழமை) இந்த ஒருநாளை அடைவதற்காக நான் கடந்துவந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்கின்றேன்.


கடந்த 2009ம் வருடம் ஏப்ரல் மாதம் பத்திரிகையில் வெளிவந்த பகுதி நேர அறிவிப்பாளருக்கான(Relief Announcer) விண்ணப்பங்களைக்
கோரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என்னோடு நட்போடு பழகிவந்த ரேனுகா அக்கா என்னை
அதற்கு விண்ணப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார். அவர் எனக்கு இவ்விடையத்தைச் சொல்லும் போது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு இரண்டு நாட்களே இருந்தன.
இருந்தபோதும் நான் அவ்வேளை கொழும்பில் இருந்ததால் எனது சான்றிதழ்களையும் இதர காகிதாதிகளையும் வீட்டிலிருந்து தொலை நகல்
மூலம் உடனடியாகப் பெற்று இரு நாட்களுக்குள் கிடைக்கும் வண்ணம் அனுப்பிவைக்க முடிந்தது. ரேனுகா அக்காவிற்கு எனது நன்றிகள் கோடி.

ஓரிரு மாதங்களில் எனக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து முதலாவது குரல் தேர்வுக்கு(Audition) அழைப்பு வந்தது.
அதனை வெற்றிகரமாக கடந்த அடுத்த சில வாரங்களில் நடைபெற்ற இரண்டாவது குரல் தேர்வையும் வெற்றிகரமாக முகம்கொடுத்தேன்.

அதன் பின்னர் சில வாரங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத்தேர்வில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் சரியாக
பதில்லளித்தாலும் ஒரே ஒரு விடையம் எனக்கு எதிராக அமைந்திருந்தது. அது எனக்கு எதிராக அமையும் என்று நான் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்திருந்தேன்.
அதுதான் என் பல்கலைக்கழக படிப்பு.

பல்கலைக்கழக மாணவனான என்னால் தொடர்ந்து ஒரு அறிவிப்பாளராக கடமையாற்ற முடியுமா?? ( பகுதி நேர) அறிவிப்பாளர் என்பவர்
எப்போது அழைக்கப்பட்டாலும் உடனே சென்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வேண்டும் அது என்னால் முடியுமா?? அதிலும் எனது
பல்கலைக் கழகம் இருப்பதோ மிகிந்தலையில் (அநுராதபுரம்). மிகிந்தலையிலிருந்து கொழும்பு செல்ல ஏறத்தாழ 6 மணித்தியாலங்கள் தேவை,
என்னால் முடியுமா?? அதிலும் வார நாட்களில் நிகழ்ச்சி செய்யவேண்டி வருமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கிடையில் என்னால் இது சாத்தியமா??
என் படிப்பை எவ்வித பாதிப்புமில்லாமல் கொண்டுபோக முடியுமா??
இவைதான் எனக்கிருந்த சவால்கள்.
இவ் அத்தனை கேள்விகளும் என்னிடம் கேட்கப்பட்டன.

எனக்கிருந்த சில சாத்தியக் கூறுகளைக் கூறி என்னால் முடியும் என்று சொல்லுவதைத் தவிர வேறு எந்த பதிலும் என்னிடமிருக்கவில்லை.

சரி நீங்கள் போகலாம் உங்களுக்கு முடிவை அறிவிக்கின்றோம். இதுதான் எனக்கு கிடைத்த பதில்.

அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு திரும்பிவிட்டேன். ஆனாலும் ஒரு சிறு நம்பிக்கை இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஒரு கடிதம். என்னை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு
அறிவிப்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் 2009/11/10 அன்று ஆரம்பமாகும் பயிற்சி நெறியில் என்னை இணைந்து கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. எப்படி இருக்கும்??

இறந்துவிட்டான் என்று நினைத்து கவலைப்பட்டு மறந்தும்விட்ட உயிர் நண்பன் திரும்பி வந்தால் எப்படியிருக்கும். அதே சந்தோசம்தான் எனக்கு.

எனது இலட்சியங்களில் ஒன்றை அடைவதற்கான முக்கியமான வாசல் திறந்துவிட்டது.




                                                            பயிற்சி ஆரம்பம்.

2009/11/10 எங்கள் பயிற்சி ஆரம்பமானது. முதல் 3 வாரங்கள் Library (சேமிப்பகத்தில்- சொல் பொருத்தமானதா என்று தெரியாது Library என்றுதான் பயன்படுத்துவார்கள்) பயிற்சிகள் இடம்பெற்றன.
இங்கே பல்லாயிரக் கணக்கான இறுவட்டுக்கள்(CD), இசைத்தட்டுக்கள்(Records), ஒலி நாடாக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இல்லாத பழைய பாடல்கள் கொண்ட இசைத்தட்டுக்கள் கூட இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் ஒவ்வொன்றும் திரைப்படங்களின் பெயர்கள் அடிப்படையிலும், பாடல்களின் முதல் எழுத்துக்களின் அடிப்படையிலும்
வெவ்வேறாக தொகுத்தெழுதப்பட்ட பிரமாண்டமான புத்தகங்களும் இங்கே காணப்படுகின்றன. இங்கே பாடல்களைத் தொகுக்கும் விதம்,
பாடல்களைத் தேடி எடுக்கும் விதம், ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குமான பாடல் தெரிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது போன்ற
பல் வேறு விடயங்கள் சிரேஸ்ட அறிவிப்பாளர்களால் எங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து செய்திப் பிரிவில் செய்திகளைத் திரட்டுதல் அவற்றைத் தொகுக்கும் விதம், அறிக்கைப்படுத்தல் என்பவை
தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இங்கு ஒருவாரம் சென்ற பிறகு.

புகழ் பெற்ற அறிவிப்பாளர்களால் தொடர்ச்சியான விரிவுரைகள் இடம்பெற்றன. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடித்த
பிறகு கலையக அவதானிப்பு (Obsservation) இடம்பெற்றது. முதன் முதலாக தென்றல் கலையக்த்திற்குள் செல்லும் போது ஏதோ சிகரத்தைத் தொட்டுவிட்ட உணர்வு. மிகுந்த மகிழ்ச்சியாகவிருந்தது.
இரண்டு வாரங்களுக்கு மேல் கலையக அவதானிப்பு இடம் பெற்றது.

உண்மையில் பயிற்சிக் காலத்தில் நான் மிகுந்த சிரமப்பட்டேன். காரணம் பயிற்சிகள் அனைத்தும் வார நாட்களில்
இடம்பெற்றமையினால் என்னால் பல்கலைக்கழக படிப்பையும், பயிற்சியையும் சமமாக கொண்டு போகமுடியவில்லை.
அங்கே சில நாட்கள் இங்கே சில நாட்கள் எனத் திண்டாடினேன்.

இறைவனின் அருளோடும், என் பெற்றாரின் ஆலோசனைகளோடும், சரா அண்ணா மற்றும் நண்பர்களின் ஆதரவோடும்
ஒருவாரக இவற்றையெல்லாம் கடந்து வந்துவிடேன்.


                                                முதலாவது நிகழ்ச்சி

ஏறத்தாள இரண்டுமாத பயிற்சிகளின் இறுதிக் கட்டமாக சிரேஸ்ட அறிவிப்பாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சி செய்யும் வாய்புக் கிட்டியது.

இதன்படி கடந்த 13/01/2010 புதன் கிழமை மாலை 3 - 6 மணிவரை இடம்பெற்ற இதம் தரும் ரிதம் நிகழ்ச்சிதான் என் முதலாவது நிகழ்ச்சி.
சிரேஸ்ட மூத்த அறிவிப்பாளரான கே.ஜெயகிருஷ்னா அண்ணா, சிரேஸ்ட அறிவிப்பாளர் ரஜினி அன்றூ அக்கா
ஆகியோரோடு இணைந்து முதலாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிட்டியது.

முதல் நாள் என்பதால் சற்று பயம், பதற்றம் காணப்பட்டது.
அதைவிடவும் இவ்விரு அறிவிப்பாளர்களுடனும் இணைந்து
நிகழ்ச்சியைத் தொகுக்க வேண்டும் என்பதும் என் பதற்றத்தை அதிகரித்தது. ஆனாலும் அவ்விருவரும் என்னோடு அன்பாகவும் நட்பாகவும் கதைத்து என்னை ஊக்கப்படுத்தியதோடு பேசுவதற்கு அதிக வாய்ப்புகளையும் தந்தார்கள்.
நிகழ்ச்சி ஆரம்பித்து செய்திச் சுருக்கமும் தொடர்ந்து (தேர்தல் காலம் என்பதால்) ஏராழமான விளம்பரங்களும் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் 41வது நிமிடத்தில்தான் எனக்கு பேசுவதட்கு முதல் வாய்ப்புக் கிட்டியது. தொலைபேசி நேயரோடு உரையாடும் வாய்ப்பு.
தொடர்ந்து பேச வாய்ப்புக்கள் கிடைத்தன.
அன்று இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் Idea கிண்ண இறுதிப் போட்டி இடம் பெற்றுக் கொண்டிருந்ததால் Score சொல்லும் வாய்ப்பும் கிட்டியது.

                                             மறக்கமுடியுமா???

தென்றலில் என் குரல் முதன் முதலில் ஒலித்த நேரம் : மாலை 3 மணி 41
நிமிடம்


நான் தென்றலில் பேசிய முதல் வார்த்தை : ”வணக்கம் ஹுசைன்”


முதலாவது நேயர் : ஹுசைன்


என் குரல் ஒலித்த பின்னர் ஒலித்த முதல் பாடல் : ஒரு வார்த்தை கேட்க ஒரு
வருஷம் காத்திருந்தேன்.


சக அறிவிப்பாளர்கள் : கே. ஜெயகிருஷ்ணா, ரஜனி அன்றூ


கலையகத்தின் மறுபக்கத்தில் : அனூஷா

(நன்றி சரா அண்ணா)

என் முதலாவது நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.(Alhamdhulilah)

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கூறிய கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தின.
வாழ்துரைத்த அத்துணை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இத் துறையில் பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற பேரவாவுடன் தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றேன்.(Insha Allah)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS



பூ மீது யானை பூவலியை தாங்குமோ


தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிரையுதே

இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே

உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ



உடைத்துப் பார்க்கும் இதயம் உனது

படைத்து பார்ப்பதை அறியாதே

குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு

நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது

படைத்து பார்ப்பதை அறியாதே

குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு

நிஜத்தில் உலகத்தில் உடையாதே

காதல் போலவே நோயும் வெள்ளையே

யாவும் உண்மை தானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்

கேட்கவில்லை நானே



பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ



விலகும்போது நெருங்கும் காதல்

அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி

விருப்பம்போல் அது வலி தருமோ...ஆ..ஆ..ஆ..ஆ...

விலகும்போது நெருங்கும் காதல்

அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி

விருப்பம்போல் அது வலி தருமோ

வேறு வேறாக நினைவு போகையில்

காதல் கொள்ளுதல் பாவம்

அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே

ஆதி கால சாபம்.



பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிரையுதே

இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே

உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS