இலங்கை வரலாற்றிலேயே மிகுந்த சுவாரஸ்யமானதும், விறு விறுப்பானதுமான ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்றுவிட்டது.
பாரிய வன்முறைகள் எதுவுமில்லாமல் எதிர்பார்த்ததைவிடவும்
அமைதியாக இத் தேர்தல் இடம்பெற்றமை மிகவும் மகிழ்ச்சியான விடயமே.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றியீட்டியிருக்கின்றார்.
“வளமான எதிர்காலம்” என்ற தொனிப்பொருளோடு போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இது அளிக்கப்பட்ட வாக்குகளின் 57.88 வீதமாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் ஃபொன்சேகா 4,173,185 வாக்குகளை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டார். இது அளிக்கப்பட்ட வாக்குகளின் 40.15 வீதமாகும்.
மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும் 6 மாவட்டங்களில் சரத் ஃபொன்சேகாவும் வெற்றியீட்டினர்.
இத்தேர்தலில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விடயம் என்னவெனில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவரான சரத் ஃபொன்சேகாவிற்கே வாக்களிக்கும் வாய்பில்லை. தனக்கு தானே வாக்களிக்க முடியாத நிலைமை. அதுவும் பிரதான வேட்பாளருக்கே இந்த நிலைமை. இந்த முறை வாக்காளர் இடாப்பில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. இதைக் கொண்டு வாக்களிப்பின் இறுதி ஓரிரு மணித்தியாலங்களில் ஏகப்பட்ட செய்திகளும், வதந்திகளும் பரவின பின்னர் இப்பிரச்சினை ஓரளவாகத் தணிந்தது. இருந்தபோதும் இது தற்காலிகமே.. ஒரு வேளை ஃபொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் இப்பிரச்சினை நிச்சயம் பூதாகரமாகியிருக்கும்.
தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் தேர்வு செய்யபட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக தனது முடிவை அறிவித்துவிட்டார். இருந்த போதும் வழமை போன்றே எதிர்கட்சிகள் தங்களுக்கே உரித்தான பாணியில் இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இத்தேர்தல் நீதியாக இடம்பெறவில்லை என்றும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஒரு வேளை எதிர்கட்சிகள் குறிப்பிடுவது போன்ற முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் அரசாங்கமே வென்றிருக்க வேண்டுமே. ஏன் அவ்வாறு வெற்றிபெறவில்லை. அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஃபொன்சேகா வெற்றிபெற்றிருந்தாரே.. இது மட்டும் எப்படி சாத்தியமானது?
சரத் ஃபொன்சேகா கூறியிருந்தார் தான் கலந்துகொண்ட பிரச்சாரக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டதாகவும் ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை என்றும் கூறியிருந்தார். கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரும் அவருக்குத்தான் வாக்களித்திருக்க வேண்டும் என்றுகூறுவது சிறுபிள்ளைத்தனமானது.
ஃபொன்சேகா என்பவர் இலங்கை மக்களால் வீரத்தளபதியாகப் போற்றப்பட்டவர். மிகப்பிரபலமானவர் அவரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் பலர் வந்திருப்பார்கள். சிலர் கூட்டத்திற்கென்றே வந்திருப்பார்கள். சிலர் பொழுதுபோக்கிற்காக வந்திருப்பார்கள். வாக்களிக்க தகுதிபெறாத இளையவர்கள் வந்திருப்பார்கள். (எத்தனை பேர் சைட் அடிக்கமட்டுமே வந்தார்களோ…..) ஒரு கூட்டத்திற்கு வந்த அதே கூட்டத்தினரே மற்றைய கூட்டங்களுக்கும் வந்திருக்கலாமே…. வந்திருந்தவர்களின் பலரின் வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளிற்குள் இடம்பெற்றிருக்கலாமே….
குறிப்பிட்ட குறித்த எண்ணிக்கையான வாக்குகளினால் வித்தியாசம் நிலவியிருந்தாலும் பரவாயில்லை. இது பல இலட்சங்கள், ஆக அவர்கூறும் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியதே…
அரச வளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்தியமை தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே. அதில் அரசு பாரிய தவறிழைத்துவிட்டது. அரச ஊடகங்களை உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டது அரசு.
தேர்தல் இடம்பெற்ற அன்றிலிருந்து ஃபொன்சேகா தனியார் ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருந்தார். அதன் காரணம் என்னவென்று தெரியாது. அவர் கூறுவது போன்று கொலை அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். அதேவேளை மாறி யோசித்தால் அரசின் மீது களங்கம் ஏற்படுத்தவும் தனது பாதுகாப்பு தொடர்பில் மக்களினதும், சர்வதேசத்தினதும் பார்வையை தன்பக்கம் திருப்பும் நோக்கமாகவும் இருக்கலாம்.
தற்போது அவர் ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டார், ஆனாலும் அவர் வெளிநாடு செல்ல முடியாதவண்ணம் சில ஏற்பாடுகளை அரசு தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தோணுகின்றது. பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்பட்ட பழிவாங்கள்கள் உடனடியாக நிகழாவிட்டாலும் திரைமறைவில் நிகழ்வதாகவே நினைக்கின்றேன், ஒரு வேளை பொதுத் தேர்தல் இடம்பெறவிருப்பதால் அரசாங்கம் சற்று அடக்கி வாசிங்கின்றதோ என்னவோ??? இப்போது ஏதாவது செய்யப்போய் சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாகிடாமல் பொதுத் தேர்தல்வரை அரசாங்கம் காத்திருக்க எண்ணியிருக்கலாம்.
சரத் ஃபொன்சேகாவிற்கு வழங்கிய பாதுகாப்பையும் அரசாங்கம் அகற்றியிருப்பதாகத் தெரிகிறது. என்ன உள்நோக்கமோ தெரியாது.. ஆனாலும் அவரது பாதுகாப்பில் அரசாங்கம் முன்னரைவிட தற்போதுதான் விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கும். காரணம் ஃபொன்சேகாவிட்கு என்ன நடந்தாலும், யார் என்ன செய்தாலும் பழிவிழப்போவது அரசாங்கத்தின் மீதே.. அரசாங்கத்திற்கு களங்கத்தை உண்டுபண்ண எதிர்க்கட்சிக்காரர்களே ஃபொன்சேகாவிட்கு ஏதும் சதி பண்ணலாம். இது விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.
எது எவ்வாறாயிருந்தபோதும் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் எதிர்க்கட்சிகள் தோற்றுவிட்டன. எனவே ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் வெல்லுவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டும்.
அதே நேரம் தம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை நிவர்த்திசெய்து, தனது சகோதரர்களின் அட்டகாசத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதியும் போராட வேண்டியிருக்கும்.
ஜனாதிபதித் தேர்தலின் சூடு தணியும் முன் மற்றுமொரு தேர்தலுக்காக இலங்கையின் அரசியல் களம் தயாராகிறது..
அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டதுபோன்று ஆட்சியையும் தக்கவைக்க அரசாங்கமும், ஆட்சியையாவது கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சிகளும் அடுத்த கட்டத்திற்கு தயாராகின்றன.
இலங்கையின் அரசியல் களத்தில் அடுத்து இடம்பெறப்போகும் மாற்றங்களை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருப்போம்…..
0 comments:
கருத்துரையிடுக