RSS

உலகெங்கிலுமுள்ள காதலர்களுக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



உலகெங்கிலுமுள்ள காதலர்களுக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.


இன்று உலகெங்குமுள்ள காதலர்கள் காதலர் தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

இந்நாளில் காதலர்கள் தங்களுக்கிடையில் அன்பைப் பகிர்ந்து கொள்வதும், பரிசுப் பொருட்களைப் பரிமாரிக் கொள்வதும் சிறப்பம்சமாகும். அதிலும் இம்முறை காதலர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்திருப்பதால் விசேட நிகழ்ச்சிகளையும், களியாட்டங்களையும் பற்றிக் குறிப்பிடவே தேவையில்லை.



அத்தோடு இதுவரை காதலியோ, காதலனோ கிடைக்காதவர்கள் தங்களுக்கேற்றவர்களை தேடிக் கொள்வதற்கும் இந்நாளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.



இத்தினமானது ரோமில் வாழ்ந்த கிறிஸ்துவ தியாகியான வெலன்டைன் என்பவரின் நினைவாகக் கொண்டாடப்படுவதால் வெலன்டைன்ஸ் டேய் என்றும், காதலர்களே இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் தினம் என்று அழைக்கப்படுகின்றது.

.இக்காதலர் தினம் உருவானமை தொடர்பாக பல கதைகள் கூறப்பட்டாலும் பிரதானமாகச் சொல்லப்படும் கதை இதுதான்.
3ம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த வெலன்ரைன் என்பவருக்கு ரோமை ஆண்ட கிளாடியஸ் என்ற மன்னனின் ஆட்சியைப் பிடிக்கவில்லை.

வெலன்ரைனுக்கு மட்டுமல்லாமல் அந்நாட்டில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் இம்மன்னனின் ஆட்சி பிடிக்கவில்லை. திருமணமான ஆண்களுக்கு தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு அரச படையில் இணைய விருப்பமிருக்கவில்லை. இதை அறிந்த மன்னன் ஆண்கள் திருமணம் செய்யாதுவிட்டால் படையில் இணைந்து கொள்வார்கள் என்பதற்காக ஆண்களைத் திருமணம் செய்யாது தடுப்பதற்காக சட்டமொன்றை உருவாக்கினான்.



அச்சட்டத்தை வெலன்ரைன் முற்றாக நிராகரித்தார். தவிரவும் தன்னைத் தேடிவரும் இளைஞர்களுக்கு இரகசியத் திருமணமும் செய்துவைத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சிரையிலிருந்த வெலன்ரைன் சிறை அதிகாரியின் மகளின் காதலில் விழுந்தார்.



கி.பி.269 ஃபெப்ரவரி 14ம் திகதியன்று தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்று தெரிந்துகொண்ட வெலன்ரைன் சிறை அதிகாரியின் மகளுக்கு “உங்கள் வெலன்ரைனிடமிருந்து காதல்” (Love From Your Valantine) என்று குறிப்பொன்றில் எழுதிக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார்.



அன்றைய நாளே இன்றுவரை வெலன்ரைன் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் தமது காதலைப் பறிமாறிக் கொள்வதும், தமது காதலை நினைவுபடுத்தும் முகமாக பரிசுப் பொருட்களை வழங்குவதும் வழக்கமாகிவிட்டது.
           


ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி எஸ்தர் ஹோலன்ட் என்பவர்தான் முதல் வெலன்ரைன் அட்டையை அனுப்பியவராம்.



ரோமச் சக்கரவர்த்தி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காதலர் தினம் ரோம் அரசி யூனோவைக் கெளரவிக்குமுகமாக ஃபெப்ரவரி 14 இல் விடுமுறை தினமாக்கப்பட்டதாகவும், ரோமர்கள் யூனோவைப் பெண் தெய்வம் என்றும், திருமணங்களுக்கான தெய்வம் என்றும் கருதியதால் ஃபெப்ரவரி 15 ஐ பெரிய விழாவாகக் கொண்டாடுவதாகவும் ஒரு தகவல் உண்டு.



ஃபெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் வழக்கம் முன்னரைவிட அண்மைய காலங்களில்தான் அதிகரித்து வருகின்றது. வானொலி, தொலைக் காட்சிகளில் காதல் வாரம் என்று கொண்டாடப்படும் அளவிட்கு காதலர் தின மோகம் அதிகரித்துவிட்டது.



காதலெனும் கடலில் மூழ்கி எழாதவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிலர் மூழ்கி கரை சேர்ந்திருக்கிறார்கள், சிலர் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் மூழ்கியே போயிருக்கிறார்கள்.



தமது காதல் வெற்றி பெறும் பட்சத்தில் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும் இளைஞர்கள், காதல் தோல்வியென்றதும் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று தம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

                                       

காதல் என்பது மிகவும் புனிதமான ஒரு உறவு. இனிமையான உணர்வு, வர்ணமயமான உலகம்.

இப்படிப்பட்ட காதலின் புனிதத் தன்மையை இன்றைய இளைஞர்கள் பேணுகின்றார்களா என்றால் அது சந்தேகத்துகுரியதே.

பெரும்பாலான இளைஞர்கள் காதலை ஒரு பொழுது போக்காகவே கருதுகிறார்கள்.



கடற்கரை, பார்க், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் காதலர்கள் அநாகரீகமாக நடந்துகொள்கின்றார்கள். இவற்றினால்தான் பெரியவர்கள் காதலின் மீது வெறுப்புக் கொள்கின்றார்கள்.
                                


அன்று காதல் உள்ளத்திலிருந்து உணர்வுபூர்வமாக வெளிப்பட்டது. ஆனால் இப்போது காதல் பொழுது போக்காக மாறிவிட்டது.

கண்டதும் காதல், பார்க்காமலே காதல், செல்போன் காதல் என்பவற்றையெல்லாம் தாண்டி இப்பொழுது ஃபேஸ்புக் காதல், ஹை 5 காதல் என்று தொழில்நுட்பத்தோடு சேர்ந்து காதலின் தன்மையும் மாறிக் கொண்டு செல்கின்றது.



காதலிக்கும் போது தம்மையும் மறந்து காதலிப்பதால் பல சமூக கலாச்சார சீரழிவுகள் ஏற்படுவதுடன், காதலர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது.



காதலின் புனிதத் தன்மையைப் பேணுவதுடன், கட்டுக் கோப்புடன் காதலித்தால் வளமான எதிர்காலம் நிச்சயம் கிட்டும்.

                    

காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் Gud Luck.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நுனலும் தன் வாயால் கெடும்…...





மேஜர் ஜெனரல் சரத்ஃபொன்சேகா இலங்கை மக்களால் தேசிய வீரராகப் போற்றப்பட்டவர் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் ஹீரோவாகப் பார்க்கப்பட்டவர். இலங்கையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர். கடந்த ஜனாதிபத்தித்  தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவர். இப்படி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட சரத் ஃபொன்சேகாவின் தட்போதைய நிலை என்ன???



     
மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். வெகுவிரைவில் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற தகவல்களும் வெளியிடப்படுகின்றன.  கைது செய்யப்படும்போது அடித்து, பிடரியில் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஃபொன்சேகா அவர்களின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது
”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலையில் கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும்.”
என்ற வரிகளின் ஆழம் புரிகின்றது.

எது எப்படியிருந்தபோதும் சரத் ஃபொன்சேகாவின் கைதுக்கு பலர் அரசியல் சாயம் பூசினாலும் கைது இராணுவ சட்டத்துக்கு அமைவாகவே இடம் பெற்றதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்..
இராணுவ சட்டத்தின் 57(01)வது சரத்துகமையவே சரத் ஃபொன்சேகா கைது செய்யப்பட்டதாகவும், இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கும் காலப்பகுதியில் ஒருவர் குற்றங்களைப் புரிந்திருப்பின் அதன் பின்னரான 6 மாத காலப்பகுதிக்குள் அவர் ஓய்வு பெற்றிருந்த போதிலும் அவரை இராணுவ சட்டத்துக்கமைய கைது செய்ய முடியும். இதன் படி சரத் ஃபொன்சேகா இராணுவ சட்டதுக்கு புறம்பாக நடந்துகொண்டார் என்பது உறுதியானதன் பின்னரே கைது செய்யப்பட்டார் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடற் படையின் தலைமையகத்தில் சரத் ஃபொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மீது இராணுவத்தினரே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வார்கள். மேலும் ஃபொன்சேகா அவர்களின் மனைவி அனோமா ஃபொன்சேகா அவரை என்னேரமும் சென்று பார்வையிட அனுமதியளிக்கப் பட்டிருப்பதாகவும்  இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.




இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தான் தயார் என்று அவர் கருத்து வெளியிட்ட மறுநாளே இக்கைது இடம் பெற்றிருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் பெற்றோலை ஊற்றிவிட்டது போல இவரது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக செம கடுப்பில் இருந்த அரசாங்கத்தை இன்னும் உசுப்பேத்திவிடுவது போல் கருத்துக்களை வெளியிட்டால்….. இது தான் நடக்கும்.  சமையம் பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு இப்போது அவதிப்படுகிறார்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயத்தில் கண்டம் இருக்கும் சரத் ஃபொன்சேகாவிற்கோ வாயில்தான் கண்டம்.



ஏற்கனவே, சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் எந்த உரிமையுமில்லை என்பது போன்ற கருத்தினை வெளியிட்டு வாங்கிக்கட்டிக் கொண்டார், பின்னர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை சுட்டுக் கொன்றமை தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டு சர்சையைக் கிளப்பினார், தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசுக்கெதிராக ஏகப்பட்ட கருத்துக்களை வெளியிட்டார், தொடர்ந்து தன் மீதான துன்புறுத்தல்களை அரசு நிறுத்தாவிட்டால் அரசின் இரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்று கடந்த 30ம் திகதி இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்டார் இதெல்லாம் போதாதென்று  இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தான் தயார் என்று திருவாய் மலர்ந்தருளினார்.. இப்போது….

இலங்கையில் தற்போதைய நிலைமை, கருத்துக்களை வெளியிடுவதற்குள்ள சுதந்திரத்தின் அளவு என்பவற்றை அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
தனது பின்புலத்தை அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும். தனது பின்புலம் பலவீனமாக இருக்க அரசாங்கத்தோடு மோதுவதா..??
     


ஃபொன்சேகாவின் கருத்துக்கள் அரசாங்கத்தினை ஆட்டம் காணவைக்கும் கருத்துக்கள், சர்வதேச ரீதியில் அரசிற்கு களங்கம் ஏற்படுத்தும் கருத்துக்கள். எனவே அரசு கொஞ்சம் முந்திக்கொண்டது.

அப்போது தனக்கு சல்யூட் அடித்த கைகள் இப்போது கைதுசெய்து இழுத்துச் செல்கின்றன, அப்போது தன் கட்டளைக்கு அடிபணிந்தவர்கள் இப்போது தன்னையே விசாரிக்கிறார்கள், தனக்கு முன் எழுந்து நின்றவர்கள் இப்போது கால் மேல் கால் போட்டமர்ந்து ஏழனம் செய்கிறார்கள் இப்படியொரு நிலை முன்னாள் இராணுவத் தளபதிக்கு.



இதைத்தான் “யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே”என்று கண்ணதாசன்  எழுதினாரோ…..

தற்போது ஃபொன்சேகா அவர்களின் கைதினை எதிர்த்து நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதும் அதனைப் பொலீசார் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் அதி அழுத்தம் கொண்ட நீர்ப்பிரயோகம் செய்து கலைப்பதும் நிகழ்கின்றது.

எவ்வித பாரிய அசம்பாவிதங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதும், தேசிய வீரரின் கெளரவத்தினைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தவிரவும் சர்வதேசத்தினை சமாளிக்க வேண்டியதும், சர்வதேச தடைகள் வராமல் காத்துக் கொள்வதும் அரசாங்கத்திற்குள்ள பாரிய சவால்களாகும்.

எது எப்படியோ பழிவாங்கும் அரசியலை விடுத்து நாட்டினதும், மக்களினதும் வளமான எதிர்காலத்திக்கு வழியமைப்பது தொடர்பில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாக இருக்கின்றது.



அனைவருக்கும் திருப்தியான முடிவும், சரத் ஃபொன்சேகா அவர்களுக்கு உரிய கெளரவமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் காத்திருப்போம்……………………

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சொல்ல மறந்துவிட்டேன்....

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இறுதி நேர்முகப் பரீடசை இருக்கிறது, அதே நாளில் பல்கலைக் கழகத்தில் பரீட்சையும் இருக்கிறது என்று சொன்னேனில்லையா...????

(அதன் முடிவு என்ன..? என்ன நடந்தது என்று கேட்கவேமாடிங்களா...???    ம்ம்..... நல்ல நண்பர்கள்.  நீங்கள் கேட்காவிட்டாலும் நானே சொல்கிறேன்.)

பரீட்சையையும் வெற்றிகரமாக முடித்தேன், நேர்முகத்தேர்வினையும் வெற்றிகரமாக முடித்தேன். (அல்ஹம்துலில்லாஹ்)

பரீட்சையை முடித்துவிட்டு எப்படி நேர்முகத் தேர்விற்கு சென்றேன்.. எப்போது சென்றேன் என்பதெல்லாம் சுவாரஸ்யமான விடயங்கள். எப்ப போகனுமோ அப்ப கரெக்டா போய் சேர்ந்தேன். ( அல்லாஹ்வுக்கு எல்லா புகழும்)

உயர் அதிகாரிகளில் நல்லவர்களும், மனித நேயமிக்கவர்களும் இன்னுமிருக்கிறார்கள்.

எப்படியோ என் ஒரு வருட கனவு, முயற்சி, அர்ப்பணிப்பு எல்லாம் வீணாகிவிடவில்லை. என் அறிவிப்புத்துறை சார்ந்த பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை. தொடர்கின்றது....

அறிவிப்பாளர் என்ற இலக்கினை நோக்கிய பயணத்தில் இன்னும் போகவேண்டிய தூரமும், அடையவேண்டிய இலக்கும் ஏராழம்.

எனவே நம்பிக்கையோடும், இலட்சிய நோக்கோடும் தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றேன்.....


எல்லாம் கைகூடி வரும் என்ற நம்ம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் ஒரு வருட கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பின் முடிவு என்ன??



கடந்த 2009 ஏப்ரலில் விண்ணப்பித்து இன்றுவரை 2 குரல் தேர்வுகள், ஒரு நேர்முகத்தேர்வு 1 1/2 மாதம் உள்ளகப் பயிற்சி 1 மாதம் கலையகப் பயிற்சி என்று எல்லாவற்றையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த எனக்கு.இறுதியில் வந்தது சோதனை.

எதிர்வரும் 8ம் திகதி  மாலை 2.30க்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இறுதி நேர்முகத்தேர்வு இடம்பெற இருக்கின்றது.

இது ஏற்கனவே சொல்லப்பட்ட ஒன்றுதான். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் நேர்முகத்தேர்வு இடம்பெறவிருக்கும் நாள்தான் பிரச்சினை.

அதேநாள் காலை 9 மணிமுதல் 11 மணிவரை பல்கலைக்கழகத்தில் பரீட்சை இருக்கிறது.(பல்கலைக் கழகத்தில் எனக்கு 2ம் வருட இறுதி செமஸ்டர் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன). பல்கலைக்கழகத்திலிருந்து பஸ்சில் கொழும்பு போக குறைந்தது 6 மணித்தியாலங்கள்.(பஸ் சரியான நேரத்துக்கு வந்தால்...)

நான் என்ன செய்வது நண்பர்கள் சொல்கிறார்கள் பரீட்சையை விட்டுவிட்டு கொழும்பு போய் நேர்முகத் தேர்வினை முகம் கொடுத்துவிட்டு அடுத்த முறை பரீட்சை எழுதச் சொல்லி. ஆனால் இது முக்கியமான பாடம். நல்ல புள்ளி எடுக்க கூடிய பாடம். இம்முறைவிட்டல் அடுத்த முறை மிகவும் கஸ்டமாய்ப் போய்விடும்.

ஆனால் மோட்டார் சைகிளில் போனால் குறைந்தது 4 1/2 மணித்தியாலங்கள். பெற்றோர் சொல்கிறார்கள் மோட்டார் சைக்கிளில் போகச்சொல்லி. ஆனாலும் அது மிகுந்த நீண்ட தூர கடுமையான பயணம். மட்டுமல்ல எனக்கு மோட்டார் சைகிளில் கொழும்பு செல்ல பாதையும் சரியாகத் தெரியாது.நண்பர்களை அழைத்துச் செல்ல அவர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் பரீட்சைகள்.

நான் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப் போயிருகின்றேன். படிக்கவும் முடியவில்லை.


என் ஒரு வருட கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பின் முடிவு அவ்வளவுதானா??

இறைவன் விட்ட வழியென்று இருக்கின்றேன். பார்க்கலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS