RSS

இலங்கை அணி இம்முறை சாதிக்குமா..??

ஐ.சி.சியின் 3வது T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.


இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை/நியூசீலாந்து அணிகளும் மே.இ.தீவுகள்/அயர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

கடந்த வருடம் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டி இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் அணியிடம் தோற்று பரிதாபகரமாக கிண்ணத்தை இழந்த இலங்கை அணி இம்முறை சாதிக்குமா…?


15 பேர் கொண்ட இலங்கை அணிவருமாறு

குமார் சங்கக்கார(தலைவர்)               முத்தையா முரளீதரன்(உபதலைவர்)
தினேஸ் சந்திமால்                                 திலகரட்ன டில்சான்
சிந்தக ஜயசிங்க                                       சனத் ஜயசூரிய
மஹெல ஜயவர்தன                               சுராஜ் ரன்டிவ்
சாமர கபுகெதர                                          நுவன் குலசேகர
லசித் மலிங்க                                            ஏஞ்செலொ மெத்தியூஸ்
அஜந்த மெண்டிஸ்                                  திஸ்ஸர பெரேரா
சானக வெலெகெதர

அனுபவமும்,இளமையும், துடிப்பும் கலந்த ஒரு அணி இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. பல புதுமுக வீரர்கள் இம்முறை அறிமுகத்தை மேற்கொள்கின்றனர்.

மூத்த வீரர்களைப் பற்றிப் பார்த்தோமானால் இம்முறை நடைபெற்ற ஐ.பி.எல் போடிகளில் இலங்கையின் அதிரடி வீரர்களான சனத் ஜயசூரிய, டில்சான் ஆகியோர் சோபிக்கவில்லை. குமார் சங்கக்கார மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் (சில போட்டிகளைத் தவிர) சராசரியாகவே விளையாடினர். மஹெல ஜயவர்த்தன, லசித் மலிங்க, முத்தையா முரளிதரன் ஆகியோரே மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இதேவேளை நேற்று தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியினர் 5 விக்கட்டுகளினால் தோல்வியடைந்தனர். முரளி, மலிங்க, மெண்டிஸ் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் வானவேடிக்கை நிகழ்த்திய கபுகெதர 35 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்களையும் 3 நான்கு ஓட்டங்களையும் விளாசி ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்றார். சனத் ஜயசூரிய 33 ஓட்டங்களைப் பெற்றார். ஆனாலும் தென்னாபிரிக்க அணியினர் 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியீட்டிக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக எதிரணியினருக்கு தலையிடி கொடுக்கப்போகும் வீரர்களாக மஹெல ஜயவர்தன,ஏஞ்சலோ மெதியூஸ், லசித் மலிங்க, முரளீதரன், சனத் ஜயசூரிய, சாமர கபுகெதர ஆகியோர் திகழ்வார்கள். டில்சான் சிலவேளைகளில் திசர பெரேரா, குமார் சங்ககார ஆகியோரும் விஸ்வரூபமெடுக்கலாம்.

டில்சான் இன்னும் ஃபோமுக்கு வரவில்லை. சனத் - டில்சான் மிகச்சிறந்த அதிரடி வீரர்கள். இவ்விருவரும் ஃபோமுக்குத் திரும்பினால், பந்துவீச்சில் மலிங்க, முரளி அசத்தினால் அப்புறம் என்ன? T20 உலகக் கிண்ணம் எமக்குத்தான்.

ஐ.பி.எல் போட்டிகளில் எழுந்துள்ள சர்ச்சைகளோடு இந்திய அணியினர் குறைந்தது அரையிறுதிவரையாவது முன்னேறாதுவிட்டால் ஐ.பி.எல் போட்டிகளின் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறியே… இந்திய ரசிகர்களைத் தெரியாதா..??

இன்று நான் எதிர்பார்க்கும் இலங்கை அணி

குமார் சங்கக்கார
திலகரட்ன டில்சான்
சனத் ஜயசூரிய
மஹெல ஜயவர்தன
சாமர கபுகெதர
ஏஞ்செலொ மெத்தியூஸ்
லசித் மலிங்க
முத்தையா முரளீதரன்
திஸ்ஸர பெரேரா
சானக வெலெகெதர
அஜந்த மெண்டிஸ்

மிகச்சிறந்த போட்டியொன்றைக் காண உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

மாபெரும் கிரிக்கட் திருவிழா

ஐ.சி.சியின் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுவது வழக்கம். உண்மையில் இம்முறை நடக்கப் போகும் 3வது T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் 2011ல் தான் நடைபெற வேண்டும் எனினும் 2011ல் உலகக் கிண்ண ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறவிருப்பதால் இப்போட்டிகள் இம்முறை நடத்தப்படுகின்றன. இதன்படி அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
நாளை (ஏப்ரல் 30) மேற்கிந்திய தீவுகளில் 3-வது ஐ.சி.சி. T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் துவங்குகின்றன. இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இது 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் மீண்டும் பிரிவு E, பிரிவு F என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இது சுப்பர் 8 சுற்று எனப்படும்.

சுப்பர் 8 பிரிவில் அந்தந்தப் பிரிவுகளில் உள்ள அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடும். ஆனால் முதல் பிரிவு போட்டிகளில் பெற்ற புள்ளிகள் சுப்பர் 8 பிரிவுகளில் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.. சுப்பர் 8 பிரிவு தனி புள்ளிகளைக் கொண்டது.இந்த சுப்பர் 8 முடிவில் பிரிவு E, பிரிவு F ஆகியவற்றில் முதல் இரண்டு இடங்களில் வரும் 4 அணிகள் அரையிறுதியில் மோதும்.

அதாவது பிரிவு E யில் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு F இல் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் ஒரு அரையிறுதியிலும், பிரிவு F இல் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு E யில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் இரண்டாவது அரையிறுதியிலும் மோதும்.

பிறகு இறுதிப் போட்டி நடைபெறும்.பிரிவு விவரங்கள்

பிரிவு A : பாகிஸ்தான், வங்கதேசம், அவுஸ்திரேலியா

பிரிவு B: இலங்கை, நியூஸீலாந்து, ஜிம்பாப்வே.

பிரிவு C: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்

பிரிவு D : மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து.சுப்பர் 8 பிரிவு விவரம்:

இதில் அந்தந்தப் பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் A1, A2, B1, B2, C1, C2, D1, D2 என்று பிரிக்கப்படும்.பிரிவு "E" அணிகள்: A1, B2, C1, D2

பிரிவு "F" அணிகள்: B1, A2, C2, D1போட்டி நேர அட்டவணை

ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு B - இலங்கை/நியூசீலாந்து, கயானா

ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு D - மே.இ.தீவுகள்/அயர்லாந்து, கயனா, பகல்/இரவு

மே 1. சனிக்கிழமை, பிரிவு ‌C - இந்தியா/ஆப்கானிஸ்தா‌ன், செயின்ட் லூசியா

மே 1. சனிக்கிழமை, பிரிவு A - பங்களாதேஸ்/பாகிஸ்தான், லூசியா

மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு C - இந்தியா/தென் ஆப்பிரிக்கா, லூசியா

மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு A - அவுஸ்திரேலியா/பாகிஸ்தான், லூசியா

மே 3. திங்கள், பிரிவு B - இலங்கை/சிம்பாப்வே, கயானா

மே. 3. திங்கள், பிரிவு D - மே.இ.தீவுகள்/இங்கிலாந்து, கயானா

மே 4. செவ்வாய், பிரிவு B - நியூசீலாந்து/சிம்பாப்வே, கயானா

மே 4. செவ்வாய், பிரிவு D - இங்கிலாந்து/அயர்லாந்து, கயானா

மே 5. புதன், பிரிவு A - அவுஸ்திரேலியா/பங்களாதேஸ், பார்படாஸ்

மே 5. புதன், பிரிவு C - ஆப்கானிஸ்தான்/தென் ஆப்பிரிக்கா, பார்படாஸ்

சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள்:

மே 6. வியாழன், பார்படாஸ், A1 / D2

மே 6. வியாழன், பார்படாஸ், C1 / B 2

மே 7. வெள்ளி, பார்படாஸ், A2 / C2

மே 7. வெள்ளி, பார்படாஸ், B1 / D1

மே 8. சனிக்கிழமை, பார்படாஸ், A1 / B2

மே.8. சனிக்கிழமை, பார்படாஸ், D2 / C1

மே 9. ஞாயிற்றுகிழமை, பார்படாஸ், C2 / D1

மே 9. ஞாயிற்றுக்கிழமை, பார்படோஸ், B1 / A2

மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, A1 / C1

மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, B2 / D2

மே 11. செவ்வாய்கிழமை, செயின்ட் லூசியா, B1 / C2

மே 11. செவ்வாய்க்கிழமை, செயின்ட் லூசியா, பகலிரவு ஆட்டம், D1 / A2

மே 13. வியாழக் கிழமை, முதல் அரையிறுதி, செயின்ட் லூசியா

மே 14. வெள்ளிக்கிழமை, இரண்டாவது அரையிறுதி, செயின்ட் லூசியா

மே 16. ஞாயிற்றுக்கிழமை, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ், இறுதிப் போட்டி


முதலாவது T20 உலகக் கிண்ணத்தினை இந்திய அணி சுவீகரித்தது.

இரண்டாவது T20 உலகக் கிண்ணத்தினை பாக்கிஸ்தான் அணி கைப்பற்றியது.

மூன்றாவது T20 உலகக் கிண்ணத்தினை வெற்றிகொள்ளப்போவது யார்…???

அனைத்து கிரிக்கட் ரசிகர்களினதும் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிவிருக்கும் இந்த கேள்விக்கான் விடை தெரிய மே 16ம் திகதிவரை காத்திருக்க வேண்டும்.

மாபெரும் கிரிக்கட் திருவிழாவினைக் காண்பதற்கு இருப்பது இன்னும்
ஒரு நாள் மாத்திரமே…….

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஏற்றிவிட்டு ஏணியாய் இருக்கும் உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அக்னி இணைய வானொலியானது நேற்று தனது முதலாவது பிறந்த நாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடியது.


முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடிய அக்னி இற்கும் அங்கு கடமை புரியும் அறிவிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடந்த வருடம் 7 அறிவிப்பாளார்களுடன் தெஹிவளையில் ஆரம்பிக்கப்பட்ட அக்னி fm இன்று பல அறிவிப்பாளர்களுடனும், பயிற்சி அறிவிப்பாளர்களுடனும் வெள்ளவத்தையில் பிரமாண்டமான கட்டிடத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.

அக்னி fmமானது மாணவர்களுக்கு அறிவிப்புத் துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதோடு,அவர்களுக்கு கலையகப் பயிற்சியையும் வழங்கி அவர்கள் தொடர்ந்தும் அறிவிப்பாளர்களாகச் செயற்படவும் வாய்ப்பு வழங்குகின்றது.

கடந்த காலங்களில் அக்னி fm இல் புடம்போடப்பட்ட பல அறிவிப்பாளர்கள் தற்போது பிரபல்யமான பல வானொலிகளில் ஜொலித்துக்கொன்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த பெருமை அக்னி fm ஐயே சாரும்.


என் வாழ்வில் பல ஆரம்பங்களை ஏட்படுத்தியிருந்தது அக்னி fm என்றால் அது மிகையாகாது.

ஒரு அறிவிப்பாளனாக வானலையில் என் குரல் முதன்முதலில் ஒலித்தது அக்னி fmஇல் தான்.

ஒரு அறிவிப்பாளனாக எனக்கு முதல் ரசிகனையோ, ரசிகையையோ பெற்றுத் தந்ததும் அக்னிதான்.

ஒரு அறிவிப்பாளனாக எனக்கு முதல் விருது கிடைத்ததும் இங்குதான்.

முதன் முதலாக நான் கடமையாற்றிய கலையகமும் அக்னி fm கலையகம்தான்.


இப்படி என் அறிவிப்புத் துறையில் பல ஆரம்பங்களை அக்னி fm ஏற்படுத்தியிருந்தது. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் ஆரம்பத்தை வழங்கியது அக்னி fmதான்.

இப்படிப்பட்ட பெருமை கொண்ட அக்னி fm இன் ஆரம்ப கால அறிவிப்பாளர் என்றவகையிலும் அக்னி fm ஆரம்பித்து ஒலித்த முதல் குரல் எனது என்பதையும் எண்ணி நான் பெருமைகொள்கின்றேன்.

அக்னி fmஇன் நிர்வாகிகளான (உரிமையாளர்களான) நிசா அக்கா, வசந் அண்ணா ஆகியோரின் திறமையான நிர்வாகத்தின் காரணமாக அக்னி fm தொடர்ந்தும் சிறப்பாகப் பயணிக்கின்றது.

நிர்வாகிகளாக அல்லாமல் நல்ல நண்பர்களாக, சகோதரர்களாக, நல்ல ரசிகர்களாக அவர்கள் பழகும் விதம் அவர்களின் தனிச் சிறப்பு.

நிசா அக்கா, வசந் அண்ணா ஆகியோரின் அயராத உழைப்பும், சரியான திட்டமிடலும் தொடர்ந்தும் அக்னியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அக்னி தொடர்ந்தும் பிரகாசமாய் சுடர்விடட்டும்.

நேற்று பிறந்தநாள் சிறப்பு நிகழ்சிகளுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் நேற்று மாலை 3-6 மணிவரை தென்றலில் இதம் தரும் ரிதம் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்ததால் என்னால் அக்னி fmற்கு செல்ல முடியவில்லை. இது எனக்கு கவலையே.

இருந்தபோதும் அக்னி fm உடன் என் உறவு தொடர்ந்துமிருக்கும்.

ஏற்றிவிட்டு ஏணியாய் இருக்கும் அக்னி fmற்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

லலித் மோடிக்கு ஆப்பு ரெடி........

ஐ.பி.எல் போட்டிகளின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருகின்றது. இறுதிப் போட்டியில் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயற்பட்டுவந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் இறுதிப் போட்டியில் ஆடுவது சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. கையில் ஏற்பட்ட காயமே இதற்குக் காரணம்.அவர் விழையாடாதவிடத்து சஹீர்கான் தலைவராகலாம்.


எது எப்படியோ ஐ.பி.எல் போட்டிகள் முடிவை எட்டியிருந்தாலும் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளும், வெளியாகிவரும் தகவல்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

ஆரம்பம் முதலே ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக பல சர்ச்சைகள் நிலவி வந்தாலும் அவை லலித் மோடியின் பண பலம், அரசியல் செல்வாக்கு என்பவற்றால் முடக்கப்பட்டிருந்தன. இருந்த போதும் மெல்லப் புகைந்துகொண்டிருந்த பிரச்சினைகள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும் லலித் மோடிக்கும் இடையிலான முறுகள் நிலை காரணமாக பூதாகரமாகியுள்ளன.

ஐபிஎல் கொச்சி அணியில் ரூ.70 கோடி மதிப்புள்ள பங்குகளை தன் தோழிக்கு இலவசமாக சசி தரூர் பெற்று தந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சசி தரூர் தன் அமைச்சர் பதவியை கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஏப் 18) ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும்,லலித் மோடி தொடர்பாகவும் ஏராளமான பிரச்சினைகளும் மர்மங்களும் வெளிவரத் தொடங்கின.

இதன் ஒரு கட்டமாக ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி, தன் நெருங்கிய கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் வருமான வரித் துறை வசம் இருப்பதாக,

ஏப் 19 2010 தேதியிட்ட எகானமிக் டைம்ஸ் நாளிதழ், முதல் பக்க செய்தி வெளியிட்டிருந்தது.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடப்பதாக எகானமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியை ஐபிஎல் தலைவர் லலித் மோடி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.


இது தொடர்பில் லலித் மோடி கூறுகையில், “எகானமிக் டைம்ஸ் வெளியிட்ட சூதாட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 20/20 ஆட்டங்களின் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இதனை வெளியிட்ட எகானமிக் டைம்ஸ் நாளிதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் படும்.” என்றார்.இது இப்படி இருக்க லலித் மோடி தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தில் போட்டி முடிவுகள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே போட்டிகள் முடிவடைகின்றன. ஐ.பி.எல் தலைவர் லலித் மோடியே ஆட்டங்களின் முடிவைத் தீர்மானிப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.சில ஆண்டுகளுக்கு முன்னர் பல தோல்விகளைச் சந்தித்து வந்துள்ள லலித் மோடி ஐ.பி.எல் தலைவரான பிறகு ஒரு ஜெட் விமானம், ஒரு அதி வசதி படகு, பி.எம்.டபிள்யூ கார்கள் என்று நினைத்துப் பார்க்கமுடியாதளவு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த குற்றச் சாட்டுகள் தொடர்பில் உரிய முறையில் லலித் மோடி பதிலளிக்காததால் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றுவருகின்றது.

இவரது டிவிட்டர் பதிவுகளே இவருக்கு எதிரான சந்தேகங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.

போட்டியின் இடையில் வழங்கப்படும் யுக்தி வகுப்பு இடைவேளையானது சூதாட்டக்காரர்களுக்கு போட்டி நிலைமையை மாற்ற லலித் மோடியினால் செய்துகொடுக்கப்பட்ட ஏற்பாடே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகள் அனைத்திற்கும் வி.ஐ..பி. அந்தஸ்துடன் வருகை தரும் டெல்லியைச் சேர்ந்த சமீர் துக்ரல் என்ற பிரமுகர் லலித் மோடியின் பினாமியாக சூதாட்டங்களை நடத்தி வருவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

ஐ.பி.எல் அணிகளின் வெளிப்படையான உரிமையாளர்களாக ஓரிருவரே வெளிப்படுத்தப்பட்டாலும் மறைமுகமாக பலர் இவற்றில் பங்குதாரர்களாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. பல அரசியல்வாதிகளும் முக்கிய புள்ளிகளும் தங்கள் கறுப்புப் பணங்களை ஐ.பி.எல் போட்டிகளில் முதலீடு செய்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது உசாராகியுள்ள இந்திய வருமான வரித் துறையினர் ஐ.பி.எல் இல் விழையாடிவரும் அணிகளின் உரிமையாளார்கள்,பங்குதாரர்கள்,வீரர்கள், பணத்தினை பங்கீடு செய்யும் முறை, ஏலம் மற்றும் அணியை விற்பனை செய்தமை தொடர்பான அனைத்து விபரங்களையும் கேட்டு பி.சி.சி.ஐக்கு அழைப்பானை அனுப்பியுள்ளனர். இதன் மூலமாக இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று நம்பப்படுகின்றது.


இது இப்படி இருக்க...

லலித் மோடி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களான ஐ.பி.எல் அணிகள் தொடர்பில் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவியமை, வருமான வரி மோசடி, ஐ.பி.எல் கணக்குகளில் மோசடி, தொலைக்காட்சி உரிமம் வழங்குவதில் மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரை விசாரித்து அவரது தலைமைப் பதவியைப் பறிக்க பி.சி.சி.ஐ முடிவுசெய்துள்ளது.


வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் மும்பையில் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் லலித்மோடியின் தலைவர் பதவி பறிக்கப்படும் என நம்பப்படுகிறது.


இதற்கிடையே ஐ.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டத்தை தான் மட்டுமே கூட்ட முடியும். இந்த கூட்டம் சட்ட விரோதமானது. சட்டப்படி செல்லாது என்று லலித்மோடி கூறியுள்ளார். மேலும் தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

அதோடு கூட்டத்தை மே 1-ந்தேதிக்கு தள்ளி வைக்குமாறும் கேட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ தலைவர் சசாங்க் மனோகர் இதனை மறுத்துள்ளார்.

கிரிக்கெட் வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மோடி இல்லாமலே இந்த கூட்டம் நடைபெறும். 26-ந்தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறும். அதில் எந்த விதமாற்றமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கட் வாரியமான பி.சி.சி.ஐயின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்போம்…...

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

ஏப்ரல் என்கெளன்டர்

இந்த ஏப்ரல் விடுமுறைக்கு எங்காவது போகனுமே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நண்பர் பாசித்திடமிருந்து அழைப்பு வந்தது, நாளை காலை உல்லை போவம் வாரீங்களா என்று கேட்டார். சரி என்று ஏற்றுக் கொண்டேன்.ஞாயிற்றுக் கிழமை காலை 7மணியளவில் ஊரிலிருந்து உல்லை நோக்கிய எங்கள் பயணம் ஆரம்பமானது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நாங்கள் நால்வர். ஏற்கன்வே அதிகாலையிலேயே அங்கே சென்றிருக்கும் நண்பர்களோடு இணைந்து உல்லையவே கலக்குற. இதுதான் திட்டம்.நான் எனது சகோதரரின் passion plus மோட்டார் சைக்கிளிலும், பாசித் நண்பரின் pulsar மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டோம். சம்மாந்துறையிலிருந்து உல்லை ஏறத்தாள 72கி.மீ

காலை உணவு, எரிபொருள் நிரப்பியமை என்பவற்றைச் சேர்த்து 72 கி.மீ தூரத்தை ஒன்றரை மணித்தியாலத்துக்குள் ஓடி முடித்தோம்.ஓட்டமா அது. சும்மா பறந்தோமில்ல. எனது மோட்டார் சைக்கிளின் அதியுயர் வேகம் மணித்தியாலத்திற்கு 90கி.மீ. சம்மாந்துறையிலிருந்து அக்கரைப்பற்று வரையில் சராசரியாக மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வேகத்திலும் அக்கரைப்பற்றிலிருந்து உல்லைவரை சராசரியாக மணித்தியாலத்திற்கு 85 கி.மீ வேகத்திலும் பறந்தோம். எனது மோட்டார் சைக்கிளின் பின் டயரில் எந்த விதமான தவாளிப்புகளுமே இல்ல. இப்படியானதொரு நீண்ட தூரப் பயணத்திற்கு அதனைப் பயன்படுத்தவே முடியாது, ஆனாலும் வீதிகள் எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டு நேர்த்தியாக இருந்தமையால் நம்பிக்கையோடு அதியுயர் வேகமான மணிக்கு 90 கி.மீ வேகத்தில் அதிக தூரத்தைக் கடக்க முடிந்தது.காலை 8.30 மணியளவில் உல்லை வந்தாச்சு.

அங்கிருந்த நம்ம நண்பர்களோடு இணந்து உல்லையை அதாவது கடற்கரையை உற்சாகமாய் ஒரு வலம் வந்தோம். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மக்களின் வருகை அதிகமாகவிருந்தது.உயரமான பறன் ஒன்றின் மேலேறி அக்கடற்கரையின் வனப்பைக் கண்டுகளித்தோம். அந்த பறன் மீதிருந்தே ஏராளமான புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். பின்னர் 9 மணியளவில் குளிப்பதற்காக கடலில் இறங்கினோம் சொன்னா நம்பமாட்டீங்க சுமார் 6 மணித்தியாலங்கள் கடலை விட்டு வெளியில் வரவே இல்லை.

(கடலைக் காணாமல் கண்டியா..? என்னதான் குளிச்சாலும்…….. இது போன்ற மொக்கை கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது.)பந்து மாற்றுதல், சுழியோடுதல், மணலினால் குளிப்பாட்டுதல், மணலினால் தாக்குதல், அலையை எதிர்த்து நிற்றல் என்று ஏகப்பட்ட விளையாட்டுக்கள். பந்து மாற்றி விளையாடும் போது எதிரணியைச் சேர்ந்த ஒருவனின் நகம் பட்டு எனது தோள்பட்டையில் சிறிய காயம், அதிலும் கடல் நீர் படுவதால் பயங்கர எரிச்சல் வேறு என்ன செய்ய…..இவ்வாறு 6 மணித்தியாலக் குளியல்.விளைவு ஏற்கனவே அஜித் மாதிரி அழகா வெள்ளையா இருந்த நான் கொஞ்சம் கறுப்பாகிட்டன்.

(பின்ன அந்த வெயிலுக்குள்ள 6 மணி நேரம் குளிச்சா என்ன பண்ணும்.)ஒருவாறாக அங்கிருந்து புறப்பட்டு பகல் உணவையும் உண்டுவிட்டு 3.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். இப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர். மீண்டும் சராசரியாக மணித்தியாலத்திற்கு 85 கி.மீ வேகத்தில் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.எனக்கு முன்னால் Pulsarஇல் சென்று கொண்டிருந்த பாசித்தும், றுமைஸும் (பின்னாலிருந்தவர் றுமைஸ்) விழுந்து எழும்பிக் கொண்டிருந்தார்கள். வேகமாக வந்து ஒரு வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் சறுக்கி இருவரும் விழுந்துவிட்டார்கள். மோட்டார் சைக்கிள் விழுந்து சுமார் 10 அடி தூரத்திற்கு சறுக்கிச் சென்றிருந்தது. நல்ல வேளை வீதியின் மறு ஓரத்தில் மணல் இருந்ததால் பாரிய காயங்களோ, சேதங்களோ வரவில்லை. தெய்வாதீனமாக எதிரே எந்த வாகனமும் வராததினால் ஒன்றும் நடக்கவில்லை. இல்லையேல்…………………………..

றுமைஸின் தலைக் கவசத்திலுருந்த காயத்தைப் பார்த்த போது புரிந்தது அவர் அந்த தலைக் கவசத்தைப் போடாது விட்டிருந்தால் என்ன ஆயிருக்குமென்று… உண்மையில் மரண அடி அது.எல்லாவற்றையும் சீர் செய்து கொண்டு, பயண வேகத்தைக் குறைப்பதென்ற முடிவோடு புறப்பட்ட போது பாசித்தும் றுமைஸும் கேட்ட முதல் கேள்வி எந்த வழியால நாம வந்தம், இப்ப எதால போகப்போறம் என்றதுதான். காரணம் விழுந்த அதிர்ச்சி ஒன்று மற்றது மோட்டார் சைக்கிள் சுழன்று; வந்த திசைக்கு எதிர் திசையை நோக்கியிருந்தது.வேறு ஒருவரை வாகனத்தை ஓட்டச் சொல்லிவிட்டு அவ்விருவரையும் எங்களின் மோட்டார் சைக்கிள்களில் வருமாறு அழைத்தோம், இல்லை எங்களால் சமாளிக்க முடியும் என்று அவர்கள் கூறினர், பயணம் தொடர்ந்தது.ஒலுவில் கடற்கரைக்குச் சென்று அங்கும் சிறிது நேரம் கலர்ஸ் காட்டிவிட்டு மாலை 6.30 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

மூணு மணியாயிடுச்சே இன்னும் கிளம்பலையா..??

என்ன கொடும சார் - பகுதி 2


காதல் புனிதமானது, அழகானது. இனிமையான உணர்வு அது. ஆனால் அந்தக் காதல் இப்போது அதே புனிதத் தன்மையோடு, அதே அழகோடு இருக்கிறதா என்றால் அது சந்தேகமே….
பருவகாலச் சீட்டு மாதிரி காலத்துக்குக் காலம் காதலிகளையும், காதலர்களையும் மாற்றிக் கொள்ளும் நாகரீகமே இப்போது அதிகம் உள்ளது.

உண்மையான காதல் என்றால் அந்தக் காதலின் காரணமாக படிப்பு வீணாவது, பெற்றோருடன் சண்டை வருவது, எதிர்காலம் கேள்விக்குறியாவது எதுவுமே இருக்கக் கூடாது.

பல மணி நேரம் ஃபோனில் பேசிப் பேசியே தங்கள் படிப்பையும், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கிய பல காதலர்களை நான் பாத்திருக்கின்றேன். அவர்களின் அட்டகாசங்களை எனது முன்னைய பதிவில்(என்ன கொடும சார் - 1 இல்) குறிப்பிட்டுள்ளேன்.


இன்று விகாரமகா தேவிப் பூங்கா காதலர்களைப் பற்றி…………………..

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. நம்ம நண்பர்கள் சிலரை ஒன்றாக சந்திக்க ஒரு வாய்ப்புக் கிட்டியது. எல்லோரும் சேர்ந்து மருதானையிலுள்ள சம்மாந்துறை சாப்பாட்டுக் கடையில் பகல் உணவை உண்டுவிட்டு எங்காவது போகலாம் என்று திட்டம் போட்டோம். வெயிலாக இருப்பதனால் முதலில் விகாரமகா தேவிப் பூங்கா சென்றுவிட்டு பிறகு காலிமுகத்திடல் போவதாக முடிவெடுத்தோம்.முதலில் விகாரமகா தேவிப் பூங்கா. இரண்டு மணியளவில் விகாரமகா தேவிப் பூங்கா போயாச்சு. குச்சி ஐஸ், பஞ்சுமிட்டாய், ஐஸ்கிறீம் என்று விதவிதமா வாங்கிக் கொட்டிக்கொண்டே பார்கினை ஒரு ரவுண்ட் அடிச்சா…… சீ……அத என் வாயால சொல்லணுமா…? (வாயாலதான் சொல்லனும்)


அழகான மரங்களுக்கிடையில் அசிங்கமான காட்சிகள். யாரு பெத்த பிள்ளைகளோ வேற இடம் கிடைக்காமல் இங்கவந்து…………………. சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமலேயே உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என்ற எண்ணத்தில் உல்லாசம் கண்டுகொண்டிருந்தார்கள். வித விதமான கோணங்களில்.


(அப்போ... இதயெல்லாம் நானும் ரசிச்சனா என்டுதானே கேக்குறீங்க..?? எனக்கு வேற வேல இல்ல. நமக்கு தெரிஞ்ச யாராவது இருகாங்களா.. என்டு நம்ம நண்பர்களோட சேர்ந்து சும்மா ஒரு நோட்டம்விட்டன் அவ்வளவுதான்)

இந்த காட்சிகளைக் கண்டுகளிப்பதற்கென்றே இன்னுமொரு கூட்டம். கையில் கமராக்களுடன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே இருந்தது யாருக்கு பாத்துடு போறவங்களுக்கு.சரி இவற்றையெல்லாம் பார்க்க சகிக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் சரியாக 3 மணியாகும் போது காவலர்கள் எல்லோரும் விசில் ஊதிக்கொண்டு வந்தார்கள். அப்போது புதர்களுக்குள்ளிருந்தும், மறைவான இடங்களிலிருந்தும் சோடி சோடியாக ஏராளமானோர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு பேரும் எங்கிருந்தார்கள் என்று யோசிக்குமளவிற்கு எங்கெங்கெல்லாமிருந்தோ சாரை சாரையாக சோடிகள். வெளியே வந்தவர்களில் அனேகமானோர் பார்கினைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிலர் எதுவுமே நடக்காதவர்கள் போல ஆங்காங்கே அமர்ந்து கொண்டார்கள்.எனக்கு எதுவுமே புரியவில்லை. அப்போது என் நண்பன் சொன்னான். 3 மணி ஆனால் காவலர்கள் இப்படி ஊதிக்கொண்டு வருவார்களாம் அப்போது புதருக்குள் சில்மிசங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமாம். காரணம் சிறு பிள்ளைகளும், குடும்பத்தவர்களும் வரும் நேரமாம். அந்நேரத்தில் இவர்களின் லீலைகள் வருபவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடுமாம்… அதனால் அவர்களை வெளியேற்றுகின்றார்களாம்….

என்ன கொடுமை சார் இது…??


அநாச்சாரங்களுக்கும், கலாச்சார சீரழிவுகளுக்கும் ஒரு களம். அவர்களின் காம லீலைகளை அரங்கேற்ற ஒரு மேடை. தேவையா இது…. அதுவும் 3மணிவரை எதுவேண்டுமானாலும் பண்ணலாம் 3 மணிக்கு பின்னர் வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு வேறு.. ஏன் 3 மணிக்கு முன்னர் எந்தச் சிறு பிள்ளைகளும் பார்க்கிற்கு வருவதில்லையா?? இல்லை எவரும் குடும்பத்தோடு வருவதில்லையா?அநேகமாக குடும்பத்தோடு சுற்றுப் பயணம் வருபவர்களும், சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்களும் தங்கள் பகலுணவை இங்குதான் வந்து உண்பார்கள். அவர்களுக்கு இவை அசெளகரியமில்லையா?? இவர்களின் காமக் கூத்துகளைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்கள் வழி கெட்டுவிடாதா?இந்த சோடிகளுக்கு வேண்டுமானால் தனியே ஒரு காட்டினை உருவாக்கி அங்கே விதம் விதமான புதர்களையும் வளர்த்து ”மனிதர்கள் உட்செல்லத் தடை” என்று பெயர்ப்பலகையையும் கொழுவிவிட்டால் எந்த இடையூறுமில்லாமல் உல்லாசம் காணுவார்களே இந்தக் கிராதகர்கள்.மாலை 3 மனியளவில் விகாரமகா தேவிப் பூங்கா வாசலில் நின்று கொண்டால் நிறையப் பேரின் வண்டவாளங்களை கண்டுவிடலாம்.

(அப்பாடா ஏதோ நம்மளால முடிஞ்சது… இனி நம்ம வேலையப் பாப்பம்…..)

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS