RSS

உலகக் கிண்ணக் கிரிக்கற் 2011-கரகோசம் செய்து செய்து வாங்க


உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 21 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் உலகெங்கும் அதற்கான பரபரப்புகள் அதிகரித்துவருகின்றன.

கிரிக்கட்டின் திருவிழாவான உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளை கண்டுகளிக்க உலகெங்குமுள்ள பலகோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

அனைத்து அணிகளும் தங்களைத் தயார்படுத்தலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் ரசிகர்களும் தத்தமது அணியினரை உற்சாகப்படுத்த பல்வேறு வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இலங்கையிலும் பல்வேறு தரப்பினரும் எமது இலங்கை அணியினரை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
உலகக் கிண்ணத்தின் பிரமாண்ட மாதிரியை உருவாக்கி அதில் நாடு பூராகவும் உள்ள ரசிகர்களின் கைகளைப் பதித்து வரும் நடவடிக்கை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கின்றது.

மறுபுறம் நூலினால் மிகப்பிரமாண்ட தோல்பந்தை உருவாக்கும் முயற்சியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவை  இப்படி இருக்க இலங்கை அணியினரை ஊக்கப்படுத்தும் முகமாக 2011 உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே இது வெளியிடப்பட்டிருந்தாலும் எனக்கு இப்போதுதான் துல்லியமான முழுப்பாடலையும் பெற முடிந்தது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

பாடல் ,காட்சி அமைப்பு, நடனம் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் ஒரே ஒரு குறை, கிரிக்கட் காட்சிகளாக டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட காட்சிகளை மட்டுமே இணைத்துள்ளனர். அதுதான் குறை அதைவிடுத்து பாடல் சூப்பர்

என்ன தினவன்ன- வாங்க மச்சான் கரகோசம் செய்து வாங்க

வாங்க... வாங்க வாங்க வாங்க மச்சான் வாங்க
கரகோசம் செய்து செய்து வாங்க
வாங்க வாங்க வாங்க மச்சான் வாங்க
ஜயகோசம் செய்து செய்து வாங்க.


2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் இலங்கை அணிக்கான பாடல்



1996ம் ஆண்டு உலகக்கிணத்தைப் பெற்ற பின்னரான பாடல்



இந்தவேளையில் ஐ.சி.சியின் மைதான பரிசோதகர்கள் அண்மையில் உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் நடைபெறவுள்ள அனைத்து மைதானங்களுக்குமான தமது விஜயத்தினை  மேற்கொண்டிருந்தனர். இதில் இலங்கையின் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட 3 மைதானங்களினதும் ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக கூறியதோடு மேலதிக வேலைகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் இந்திய மைதானங்களில் கொல்கத்தா ஈடுன் காடுன் மைதானம் மட்டும் உரிய நேரத்திற்குள் முக்கிய வேலைகளை முடிக்கத்தவறியதாகக் கூறி ஐ.சி.சியானது ஈடுன் காடுன் மைதானத்தை உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் மைதானப் பட்டியலில் இருந்து அகற்றிவிட்டது.

இதற்குப் பகரமாக மாற்று மைதானம் குறித்த ஆலோசனை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரும் இலங்கை -இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியொன்றில் ராஜ்கோர்ட் கிரிக்கற் மைதானம் ஆடுகளத்தின் மோசமான நிலமை காரணமாக சில ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்த மைதானத்திற்கும் ஐ.சி.சியானது ஒருவருடத் தடை மற்றும் அபராதம் விதித்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

உலகின் மிகச் செல்வந்த கிரிக்கற் சபையான இந்திய கிரிக்கற் சபையின்  கண்காணிப்பு, மற்றும் நிருவாகத்தின் கீழ் இருக்கும் இம்மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலமை மிகவும் கவலையானதும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பாரிய அவமானமுமாகும்


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்


அப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்


நம்ம அப்புக் குட்டி ஒரு பிரபலமான அரசியல்வாதி என்பது நம்ம எல்லாருக்குமே தெரியும்.
ஒரு நாள் அப்புக்குட்டிட கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் இது.

அன்னைக்கு அப்புக்குட்டி அலுவலகத்துல ரொம்ப பிசி.

திடீர்னு அப்புக்குட்டிட அறைக்குள்ள இருந்து சத்தம். உடனே அவரின் செயலாளர் ஓடிவந்து என்னாச்சுன்னு பார்த்தா மேசையில இருந்த ஃபைல் எல்லாம் கீழ சிதறிக் கிடக்கு,

அப்புக்குட்டி கோபத்தின் உச்சத்துல இருந்தாரு.செயலாளருக்கு ஒன்னுமே புரியல

செயலாளர் : என்னாச்சு சார்..?

அப்புக்குட்டி தன் கைல இருந்த கடிதத்த செயலாளர்கிட்ட நீட்டினார். கடித உறைல முகவரி எழுதும் இடத்தில் முகவரி எதுவுமில்லாமல்
இலங்கையில் உள்ள மிகப் பெரிய அயோக்கியனுக்கு
என்று மட்டும் எழுதி இருந்தது.


செயலாளர் : விடுங்க சார் யாரேனும் ஒரு விசமி எழுதி இருப்பான். இதுக்கெல்லாம் நீங்கள் ஏன் சார் நீங்க ஆத்திரப்படணும்?

அப்புக்குட்டி : இதை எழுதினவனைப் பற்றி நான் கோபப்படவில்லை. ஆனால் இது எனக்குரியது என்று நினைத்து எனக்கே அனுப்பி வைத்திருக்கிறானுகளே.. இந்த தபால் திணைக்களத்தில் உள்ளவனுகள். அவனுகளை நினைத்தால்தான் எனக்கு ரத்தம் கொதிக்கிறது…..


ஹி ஹி ஹி எப்புடித்தான் கண்டு பிடிக்குறாய்ங்களோ


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுட்ட பாடலும் சுடாத பாடலும்-1

தமிழ் இசையமைப்பாளர்கள் சிலர் தமது சில பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பல வேற்றுமொழிப் பாடல்களில் இருந்துதான் இசையை உருவி இருக்கிறார்கள். சிலர் நாசூக்காக உருவியிருக்கிறார்கள். சிலர் நேரடியாக முழுவதுமாகவே சுட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக நான் ஒரு தேடலிட்டபோது பல பாடல்கள் சிக்கியிருக்கின்றன. இதில் அதிக பாடல்களைச் சுட்டிருப்பவர்கள் தேவா மற்றும் ஹரிஸ் ஜெயராஜ்.

இதில் இன்னுமொரு சுவாரஸ்யம் என்னவெனில் இவர்கள் இசையில் பிரபலமான பாடல்கள் பல சுட்ட பாடல்களாகவே இருப்பதுதான்.
இவற்றை ஒன்னொன்னாக பதிவிடலாமென நினைக்கிறேன்.

இந்தப் பாடல்களை நீங்கள் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். அப்படி கேட்டிருக்காதவர்களும் கேட்டு மகிழட்டுமே என்ற ஒரு உயர் சமூக சிந்தனைதான்(?) இந்தப் பதிவு.

இந்தவகையில் பாடல் என்கவுண்டரில் அதிக சூட்டிங்  நிகழ்த்தியுள்ள ஹரிஸ் ஜெயராஜின் பாடல்களை முதலில் அம்பலப்படுத்துவோம்.

சுட்டபாடல்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல்: கரு கரு விழிகளால்
சுட்டவர்: ஹரிஸ் ஜெயராஜ்


சுடாத பாடல்
பாடல் : Hit you with the real thing(2005)
இசையமைத்தவர் : Westlife

எப்புடீ........??????

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார் 

இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள்

அந்தத் தந்தை சொன்னார்
நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” 
அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

”ஒரு நாள் மதிய வேளையில் நானும் என் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து என்னிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”


எனக்கு என் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்கவே தயக்கமாக இருந்தாலும்  அவர்களிடம் கேட்டுவைப்பதில் தவறில்லை என்று எண்ணினேன். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டேன்.

என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக என்னிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த எனக்கு மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.


பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு பந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும். 

ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச;  ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான்.

முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.

மைதானத்தில் ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட எனது கண்களில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்  போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர்.அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது. 
என்று கண்ணீர் மல்க,விம்மிய குரலில் சொல்லி முடித்தார் அந்தத் தந்தை

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.


இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம்  முயற்சிப்போமா?

** சகோதரர் ஒருவர் தனக்கு வந்த மின்னஞ்சல் என்று சொல்லி அவரது ஃபேஸ்புக் குறிப்பில் இட்டதை நான் படித்த போது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது,மனதை உருக்கிவிட்டது. அதை உங்களோடும் பகிர்ந்திருக்கிறேன்.
நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்...?






Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS