RSS

எனது பாடசாலை கடந்த வருடம் கொண்டாடியிருக்க வேண்டியது வைரவிழாவா? நூற்றாண்டு விழாவா?


கிழக்கிலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட மிக முக்கியமான பாடசாலைகளின் ஒன்றுதான் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை). இங்குதான் நான் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்விகற்றேன்.

எனது பாடசாலையின் இலச்சினை
பல புத்தி ஜீவிகள் ,மேதைகள், அரசியல் தலைவர்கள்  என்று சமூகப் பொறுப்புள்ள பலரைத் தோற்றுவித்த பாடசாலைகளில் எனது பாடசாலையும் ஒன்று என்றால் அது மிகையாகது.

பல சிறப்புகளையும் வரலாறுகளையும் கொண்ட எனது பாடசாலை 03-03-1950ல் உருவானது. 1975ல் வெள்ளி விழாவைக் கொண்டாடிய எனது பாடசாலை அதன் பின்னர் பொன் விழாவையோ கடந்த வருடம் கொண்டாடவேண்டிய வைர விழாவையோ கொண்டாடவே இல்லை.

மிகப் பெரிய வரலாற்றுப் பிண்ணணியோடு தலை நிமிர்ந்து நிற்கும் எனது பாடசாலை தனது வைரவிழாவைக் கொண்டாடாமல் இருப்பது இந்தப் பாடசாலையை மிகவும் நேசிக்கும் இந்தப் பாடசாலையின் பழைய மாணவனான எனக்கு மிகுந்த கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

எனவே எனது பாடசாலையின் வைரவிழாவினைக் கொண்டாட வேண்டும், அதற்கு என்னாலான முழு முனைப்புகளையும் செய்யவேண்டும் என்ற நோக்கில் சில விடையங்களை திட்டமிட்டேன். இதை தனி ஒரு ஆளாக செய்வதினை விட ஒரு அமைப்பாக இணைந்து செய்தால் சிறப்பாகவும் வலிமையானதாகவும் இருக்கும் எனக் கருதிய நான். இத்திட்டத்தினை எங்கள் நண்பர்கள் அமைப்பான “Smart friends' organaization"  அமைப்பிடம் அமைப்பின் மாதாந்தக் கூட்டத்தில் முன் வைத்தேன். ஊர், மற்றும் பாடசாலை விடையங்களில் ஆர்வமாக களமிறங்கும் என் நண்பர்களை உள்ளடக்கிய அமைப்பு இது என்பதால் அவர்கள் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு தர உறுதியளித்ததோடு எனது தலைமையில் இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

அதே கூட்டத்தில் நான் சில விடையங்களை முன்வைத்தேன். முக்கியாமான ஒன்று எமது பாடசாலையின் அதிபர் உற்பட நிருவாக சபையினரை சந்தித்து பாடசாலை வைரவிழாவினைக் கொண்டாட வலியுறுத்தல், அவர்கள் அதில் ஆர்வம் காட்டாதுவிட்டால் ஊரில் முக்கிய புள்ளிகளாக உள்ள எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றினைத்து அவர்களின் அனுசரனையைப் பெற்று எமது SFO அமைப்பின் தலைமையில் இந்த வைரவிழாவினை நடாத்துவது என்பனவே அவையாகும்.

முதல் கட்டமாக அதிபரைச் சந்திக்க திட்டமிட்ட போது ஒரு குழப்பம். அதாவது பாடசாலை அதிபர் சில ஆசிரியர்களோடு உள்ள அதிர்ப்த்தி காரணமாக பதிவியிலிருந்து விலகி வேறு பாடசாலைக்கு மாற்றம் தரவேண்டும் என்று கோரி மாறுதல் கிடைக்கும் வரை விடுமுறையில் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து பிரதி அதிபர் தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள புதிய அதிபருக்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு நிருவாக மட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கல்கள் நீங்கி புதிய அதிபர் வரும்வரை நாங்கள் காத்திருந்தோம்.

ஓரிரு மாதங்களில் புதிய அதிபரும் கடமையைப் பொறுப்பேற்றார். எனவே அவரை சந்திக்க திட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது  எங்கள் SFO அமைப்பின் நிருவாகத்தின் கீழ் எங்கள் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளை நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற இராப்போசனத்துடன் கூடிய பிரியாவிடை நிகழ்வொன்று எங்கள அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது. அதற்கு பாடசாலை அதிபர், பிரதி அதிபர் உற்பட மேலும் சில முக்கிய ஆசிரியர்களையும் அழைத்திருந்தோம்.


அந்நிகழ்வுக்கு அதிபர் வரவில்லை பிரதி அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இதன் போது பிரதி அதிபர் தமீம் சேரின் உரைதான் மிக முக்கியமானது. என்னை மிகவும் கவர்ந்தது. குறுகிய நேர உரையாக இருந்தாலும் பாடசாலையின் வரலாற்றை சுருக்கமாகவும் அழகாகவும் விவரித்தார். அவரின் உரையை நான் மிக கூர்ந்து அவதானித்தேன். காரணம் அவரின் உரையில் பாடசாலையின் வரலாறும் பாடசாலை வைரவிழாவினைக் கொண்டாடாமல் விட்டதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் உரையின் பின்னர் வைரவிழாவினைக் கொண்டாடும் திட்டத்தினை நான் கைவிடேன்.

அவரின் உரையின் முக்கிய விடையங்கள்.
எமது பாடசாலை 1950ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1975ல் இது வெள்ளி விழாவைக் கொண்டாடியபோதும் அதன் பின்னர் பொன் விழாவையோ கடந்த வருடம் வைரவிழாவையோ கொண்டாடவில்லை. இது மிக கவலைக்குரியது. எமது பாடசாலையில் கடந்த வருடத்தை வைரவிழா வருடமாகப் பிரகடனப்படுத்தி பல முக்கிய சிறப்பு நிகழ்வுகள், கண்காட்சிகள் என பல விடையங்களை செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது. பாடசாலை வைரவிழாவுக்காக புதிதாக அமைத்த பாடசாலை பெயர்ப்பலகை கூட பொருத்தப்படாமல் அப்படியே இருக்கிறது.”

என்று வேதைனையோடு கூறினார்.

தொடர்ந்தும் அவர் பேசிய போது;
எமது வைரவிழா கொண்டாட்ட வேலைகளைக் கொண்டாடுவதற்குரிய வேலைகளை முன்னெடுத்தபோது அதைக் கேள்வியுற்ற சிலர் பாடசாலைக்கு வந்து பாடசாலை வைரவிழாவைக் கொண்டாடக்கூடாது; கொண்டாடுவதாக இருந்தால் நூற்றாண்டு விழாதான் கொண்டாட வேண்டும். ஏனெனில் எமது பாடசாலையின் வைர விழாவுக்குரிய ஆண்டு எப்பவோ சென்றுவிட்டது. எனவே பாடசாலையின் வரலாற்றைக் குழப்பாமல் கொண்டாடுவதாக இருந்தால் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுங்கள் என்று வலியுறுத்தினார்கள்.

நீங்கள் யோசிக்கலாம் என்னடா இது 1950இல் உருவான பாடசாலை 2010ல் வைரவிழாவினைத்தானே கொண்டாட வேண்டும் அது எப்படி நூற்றாண்டு விழாவாகும் என குழம்பியிருப்பீர்கள்.

ஆனால் அவர்களின் கருத்திலும் நியாயம் இருக்கிறது. காரணம் எமது பாடசாலையின் முதலாவது மாணவர் அதாவது பாடசாலை சுட்டெண் இலக்கம் 1 இனை உடைய நபர் தனது 95 (95 அல்லது 98 என நினைக்கிறேன்.)
வயதையும் தாண்டி இன்னும் உயிரோடிருக்கிறார். தனது பாலர் வகுப்பில் பாடசாலையின் முதலாவது மாணவராக இணைந்து பாடசாலையின் சுட்டெண் 1 இனையும் உடைய ஒரு நபர் 95 வயதையும் தாண்டி இருக்கிறார் என்றால் எமது பாடசாலையின் வயதும் நிச்சயம் 95 இனைத் தாண்டியதுதான்.
எனவே எமது பாடசாலை நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுதான் நியாயம். இது அவர்களின் வாதம்.

இப்படி ஒரு குழப்பம் நிலவக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் எமது பாடசாலையின் வரலாற்றினை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கவேண்டும். எமது பாடசாலை இப்போது அமைந்திருக்கும் இதே வளாகத்தினுள் முன்னர் இரு பாடசாலைகள் இருந்தன. பாலர் பாடசாலை என்றொன்றும் ஆண்கள் பாடசாலை என்றொன்றுமாக இரு பாடசாலைகள் அருகருகே இதே வளாகத்தினுள் இருந்தன.

சில காலத்தின் பின்னர் இரு பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை மிகக்குறைவாக இருந்தமையினால் செலவு மற்றும் நிருவாகச் சிக்கல் காரணமாக இரு பாடசாலைகளையும் ஒன்றாக இணைத்து கனிஸ்ட்ட பாடசாலை என்ற பொதுப் பெயரில் அது இயங்கியது. பின்னர்
1954ல் சிரேஷ்ட பாடசாலையாகவும். 1961ல் மகாவித்தியாலயமாகவும் 1977ல் மத்திய மகாவித்தியாலயமாகவும், 1986ல் மத்திய கொத்தணியாகவும் பின்னர் 1994ல் தேசிய பாடசாலையாகவும் தரம் உயர்ந்துள்ளது.

இப்படி இரு பாடசாலைகள் ஒன்றினைந்து மாணவர்களை ஒன்றினைத்ததினால்தான் இந்தக் குழப்பம்என்று கூறினார்.

இரு வேறு பாடசாலைகளினை ஒன்றாக இணைத்தபோது ஏதாவது ஒரு பாடசாலையின் மாணவர்களின் சுட்டெண்ணை மாற்றாமல் மற்றைய பாடசாலை மாணவர்களுக்கு புது சுட்டெண் வழங்கியிருக்கக்கூடும். அப்படிப்பார்த்தாலும் பாடசாலை இணையத்தளத்தில் ”03-03-1950 இல்
 சம்மாந்துறை கனிஷ்ட பாடசாலை என்று ஆரம்பமானதுஎன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரு பாடசாலைகளை இணைத்து புதிகாக ஒரு பாடசாலை உருவாக்கும் போது புதிய சுட்டெண் தானே வழங்கவேண்டும்..? முன்பிருந்த பாலர் பாடசாலையிலோ ஆண்கள் பாடசாலையிலோ படித்த ஒருவர் சுட்டெண் 1 இனைக் கொண்டிருந்தால் கூட 1950ல் இப்பாடாசாலை கனிஸ்ட்ட பாடசாலையாக மாற்றப்பட்ட பின்னர் இப்பாடசாலையில் கல்வி கற்றிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

மேலும் பாடசாலை இணையத்தளத்தில்
சம்மாந்துறை நம்பிக்கையாளர்சபையில் மர்ஹூம் மிஸ்கீன்பாவா இப்றாலெவ்வை தலைவராக இருந்தகாலத்தில் தான் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் இப்பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தில் 50 20 கட்டிடத்தையும் பள்ளிவாசல் நிர்வாக சபை கட்டிக்கொடுத்தது. கிறிஸ்தவ மிஷனரிகள் பாடசாலைகளை உருவாக்குவது போல் சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நிர்வாக சபை இப்பாடசாலையை உருவாக்கியது ”
என்றிருக்கின்றது.

அப்படியானால் முன்பிருந்த இரு பாடசாலைகளும் எங்கே இருந்தன…? அவை உண்மையிலேயே 80, 90 வருடங்களுக்கு முன்னர் உருவானவைதானா…? சுட்டெண் 1 இனை உடையவரின் தகவல்கள் சரிதானா…?

இவற்றையெல்லாம் ஆழமாக சிந்திக்கும் போது ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள்தான் என் மனதில் எழுகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் சந்தேகங்களை குழப்பங்களை தோற்றுவிக்கும் விடையங்களை ஒதுக்கிவிட்டு சரியான பதிவுகள் ஆதாரங்கள் உள்ள விடையங்களைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.  1950-03-03 இல்தான் பாடசாலை உருவானமைக்கான ஆதாரங்கள் சரியாக இருக்கின்றன எனவே அதையே பின்பற்றுவது சிறந்தது. 1975இல் எமது பாடசாலை வெள்ளிவிழாவினை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது. அதற்கு ஆதாரமாக வெள்ளிவிழா மண்டபம் என்றொரு அழகான மண்டபமும் இருந்தது.

1950ல் ஆரம்பம் என்றதற்கு எழுத்துமூல ஆதாரம் இருக்கு, 1975ல் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்றால் 2010ல் வைரவிழா கொண்டாடுவதுதானே நியாயம்.

இதை ஏன் இப்படிக் குழப்பிக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை.

ஆனால் ஒன்று, நீண்ட வரலாற்றுப் பின்னணிகொண்ட, பல சிறப்புகளைத் தாங்கிய, நான் மிகவும் நேசிக்கும் எனது பாடசாலை தன் பொன் விழாவினையும், வைரவிழாவினையும் கொண்டாடாமல் இருப்பது. மிகுந்த வேதனை அளிக்கிறது.
இனி வரும் காலங்களிலாவது பவள விழா, நூற்றாண்டு விழாக்களை சிறப்பாக கொண்டாட முன் வரவேண்டும்.

ஊர்த் தலைவர்கள், புத்தி ஜீவிகள், பழைய மாணவர்கள் ஒன்றினைந்து ஒரு கூட்டாக இந்த விடையத்தினை கையாள முன்வரவேண்டும்.


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

குமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க MCC உரையின் தமிழாக்கம் எனது குரலில்

கிரிக்கட் தொடர்பான தகவல்களை ஆர்வத்துடன் தேடி பதிவிடும் எனக்கு குமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையானது எனது வலைப்பூவில் இல்லாதது ஏதோ மாதிரி இருந்தது. எப்படியாவது சங்கக்காரவின் உரையை தமிழில் வெளியிடவேண்டும் என அவ்வுரையின் ஆங்கில உரையை தேடி எடுத்தால் அது மிக நீண்டதாகவும் தமிழ்படுத்த அதிக நேரம் தேவைப்படுவதாகவும் இருந்தது.

இதனால் அதனைக் கைவிட்டுவிட்டு தமிழில் எங்காவது கிடைக்குமா எனத் தேடிய போதுதான் வீரகேசரிப் பத்திரிகையில் அது வெளிவந்தது. அதுவும் கூட பத்திரிகையின் ஒரு முழுப்பக்கத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது.
அத்தமிழாக்கம் கூட வரிக்கு வரி மொழிமாற்றம் செய்யப்படாமல் சங்காவின் உரையின் முக்கிய விடையங்களை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்தது.

அதை தட்டச்சு செய்து பதிவிடலாம் என முயற்சித்த போதுகூட மிகவும் கடினமாக இருந்ததோடு அதிக நேரமும் தேவைப்பட்டது இதனால் சோம்பல் மிகையானதால் அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டு மாற்று வழியை யோசித்தபோதுதான் அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிடும் எண்ணம் தோன்றியது. அதன் பிரதிபலந்தான் இது.

இதனை ஒலிப்பதிவு செய்வதற்கு அமைதியான, தனியான சூழலை தேடியலைந்ததில் சில நாட்கள், ஒலிச்சேர்க்கை,ஒளிச் சேர்க்கை செய்ய சில நாட்கள் அதனை youtube இல் பதிவேற்ற சில நாட்கள் என பல நாட்களைக் கொள்ளையடித்த பின்னர்தான் இப்படி ஒரு பதிவை என்னால் இட முடிந்தது.

கொஞ்சம் காலம் கடந்த பதிவு என்றாலும் ஆர்வமாக இடும் பதிவு இது.

குறிப்பு :
இது வரிக்கு வரி மொழிமாற்றமல்ல, சங்காவின் உரையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தமிழாக்கமாகும்.

சங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 1
சங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம்  2சங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம்  3சங்காவின் உரையின் தமிழாக்கத்தினை MP3யாக கேட்க/பதிவிறக்க.
Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இங்கிலாந்து தொடர் இனம் காட்டிய இலங்கையின் இளம் கிரிக்கட் நாயகர்கள்

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள்ஒரு 20-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நீண்ட தொடர் நிறைவுக்கு வந்துவிட்டது.

இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடர்.
உலகக் கிண்ணத்தொடரின் பின்னர் இடம்பெறும் முதலாவது தொடர்.
இரு அணிகளுக்கும் புதுத் தலைவர்கள்இரு அணிகளிலும் சில சில மாற்றங்கள் சில புதுமுகங்கள் என்று இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது.

இரு தலைவர்களும் தங்களை நீருபிக்கவேண்டியிருந்ததும் இந்தத் தொடர் முக்கியாமாவதற்குக் காரணமாகும்.

இப்படியான ஒரு தொடரில் டெஸ்ட் போட்டிகளை 1-0 என்றும் ஒரு நாள் போட்டிகளை 3-2 என்றும் இங்கிலாந்து கைப்பற்ற 20-20 போட்டியை மட்டும் இலங்கை வென்றது.

இந்தத் தொடரிலே ஒரு நாள் போட்டிகளின் போதுநான் அவதானித்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவல்கொள்கின்றேன்.

அணித்தலைவர் டில்சான்:

 இலங்கை அணியின் முழு நேர அணித்தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் டில்சான் தலைமைதாங்கிய முதலாவது தொடர்இந்தத் தொடர் ஒரு தலைவராகவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை ஒரு துடுப்பாட்ட வீரராகவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை.
போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தார்அவர் அமைத்த களத்தடுப்பு வியூகங்களும் சாதாரண ஒரு களத்தடுப்பு வியூகமே தவிர எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவேயில்லை.

டில்ஸான்…. துடுப்பாட்டத்தில் வெற்றிகரமாக சொதப்புவதற்கு தலைமைத்துவ அழுத்தம்தான் காரணமா என எனக்குத் தெரியவில்லைஇனிவரும் தொடர்கள்தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்.

டில்சான் சில பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் தலைவராக நியமிக்கப்பட்டார்இந்த நிலையில் அவரது துடுப்பாட்ட பெறுபேறுகளும் போட்டிப் பெறுபேறுகளும் இப்படியே அவருக்கு பாதகமாக அமையுமானால் டில்சான் தனது தலைமைத்துவப் பதவியை இழப்பது நிச்சயம்இந்த போட்டிகளிலும் ஒரு போட்டியலாவது அணியின் தலைவர் ,அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் என்ற எந்த ஒரு பொறுப்புணர்வோநிதானமோ அவரிடம் காணப்படவில்லை.

இதற்கு மாற்றமாக இங்கிலாந்து அணித்தலைவர் குக், இவர் டில்சானை விட வயது அடிப்படையிலும் போட்டிகள்அனுபவம் அடிப்படையிலும் மிக இளையவர். இவரிடம் இருக்கும் பக்குவம்பொறுமைநிதானம் டில்சானிடம் துளியும் இல்லை.
நடந்த போட்டிகளிலும் குக் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் 298 டில்சான் பெற்றுக்கொண்டது வெறும் 17 ஓட்டங்கள்.

இவையெல்லாவற்றையும் வைத்து இலங்கை இங்கிலாந்து தலைவர்களை ஒப்பிட்டு  ஒரு வரியில் கூறினால்
எல்லாவகையிலும் திலகரத்ன டில்ஸான் < அலிஸ்டயர் குக்

இந்தத் தொடரில் இலங்கைக்கு பாதகமாக அமைந்த மற்றுமொரு விடையம் உபதலைவர் திலின கண்டம்பிஅவரை அணிக்குள் எடுத்ததே தவறு அதற்குள் அவரை அணியின் உபதலைவராக வேறு நியமித்தது நகைப்புக்குரியது.
 தலைவர் டில்சான் மற்றும் உபதலைவர் கண்டம்பியின் Out of form காரணமாக  துடுப்பாட்டவீரர்கள் இருந்தும் இல்லாமலேயே இலங்கை அணி ஒவ்வொரு போட்டியிலும் ஆடியது.

அடுத்தவர் நுவன் குலசேகரஒரு காலத்தில் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் முதலாமிடத்திலிருந்த இவருக்கு நடந்தது என்ன.? பந்துவீசில் வேகம் இல்லை பெரிதாக ஸ்விங்குமில்லைகுலசேகர சிறந்த ஃபோமிற்குத் திரும்பி தன்னை மீள நிரூபிக்காவிட்டால்  அடுத்தடுத்த தொடர்களில் அவரின் இடம் பறிபோவது உறுதி.


இவை ஒரு புறமிருக்க இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கு பல சாதகத்தன்மைகளை வெளிக்காட்டியிருக்கிறது,.
அதுதான் இலங்கை கிரிக்கட்டின் எதிர்கால நாயகர்களை,  அற்புதமான இளம் நட்சத்திரங்களை இனம் காட்டியிருக்கிறது.அவர்கள்தான்
டினேஸ் சந்திமால்,ஜீவன் மென்டிஸ்,அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் சுராஜ் ரந்தீவ்  கூடவே சுரங்க லக்மாலையும் இணைத்துக்கொள்ளலாம்.


ஏஞ்சலோ மெத்யூஸ்: (24 வயது ஜொலிக்கும் வைரம் எதிர்கால captain cool )


இலங்கை கிரிக்கட்டுக்கு கிடைத்த அழகான வைரம்அணிக்கு வந்த நாள் முதல் சிறந்த ஃபோமில் உள்ள ஒரு வீரர் என்றால் அது மெத்யூசாகத்தான் இருக்கும்இளமையாக இருந்தாலும் ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சிபொறுமைநிதானம்ஆளுமைஅதிரடிஎன்ன ஒரு அற்புதமான வீரர் இவர்என்னை மட்டுமல்ல இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் மெத்யூஸ்தான்.  மெத்யூஸ் ஒரு சிறந்த வீரர் என்பதை இனம்காட்டிய தொடர் இதுவல்ல என்றபோதும் அவரை இன்னும் புடம்போட்டுக்காட்டியது இந்தத் தொடர்தான்.

எந்தக் கட்டத்திலும் நிதானம்,பொறுமைஉதட்டில் மெலிதான புன்முறுவல்… ம்ம் அற்புதம்.
நான் உற்பட என் பல நண்பர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விடையம் இலங்கை அணியின் எதிர்கால Captain Cool ஏஞ்சலோ மெத்யூஸ்தான்"

இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தொடருக்கும் இலங்கைத் தெரிவாளர்கள் வீரர்களைத் தெரிவுசெய்யும் போது பிள்ளையார் சுழி போல் முதலில் மெத்யூசை தெரிவு செய்து எழுதிவிட்டுத்தான் தலைவர் உட்பட ஏனைய 14 பேரையும் தெரிவு செய்வார்கள்.

போட்டிக்குப் போட்டி தன்னை நிரூபித்து வளப்படுத்தி வரும் இந்த வைரம்நாட்கள் செல்லச்செல்ல இன்னும் பிரகாசமாய் ஒளிவீசும்.


தினேஸ்  சந்திமால்:(21 வயது லோர்ட்ஸ் நாயகன்.)

சந்திமாலுக்கு 21 வயதுதானா என்பதில் எனக்கு சந்தேகம்தான்எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் ஆற்றல்,  பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அசாத்திய தைரியம், பந்துகளை விளாசும் வேகம்பந்துகளை இடிமாதிரித்தாக்கும் வலுவான அடிகள்நிதானம் கலந்த அதிரடிஇவற்றையெல்லாம் பார்க்கும் போது சந்திமாலின் வயது உண்மையிலேயே 21 தானா என்று எண்ணத் தோன்றுகின்றது.

தனது வயதையும் மீறிய ஆற்றல் அவரிடமிருக்கிறதுஇலங்கை வீரர்கள் பெரிதும் சிரமப்படும் பவுன்ஸ் பந்துகளை இவர் லாவகமாகக் கையாள்கிறார்சிறந்த களத்தடுப்பாளரும் கூட.21 வயதிலேயே கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தி அற்புதமாய் ஆடும் இவருக்கு மிக நீண்டபிரகாசமான கிரிக்கட் எதிர்காலம் இருக்கிறது.

இந்தத் தொடரில் பெற்றுக்கொண்ட மிக நேர்த்தியான முக்கியமான சதம் மற்றும் அரைச்சதம்  மூலம் இவர் தன்னை சிறப்பாக நிரூபித்திருக்கிறார்இது இவரை அடுத்து வரும் பலதொடர்களுக்கு தெரிவு செய்யப்படக் காரணமாய் அமையும்இலங்கை அணியின் மத்திய வரிசையில் தனக்கான இடத்தை ஆணித்தரமாக பிடித்திருக்கும் இவர் இந்த இடத்திலிருந்து அகற்றப்படவேண்டுமானால் ஒன்றில் மிக மிக மோசமான அணித்தேர்வாளர்கள் இலங்கை அணியை தெரிவு செய்யவேண்டும்அல்லது அரசியல் காரணங்களாக இருக்கவேண்டும்.

மத்திய வரிசையில் இவரது அதிரடி கலந்த துடுப்பாட்டம் இவரை அடுத்த மஹெலவாக அல்லது மகெலவின் இடத்தை நீண்டகால அடிப்படையில் நிரப்பவந்த ஒருவராகக் காட்டியபோதும்இவர் ஒரு விக்காட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் என்பதால் இவரை சங்கக்காரவிற்கு பதிலீடாகக் கருதலாம்.

 ஜீவன் மென்டிஸ்: (28 வயது புன்னகை மன்னன்)

சிறந்த துடுப்பாட்ட வீரர்சிறந்த சுழல் பந்துவீச்சாளர் அற்புதமான களத்தடுப்பாளர் என்று சகல துறை ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ள வீரர்தனது 7-8 வருட அயராத போராட்டத்தின் பின்னர் தேசிய அணியில் கிடைத்திருக்கும் வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டார்.

லெக் ஸ்பின்கூக்லி என மாறுபட்ட பந்துவீச்சு முறைகளைக் கொண்ட இவர் பயன்மிக்க ஒரு துடுப்பாட்ட வீரரும் கூட.சுறு சுறுப்பாக மைதானத்தில் பிசியாக துடிப்பாக செயல்படுவது இவரது தனிச்சிறப்பு.

எனக்கு ஜீவன் மெண்டிசிடம் அதிகம் பிடித்தது அவரது பளிச்சிடும் சிரிப்புதனது அழகிய சிரிப்புடன் மைதானம் முழுதும் சுற்றிவருவார்பந்துவீசும் போது ஓட்டம் கொடுக்கும் போதும் சரி துடுப்பாட்டத்தில் இக்கட்டான கட்டம் என்றாலும் சரி எந்தக் கட்டத்திலும் இவரது முகம் இறுக்கமாகி நான் பார்த்ததே இல்லைஅதே அமைதியான சிரித்த முகத்துடந்தான் எப்பொழுதும் காணப்படுவார்.

துடுப்பாடும் போது பபிள் கம்மினை மென்றுகொண்டுசிரித்த முகத்துடன் (அரவிந்த டீ சில்வாவினைப் போல்துடுப்பு மட்டையை தனது தோளில் தூக்கிவைத்து களத்தடுப்பாளர்களை நோட்டமிடும் அழகே தனி.

பந்துவீச்சில் Short Length இல் பந்துவீசுவதை திருத்திக்கொண்டுவிட்டாரானால் அடுத்து வரும் 10 வருடங்களுக்கு இலங்கை அணியின் அசைக்க முடியாத லெக் ஸ்பின் வீசும் சகலதுறை ஆட்டக்காறர் இவர்தான்.

சுராஜ் ரந்தீவ் : (26 வயது -  வால்ப் பைய்யன்)

முத்தையா முரளீதரன் எனும் மாமனிதனின் இடத்தை நிரப்பவந்து மற்றுமொரு சிறந்த சுழல் பந்துவீச்சாளர் இவர்முரளியின் இடத்தை முழுவதும் நிரப்பமுடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் முரளியின் இடத்தை நிரப்பக்கூடிய மிகச் சிறந்த தெரிவு சுராஜ் ரந்தீவ்.

துடுப்பாட்டவீரர்களின் அசைவுகளை அவதானித்து அதற்கேற்றவாறு பந்துவீசக் கூடிய பந்துவீச்சுப் பாணிசுழலோடு சேர்த்து பெளன்ஸ் பந்துகளையும்வேகமான பந்துகளையும் வீசக்கூடிய ஆற்றல் உள்ளவர்அதற்கு அவரது உயரமும் கைகொடுக்கிறதுஇவரால் தூஸ்ரா பந்துகளையும் வீச முடியுமாயிருப்பது இன்னுமொரு சிறப்பு.

மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களத்தடுப்பின் முக்கியமான  பொயிண்ட்” இடத்தில் களத்தடுப்பில் சிறப்பாக ஈடுபடும் வீரர்.

துடுப்பெடுத்தாடும் ஆற்றலும் இவருக்குண்டுமுழு நேரத் துடுப்பாட்ட வீரர்களைப் போல் ஸ்டைலாக துடுப்பெடுத்தாடும் ஆற்றல் மற்றும் முக்கியமான தருணங்களில் நின்று நிதானமாக ஆடும் ஆற்றல் என்பவற்றை தன்னகத்தே கொண்ட அருமையான வீரர்.

இவரை முரளிக்கு ஒப்பிடுவதன் இன்னுமொரு காரணம் இவரும் பாடசாலை நாட்களில் வேகப்பந்து வீச்சாளராக இருந்து அணியின் பயிற்றுவிப்பாளரின் வேண்டுகோள் ஆலோசனையின்படி சுழல் பந்துவீச்சாளராக மாறியவர் என்பதுதான்.


சுரங்க லக்மால்: (24 வயது சீறும் புயல்)


சுரங்க லக்மால் இலங்கை அணிக்குக் கிடைத்த மற்றுமொரு அருமையான வேகப்பந்துவீச்சாளர்வேகம் ஸ்விங் பெளன்ஸ்  இவைதான் இவரின் சிறப்பியல்புபடிப்படியாக தன்னை முன்னேற்றிக்கொண்டு வரும் இவர்எதிர்காலத்தில் இலங்கை அணியில் நிரந்தட இடம்பிடிப்பார் என்பது திண்ணம்.


இவருக்கு உள்ள முக்கியமான ஒரு பிரச்சினை இவரால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பந்துவீச முடியாது என்பதுதானாம்அப்படி பந்துவீசினால் இவர் நோய்க்கு ஆளாக வேண்டிவருமாம்அதாவது இவருக்கு குறைந்த ஊட்டச்சத்து காரணமாகத்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அவர் தொடர்ந்தும் போராடிவருகிறார்இந்த விடயத்தில் சிறப்பான முன்னேற்றமேட்பட்டுள்ளதாகத் தெரிகிறதுஇது ஒரு ஆறுதலான செய்தி.


இவரும் எதிர்கால இலங்கை கிரிக்கட் அணியின் முக்கிய வீரராக வரக்கூடிய அனைத்து தகுதியும் உள்ளது.


இப்படிப்பட்ட இளமையும் திறமையுமிக்க வீரர்களை மற்றுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டிய தொடர் கவலையோடு நிறைவுபெற்றுவிட்டதுஇந்த இளம் நாயகர்களைக் கொண்ட இலங்கை அணி எதிர்காலத்தில் எப்படிச் சாதிக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கின்றேன்.

(ஒரு சந்தேகம் சந்திமால்ஜீவன் மென்டிஸ்ரந்தீவ் போன்ற வீரர்கள் இருந்தும் அவர்களின் திறமை தெரிந்தும் அவர்களை கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவுசெய்யாதுவிட்ட மர்மம்தான் என்னவோ..?)Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பாடசாலை மாணவர்களின் குடி நீர் நஞ்சூட்டப்பட்டதா..? நடந்தது என்ன?

இன்று (5/7/2011) செவ்வாய்க் கிழமை சம்மாந்துறை தாருஸ்சலாம் மகாவித்தியாலத்தில்
காலையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பாடசாலை நீர்க் குழாயில் நீர் அருந்திவிட்டு முதலாம் பாடவேளையில் வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயக்கமுற்றனர், சில மாணவர்கள் வயிற்று வலி, தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி இருப்பதாக ஆசிரியரிடம் முறையிட்டனர். இதனால் கலக்கமடைந்த ஆசிரியர் அதிபரிடம் விடயத்தை தெரிவித்தார். உடனடியா செயற்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் மோட்ட்டார் சைக்கிள் மற்றும் தங்கள் வாகனங்களில் மயக்கமுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
தொடர்ந்தும் பல மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தமையால் சம்மாந்துறை வைத்தியசாலை அம்பியூலான்ஸ் வண்டிகளில் மாணவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலை 8.30-10 மணிவரையான காலப்பகுதியில் பாடசாலைக்கும் வைத்தியசாலைக்குமிடையில் பல தடவைகள் அம்பியூலான்ஸ் வண்டிகள் மாணவர்களை ஏற்றிகொண்டு பயணித்ததை காணமுடிந்தது.


விடையத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பதறிஅடித்துக்கொண்டு  பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் விரைந்தனர்.

வைத்திய சாலையும், பாடசாலையும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. பிள்ளைகளின் பெற்றோர் அழுது புலம்பிக்கொண்டிருக்க, சம்மாந்துறை வைத்தியசாலை வெளியாற்கள் உற்செல்ல முடியாதபடி பொலீசாரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன்,
இன்று கடமையில் இல்லாத வைத்தியர்களும் உடனடியாக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
வைத்தியசாலைக்கு வெளியே குழுமி நிற்கும் ஊர் 
மக்களில் ஒரு பகுதியினர்


வைத்தியசாலைக்கு முன்னால் திரண்டிருந்த
 மக்கள் வெள்ளம்


மயக்கமுற்ற மற்றும் நோய் அறிகுறிகள் தெரிந்த மாணவர்களுக்கு மேலதிகமாக காலை பாடசாலையில் நீர் அருந்திய மாணவர்களும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர். பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களில் 74 பேர் பாதிக்கப்பட்டதாக இனம் காணப்பட்டதோடு ஏனையோர் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இனம்காணப்பட்ட 74 மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிலர் சிகிச்சைகளுக்குப்பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சிலருக்கு சிகிச்சை தொடர்ந்தது.


காலை உணவு உற்கொள்ளாமல் பாடசாலைக்குச் சென்று நீர் அருந்திய மாணவர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  சிகிச்சைகள் தொடர்கின்றன.
ஆனால் யாருக்கும் உயிராபத்தோ பாரதூரமான நோய்களோ இல்லை. இன்றே எல்லோரும் வீட்டுக்குச் செல்ல முடியுமென வைத்தியர்கள் கூறினர்.


பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தரம் 6- 10 வரையிலான மாணவர்கள்.
சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களைப் பார்வையிடும்
பெற்றோர்

சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களில் சிலர்
நடந்தது என்ன.?

தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களைக் கொண்ட சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலத்தில் மொத்தம் 6 நீர்த்தாங்கிகள் உள்ளன. இதில் சில நேரடியாக பாடசாலைக் கிணற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன சில இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கள நீரைப் பெறுகின்றன.

இந்த 6 நீர்த்தாங்கிகளில் குறிப்பிட்ட ஒரு தாங்கியில் இருந்து வரும் நீரை அருந்திய மாணவர்களே பாதிப்புள்ளாகியுள்ளனர்.


சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் தினணைக்கள அதிகாரிகள் பாடசாலைக் கிணறு மற்றும் நீர்த்தாங்கிகளை பரிசோதித்ததில் குறிப்பிட்ட ஒரு தாங்கியில் மாத்திரமே நஞ்சு கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அது எவ்வகையான நஞ்சு என்று சொல்லப்படாத போதும்
எம்.சி.பி என்றழைக்கப்படும் ஒரு வகைப் புல்லெண்ணையே இந்தத் தாங்கியில் நேரடியாகக் கலக்கப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது.
நீர் மாதிரிகள்  மேலதிக பரிசோதனைகளுக்காக   தனித்தனியாக ஒவ்வொரு திணைக்கள அதிகாரிகளாலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.


நஞ்சூட்டப்பட்ட குறித்த தாங்கியில் இருந்த நீரைப் பருகிய மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நஞ்சூட்டப்பட்ட நீர்த் தாங்கி
நஞ்சூட்டப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரைப்
பெறும் நீர்க் குழாய்கள் இரண்டில் ஒன்று.


நஞ்சூட்டப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரைப் பெறும் நீர்க் குழாய்கள் இரண்டில் மற்றொன்று.


இது குறித்து மாவட்ட வைத்திய அதிகாரி இப்றாலெப்பை அவர்கள் கூறுகையில்:


காலையில் நீர் அருந்திய அனைத்து மாணவர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 74 பேர் இனம் காணப்பட்டிருக்கிறார்கள் ஏனையோரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிகிச்சைகளின் பின்னர் சிலர் வீடு திரும்பிவிட்டனர் ஏனையவர்களுக்கு சிகிச்சை நடைபெறுகிறது.  யாருக்கும் பாரிய பாதிப்புகளோ நோய்களோ இல்லை. அவர்களும்  இன்று வீட்டுக்குச் செல்ல முடியும்.


முதற்கட்ட பரிசோதனைகளின் படி மாணவர்கள் அருந்திய நீரில் ஒரு வகை நஞ்சு கலக்கப்பட்டிருகிறது. என்ன வகை நஞ்சு என்பது இதுவரை தெரியவில்லை மேலதிக பரிசோதைகளுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.” என்றார்.
மாவட்ட வைத்திய அதிகாரி மக்களுக்கு
விளக்கமளிக்கையில்


இந்த சம்பவத்திற்கும் அண்மையில்  இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கும் சம்பந்தமிருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் அதிகமாக கலந்துகொண்டவர்கள் இப்பாடசாலை மாணவர்கள் என்பதும் இவ்வார்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இப்பாடசாலை ஆசிரியர் அதிக முனைப்புடன் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.
யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமென்றாலும் எந்தக் கோணத்திலும் சந்தேகிக்கலாம். ஆனால் உண்மை நிலை எதுவென்று தெரியாமல் கருத்துக்கூறுவது தவறு என்ற நாகரீகம் கருதி அந்தவிடையத்தைப் புறக்கணிக்கின்றேன்.


எது என்னவாக இருந்த போதும்.. பாடசாலை செல்லும் எதுவுமறியாத அப்பாவி மாணவ செல்வங்கள் மீது இப்படியான ஒரு காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்த ஈவிரக்கமற்ற காடையர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதில் எந்த மன்னிப்பிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்கக் கூடாது.
சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களின் வாக்குமூலத்தினைப் பெறும்
பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள்


பொலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் விசாரனைகள் தொடர்கின்றன.


சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோமாக


** அஹமட் சுஹைல் **


Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சந்திமால் அடி தூள் - டில்சான் ப்ளீஸ் Cool.

இன்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி என்னமோ சாதாரண போட்டிதான்... ஆனால் அதில் தினேஸ் சந்திமால் என்னும் 21 வயது இளம் வீரர் கிரிக்கட்டின் தாயகமான லோர்ட்ஸில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் பெற்றதையும்... சந்திமால் சதமடிக்க ஏஞ்சலோ மெத்யூஸ் எடுத்துக்கொண்ட விசப்பரீட்சையையும் நினைக்கும் போது உடம்பு புல்லரிக்குது.


சந்திமால் 87 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இலங்கை அணிக்கு வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவை 7 ஓவர்களில். 25 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலையில் இருக்கும் போது சந்திமாலுக்கு சதமடிக்க 6 ஓட்டங்கள் தேவை.மறுமுனையில் மெத்யூஸ்.  


தனது சக வீரர் 21 வயதேயுடைய சந்திமால் கிரிக்கட்டின் தாயகம் லோர்ட்ஸில் சதம்பெறவேண்டும் என்ற வரலாற்றுப் பதிவுக்காக  தலைவர் டில்சான் மற்றும் சக வீரர்களின் அதிர்ப்தியையும் தாண்டி மெத்யூஸ் சந்திமாலுக்கு சதமடிக வாய்ப்புக் கொடுத்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதற்காக மெத்யூஸ் தான் எதிர்கொண்ட பந்துகளையெல்லாம் தட்டித் தட்டி ஓட்டமெடுக்காமல் மறுமுணையில் இருந்த சந்திமாலுக்கு புதிய ஓவரினை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பைப் வழங்கினார்.இதன் பிரதிபலன் மெத்யூஸ் தான் எதிர்கொண்ட 21 பந்துகளி பெற்ற ஓட்டம் 1 மாத்திரமே.

இதன் காரணமாக இலகுவாக வெல்லவேண்டிய போட்டி இறுக்கமாகிவிடுமோ என்ற அச்சம் அரங்கத்திருந்த வீரர்களின் முகத்தில் தெரிந்தது. தலைவர் டில்சான் ஆத்திரமடைந்து 12வது வீரர் மூலமாக செய்தியும் அனுப்பிப் பார்த்தார்.


ஒரு கட்டத்தில் சந்திமாலே தனக்கு சதம் தேவையில்லை அணியின் வெற்றியே முக்கியம் என்று முடிவெடுத்து ஓட்டம் பெற முனைந்தபோதும் மெத்யூஸ் வலுக்கட்டாயமாக சந்திமாலை திருப்பயனுப்பியதோட சந்திமாலுக்கு மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சதமடிக்க உதவினார்.


அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவை சதமடிக்க 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சந்திமால் அற்புதமான ஆறு ஓட்டமொன்றை விளாசி தனது அபார சதத்தைப் பெற்றுக்கொண்டபோது. பார்வையாளர் அரங்கம் நிறைந்த கரகோசம். இலங்கை அணியினரும் எழுந்து நின்று கரகோசம் செய்தபோதும் டில்சானின் முகத்தில் கோபம் கலந்திருந்தது.  ஆனால் முன்னதாக உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இதே இங்கிலாந்து அணிக்கெதிராக காலிறுதிப் போட்டியில் உபுல் தரங்க சதமடிக்க டில்சான் வாய்ப்பு வழங்கியமையும் நினைவு கூரத்தக்கது. ஆனாலும் அன்றைய நிலை வேறு இன்று நிலை வேறு. அன்று மிகவும் இலகுவான வெற்றி, 10 ஓவர்களும் 10 விக்கட்டுக்களும் கைவசம் இருந்த நிலையில் டில்சான் தரங்கவுக்கு வாய்ய்ப்பு வழங்கினார். ஆனால் இன்று கொஞ்சம் இறுக்கமான நிலை. 3 ஓவர்கள் மாத்திரம் உள்ள நிலையில் நியம துடுப்பாட்ட வீரர்களின் கடைசி ஜோடி ஆடிக்கொண்டிருந்தமையால் சற்று இறுக்கமான நிலை. அதுதான் டில்சான் உட்பட ஏனைய வீரர்களுக்கு சற்று அதிருப்தியை உண்டாக்கியது.


எப்படியோ இளம் வீரர் சந்திமால் லோர்ட்சில் இன்று பெற்றுக்கொண்ட 105* (11x4, 2x6)உடன் மொத்தமாக தான் விழையாடிய 6 போட்டிகளின் 2 சதங்களை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரு சதங்களும் வெளி நாட்டு மண்ணில் இரு பெரிய அணிகளுக்கெதிராக பெறப்பட்டமை மற்றுமொரு விசேட அம்சம்.


சந்திமாலுக்கான பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. இன்றைய சதமானது அடுத்து வரும் தொடர்களுக்கும் சந்திமால் தெரிவு செய்யப்படக் காரணமாக இருக்குமென நம்பலாம்.


நீண்ட கால அடிப்படையில் மஹெல ஜயவர்த்தனவின் இடத்தினை ஈடு செய்யப்போகும் வீரராகவே சந்திமாலை நான் ஆரம்பம் முதல் அவதானித்து வருகிறேன். மஹெலவிடம் காணப்படும் அதிரடி கலந்த நிதான ஆட்டம் சந்திமாலிடமும் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

எது எப்படியோ மெத்யூஸின் இன்றைய இந்த செயற்பாட்டை வர்ணனையாளர்களும் விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. அணியின் வெற்றிக்கு பாதகம் வரலாம் என்ற நிலையில் மெத்யூஸ் இப்படி ரிஸ்க் எடுத்தமை தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தனர். தனிப்பட்ட வீரரின் சதத்தை விட அணியின் வெற்றியே முக்கியம் என்பதையும் இளம் வீரர்களின் அனுபவமற்ற தன்மையின் வெளிப்பாடே இது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.என்றாலும் கூட இன்றை போட்டி இலங்கை அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான போட்டியாக முடிவுற்றமை திருப்தியே.


இன்றிரவு சந்திமால் மற்றும் மெத்யூசுக்கு சிரேஸ்ட்ட வீரர்களின் அறிவுரை கட்டாயம் கிடைக்கும் என நம்பலாம்.

Post Comment

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS