RSS

பாடசாலை மாணவர்களின் குடி நீர் நஞ்சூட்டப்பட்டதா..? நடந்தது என்ன?

இன்று (5/7/2011) செவ்வாய்க் கிழமை சம்மாந்துறை தாருஸ்சலாம் மகாவித்தியாலத்தில்
காலையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பாடசாலை நீர்க் குழாயில் நீர் அருந்திவிட்டு முதலாம் பாடவேளையில் வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயக்கமுற்றனர், சில மாணவர்கள் வயிற்று வலி, தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி இருப்பதாக ஆசிரியரிடம் முறையிட்டனர். இதனால் கலக்கமடைந்த ஆசிரியர் அதிபரிடம் விடயத்தை தெரிவித்தார். உடனடியா செயற்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் மோட்ட்டார் சைக்கிள் மற்றும் தங்கள் வாகனங்களில் மயக்கமுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விரைந்தனர்.




தொடர்ந்தும் பல மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தமையால் சம்மாந்துறை வைத்தியசாலை அம்பியூலான்ஸ் வண்டிகளில் மாணவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலை 8.30-10 மணிவரையான காலப்பகுதியில் பாடசாலைக்கும் வைத்தியசாலைக்குமிடையில் பல தடவைகள் அம்பியூலான்ஸ் வண்டிகள் மாணவர்களை ஏற்றிகொண்டு பயணித்ததை காணமுடிந்தது.


விடையத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பதறிஅடித்துக்கொண்டு  பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் விரைந்தனர்.

வைத்திய சாலையும், பாடசாலையும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. பிள்ளைகளின் பெற்றோர் அழுது புலம்பிக்கொண்டிருக்க, சம்மாந்துறை வைத்தியசாலை வெளியாற்கள் உற்செல்ல முடியாதபடி பொலீசாரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன்,
இன்று கடமையில் இல்லாத வைத்தியர்களும் உடனடியாக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
வைத்தியசாலைக்கு வெளியே குழுமி நிற்கும் ஊர் 
மக்களில் ஒரு பகுதியினர்


வைத்தியசாலைக்கு முன்னால் திரண்டிருந்த
 மக்கள் வெள்ளம்


மயக்கமுற்ற மற்றும் நோய் அறிகுறிகள் தெரிந்த மாணவர்களுக்கு மேலதிகமாக காலை பாடசாலையில் நீர் அருந்திய மாணவர்களும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர். பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களில் 74 பேர் பாதிக்கப்பட்டதாக இனம் காணப்பட்டதோடு ஏனையோர் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இனம்காணப்பட்ட 74 மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிலர் சிகிச்சைகளுக்குப்பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சிலருக்கு சிகிச்சை தொடர்ந்தது.


காலை உணவு உற்கொள்ளாமல் பாடசாலைக்குச் சென்று நீர் அருந்திய மாணவர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  சிகிச்சைகள் தொடர்கின்றன.
ஆனால் யாருக்கும் உயிராபத்தோ பாரதூரமான நோய்களோ இல்லை. இன்றே எல்லோரும் வீட்டுக்குச் செல்ல முடியுமென வைத்தியர்கள் கூறினர்.


பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தரம் 6- 10 வரையிலான மாணவர்கள்.
சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களைப் பார்வையிடும்
பெற்றோர்

சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களில் சிலர்
நடந்தது என்ன.?

தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களைக் கொண்ட சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலத்தில் மொத்தம் 6 நீர்த்தாங்கிகள் உள்ளன. இதில் சில நேரடியாக பாடசாலைக் கிணற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன சில இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கள நீரைப் பெறுகின்றன.

இந்த 6 நீர்த்தாங்கிகளில் குறிப்பிட்ட ஒரு தாங்கியில் இருந்து வரும் நீரை அருந்திய மாணவர்களே பாதிப்புள்ளாகியுள்ளனர்.


சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் தினணைக்கள அதிகாரிகள் பாடசாலைக் கிணறு மற்றும் நீர்த்தாங்கிகளை பரிசோதித்ததில் குறிப்பிட்ட ஒரு தாங்கியில் மாத்திரமே நஞ்சு கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அது எவ்வகையான நஞ்சு என்று சொல்லப்படாத போதும்
எம்.சி.பி என்றழைக்கப்படும் ஒரு வகைப் புல்லெண்ணையே இந்தத் தாங்கியில் நேரடியாகக் கலக்கப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது.
நீர் மாதிரிகள்  மேலதிக பரிசோதனைகளுக்காக   தனித்தனியாக ஒவ்வொரு திணைக்கள அதிகாரிகளாலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.


நஞ்சூட்டப்பட்ட குறித்த தாங்கியில் இருந்த நீரைப் பருகிய மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நஞ்சூட்டப்பட்ட நீர்த் தாங்கி
நஞ்சூட்டப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரைப்
பெறும் நீர்க் குழாய்கள் இரண்டில் ஒன்று.


நஞ்சூட்டப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரைப் பெறும் நீர்க் குழாய்கள் இரண்டில் மற்றொன்று.


இது குறித்து மாவட்ட வைத்திய அதிகாரி இப்றாலெப்பை அவர்கள் கூறுகையில்:


காலையில் நீர் அருந்திய அனைத்து மாணவர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 74 பேர் இனம் காணப்பட்டிருக்கிறார்கள் ஏனையோரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிகிச்சைகளின் பின்னர் சிலர் வீடு திரும்பிவிட்டனர் ஏனையவர்களுக்கு சிகிச்சை நடைபெறுகிறது.  யாருக்கும் பாரிய பாதிப்புகளோ நோய்களோ இல்லை. அவர்களும்  இன்று வீட்டுக்குச் செல்ல முடியும்.


முதற்கட்ட பரிசோதனைகளின் படி மாணவர்கள் அருந்திய நீரில் ஒரு வகை நஞ்சு கலக்கப்பட்டிருகிறது. என்ன வகை நஞ்சு என்பது இதுவரை தெரியவில்லை மேலதிக பரிசோதைகளுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.” என்றார்.
மாவட்ட வைத்திய அதிகாரி மக்களுக்கு
விளக்கமளிக்கையில்


இந்த சம்பவத்திற்கும் அண்மையில்  இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கும் சம்பந்தமிருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் அதிகமாக கலந்துகொண்டவர்கள் இப்பாடசாலை மாணவர்கள் என்பதும் இவ்வார்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இப்பாடசாலை ஆசிரியர் அதிக முனைப்புடன் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.
யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமென்றாலும் எந்தக் கோணத்திலும் சந்தேகிக்கலாம். ஆனால் உண்மை நிலை எதுவென்று தெரியாமல் கருத்துக்கூறுவது தவறு என்ற நாகரீகம் கருதி அந்தவிடையத்தைப் புறக்கணிக்கின்றேன்.


எது என்னவாக இருந்த போதும்.. பாடசாலை செல்லும் எதுவுமறியாத அப்பாவி மாணவ செல்வங்கள் மீது இப்படியான ஒரு காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்த ஈவிரக்கமற்ற காடையர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதில் எந்த மன்னிப்பிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்கக் கூடாது.
சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களின் வாக்குமூலத்தினைப் பெறும்
பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள்


பொலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் விசாரனைகள் தொடர்கின்றன.


சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோமாக


** அஹமட் சுஹைல் **


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Mohamed Rizad M.B. சொன்னது…

எந்த பாவமும் அறியாத சிறார்களின் உயிரோடு விளையாடிய இந்த ஈனர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும், மாறாக இறைவன் ஒருவன் இருக்கிறான் தண்டனை கண்டிப்பாக இருக்கும்...

நன்றி சுகையில் விளக்கமான தகவலுக்கு தந்தமைக்கு

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.
இந்த ஈனர்கள் மக்கள் முன்னும் சட்டத்தின் முன்னும் நிப்பாட்டப்படும் நாள் வரும்