RSS

எனது பாடசாலை கடந்த வருடம் கொண்டாடியிருக்க வேண்டியது வைரவிழாவா? நூற்றாண்டு விழாவா?


கிழக்கிலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட மிக முக்கியமான பாடசாலைகளின் ஒன்றுதான் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை). இங்குதான் நான் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்விகற்றேன்.

எனது பாடசாலையின் இலச்சினை
பல புத்தி ஜீவிகள் ,மேதைகள், அரசியல் தலைவர்கள்  என்று சமூகப் பொறுப்புள்ள பலரைத் தோற்றுவித்த பாடசாலைகளில் எனது பாடசாலையும் ஒன்று என்றால் அது மிகையாகது.

பல சிறப்புகளையும் வரலாறுகளையும் கொண்ட எனது பாடசாலை 03-03-1950ல் உருவானது. 1975ல் வெள்ளி விழாவைக் கொண்டாடிய எனது பாடசாலை அதன் பின்னர் பொன் விழாவையோ கடந்த வருடம் கொண்டாடவேண்டிய வைர விழாவையோ கொண்டாடவே இல்லை.

மிகப் பெரிய வரலாற்றுப் பிண்ணணியோடு தலை நிமிர்ந்து நிற்கும் எனது பாடசாலை தனது வைரவிழாவைக் கொண்டாடாமல் இருப்பது இந்தப் பாடசாலையை மிகவும் நேசிக்கும் இந்தப் பாடசாலையின் பழைய மாணவனான எனக்கு மிகுந்த கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

எனவே எனது பாடசாலையின் வைரவிழாவினைக் கொண்டாட வேண்டும், அதற்கு என்னாலான முழு முனைப்புகளையும் செய்யவேண்டும் என்ற நோக்கில் சில விடையங்களை திட்டமிட்டேன். இதை தனி ஒரு ஆளாக செய்வதினை விட ஒரு அமைப்பாக இணைந்து செய்தால் சிறப்பாகவும் வலிமையானதாகவும் இருக்கும் எனக் கருதிய நான். இத்திட்டத்தினை எங்கள் நண்பர்கள் அமைப்பான “Smart friends' organaization"  அமைப்பிடம் அமைப்பின் மாதாந்தக் கூட்டத்தில் முன் வைத்தேன். ஊர், மற்றும் பாடசாலை விடையங்களில் ஆர்வமாக களமிறங்கும் என் நண்பர்களை உள்ளடக்கிய அமைப்பு இது என்பதால் அவர்கள் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு தர உறுதியளித்ததோடு எனது தலைமையில் இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

அதே கூட்டத்தில் நான் சில விடையங்களை முன்வைத்தேன். முக்கியாமான ஒன்று எமது பாடசாலையின் அதிபர் உற்பட நிருவாக சபையினரை சந்தித்து பாடசாலை வைரவிழாவினைக் கொண்டாட வலியுறுத்தல், அவர்கள் அதில் ஆர்வம் காட்டாதுவிட்டால் ஊரில் முக்கிய புள்ளிகளாக உள்ள எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றினைத்து அவர்களின் அனுசரனையைப் பெற்று எமது SFO அமைப்பின் தலைமையில் இந்த வைரவிழாவினை நடாத்துவது என்பனவே அவையாகும்.

முதல் கட்டமாக அதிபரைச் சந்திக்க திட்டமிட்ட போது ஒரு குழப்பம். அதாவது பாடசாலை அதிபர் சில ஆசிரியர்களோடு உள்ள அதிர்ப்த்தி காரணமாக பதிவியிலிருந்து விலகி வேறு பாடசாலைக்கு மாற்றம் தரவேண்டும் என்று கோரி மாறுதல் கிடைக்கும் வரை விடுமுறையில் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து பிரதி அதிபர் தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள புதிய அதிபருக்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு நிருவாக மட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கல்கள் நீங்கி புதிய அதிபர் வரும்வரை நாங்கள் காத்திருந்தோம்.

ஓரிரு மாதங்களில் புதிய அதிபரும் கடமையைப் பொறுப்பேற்றார். எனவே அவரை சந்திக்க திட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது  எங்கள் SFO அமைப்பின் நிருவாகத்தின் கீழ் எங்கள் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளை நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற இராப்போசனத்துடன் கூடிய பிரியாவிடை நிகழ்வொன்று எங்கள அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது. அதற்கு பாடசாலை அதிபர், பிரதி அதிபர் உற்பட மேலும் சில முக்கிய ஆசிரியர்களையும் அழைத்திருந்தோம்.


அந்நிகழ்வுக்கு அதிபர் வரவில்லை பிரதி அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இதன் போது பிரதி அதிபர் தமீம் சேரின் உரைதான் மிக முக்கியமானது. என்னை மிகவும் கவர்ந்தது. குறுகிய நேர உரையாக இருந்தாலும் பாடசாலையின் வரலாற்றை சுருக்கமாகவும் அழகாகவும் விவரித்தார். அவரின் உரையை நான் மிக கூர்ந்து அவதானித்தேன். காரணம் அவரின் உரையில் பாடசாலையின் வரலாறும் பாடசாலை வைரவிழாவினைக் கொண்டாடாமல் விட்டதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் உரையின் பின்னர் வைரவிழாவினைக் கொண்டாடும் திட்டத்தினை நான் கைவிடேன்.

அவரின் உரையின் முக்கிய விடையங்கள்.
எமது பாடசாலை 1950ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1975ல் இது வெள்ளி விழாவைக் கொண்டாடியபோதும் அதன் பின்னர் பொன் விழாவையோ கடந்த வருடம் வைரவிழாவையோ கொண்டாடவில்லை. இது மிக கவலைக்குரியது. எமது பாடசாலையில் கடந்த வருடத்தை வைரவிழா வருடமாகப் பிரகடனப்படுத்தி பல முக்கிய சிறப்பு நிகழ்வுகள், கண்காட்சிகள் என பல விடையங்களை செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது. பாடசாலை வைரவிழாவுக்காக புதிதாக அமைத்த பாடசாலை பெயர்ப்பலகை கூட பொருத்தப்படாமல் அப்படியே இருக்கிறது.”

என்று வேதைனையோடு கூறினார்.

தொடர்ந்தும் அவர் பேசிய போது;
எமது வைரவிழா கொண்டாட்ட வேலைகளைக் கொண்டாடுவதற்குரிய வேலைகளை முன்னெடுத்தபோது அதைக் கேள்வியுற்ற சிலர் பாடசாலைக்கு வந்து பாடசாலை வைரவிழாவைக் கொண்டாடக்கூடாது; கொண்டாடுவதாக இருந்தால் நூற்றாண்டு விழாதான் கொண்டாட வேண்டும். ஏனெனில் எமது பாடசாலையின் வைர விழாவுக்குரிய ஆண்டு எப்பவோ சென்றுவிட்டது. எனவே பாடசாலையின் வரலாற்றைக் குழப்பாமல் கொண்டாடுவதாக இருந்தால் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுங்கள் என்று வலியுறுத்தினார்கள்.

நீங்கள் யோசிக்கலாம் என்னடா இது 1950இல் உருவான பாடசாலை 2010ல் வைரவிழாவினைத்தானே கொண்டாட வேண்டும் அது எப்படி நூற்றாண்டு விழாவாகும் என குழம்பியிருப்பீர்கள்.

ஆனால் அவர்களின் கருத்திலும் நியாயம் இருக்கிறது. காரணம் எமது பாடசாலையின் முதலாவது மாணவர் அதாவது பாடசாலை சுட்டெண் இலக்கம் 1 இனை உடைய நபர் தனது 95 (95 அல்லது 98 என நினைக்கிறேன்.)
வயதையும் தாண்டி இன்னும் உயிரோடிருக்கிறார். தனது பாலர் வகுப்பில் பாடசாலையின் முதலாவது மாணவராக இணைந்து பாடசாலையின் சுட்டெண் 1 இனையும் உடைய ஒரு நபர் 95 வயதையும் தாண்டி இருக்கிறார் என்றால் எமது பாடசாலையின் வயதும் நிச்சயம் 95 இனைத் தாண்டியதுதான்.
எனவே எமது பாடசாலை நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுதான் நியாயம். இது அவர்களின் வாதம்.

இப்படி ஒரு குழப்பம் நிலவக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் எமது பாடசாலையின் வரலாற்றினை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கவேண்டும். எமது பாடசாலை இப்போது அமைந்திருக்கும் இதே வளாகத்தினுள் முன்னர் இரு பாடசாலைகள் இருந்தன. பாலர் பாடசாலை என்றொன்றும் ஆண்கள் பாடசாலை என்றொன்றுமாக இரு பாடசாலைகள் அருகருகே இதே வளாகத்தினுள் இருந்தன.

சில காலத்தின் பின்னர் இரு பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை மிகக்குறைவாக இருந்தமையினால் செலவு மற்றும் நிருவாகச் சிக்கல் காரணமாக இரு பாடசாலைகளையும் ஒன்றாக இணைத்து கனிஸ்ட்ட பாடசாலை என்ற பொதுப் பெயரில் அது இயங்கியது. பின்னர்
1954ல் சிரேஷ்ட பாடசாலையாகவும். 1961ல் மகாவித்தியாலயமாகவும் 1977ல் மத்திய மகாவித்தியாலயமாகவும், 1986ல் மத்திய கொத்தணியாகவும் பின்னர் 1994ல் தேசிய பாடசாலையாகவும் தரம் உயர்ந்துள்ளது.

இப்படி இரு பாடசாலைகள் ஒன்றினைந்து மாணவர்களை ஒன்றினைத்ததினால்தான் இந்தக் குழப்பம்என்று கூறினார்.

இரு வேறு பாடசாலைகளினை ஒன்றாக இணைத்தபோது ஏதாவது ஒரு பாடசாலையின் மாணவர்களின் சுட்டெண்ணை மாற்றாமல் மற்றைய பாடசாலை மாணவர்களுக்கு புது சுட்டெண் வழங்கியிருக்கக்கூடும். அப்படிப்பார்த்தாலும் பாடசாலை இணையத்தளத்தில் ”03-03-1950 இல்
 சம்மாந்துறை கனிஷ்ட பாடசாலை என்று ஆரம்பமானதுஎன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரு பாடசாலைகளை இணைத்து புதிகாக ஒரு பாடசாலை உருவாக்கும் போது புதிய சுட்டெண் தானே வழங்கவேண்டும்..? முன்பிருந்த பாலர் பாடசாலையிலோ ஆண்கள் பாடசாலையிலோ படித்த ஒருவர் சுட்டெண் 1 இனைக் கொண்டிருந்தால் கூட 1950ல் இப்பாடாசாலை கனிஸ்ட்ட பாடசாலையாக மாற்றப்பட்ட பின்னர் இப்பாடசாலையில் கல்வி கற்றிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

மேலும் பாடசாலை இணையத்தளத்தில்
சம்மாந்துறை நம்பிக்கையாளர்சபையில் மர்ஹூம் மிஸ்கீன்பாவா இப்றாலெவ்வை தலைவராக இருந்தகாலத்தில் தான் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் இப்பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தில் 50 20 கட்டிடத்தையும் பள்ளிவாசல் நிர்வாக சபை கட்டிக்கொடுத்தது. கிறிஸ்தவ மிஷனரிகள் பாடசாலைகளை உருவாக்குவது போல் சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நிர்வாக சபை இப்பாடசாலையை உருவாக்கியது ”
என்றிருக்கின்றது.

அப்படியானால் முன்பிருந்த இரு பாடசாலைகளும் எங்கே இருந்தன…? அவை உண்மையிலேயே 80, 90 வருடங்களுக்கு முன்னர் உருவானவைதானா…? சுட்டெண் 1 இனை உடையவரின் தகவல்கள் சரிதானா…?

இவற்றையெல்லாம் ஆழமாக சிந்திக்கும் போது ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள்தான் என் மனதில் எழுகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் சந்தேகங்களை குழப்பங்களை தோற்றுவிக்கும் விடையங்களை ஒதுக்கிவிட்டு சரியான பதிவுகள் ஆதாரங்கள் உள்ள விடையங்களைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.  1950-03-03 இல்தான் பாடசாலை உருவானமைக்கான ஆதாரங்கள் சரியாக இருக்கின்றன எனவே அதையே பின்பற்றுவது சிறந்தது. 1975இல் எமது பாடசாலை வெள்ளிவிழாவினை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது. அதற்கு ஆதாரமாக வெள்ளிவிழா மண்டபம் என்றொரு அழகான மண்டபமும் இருந்தது.

1950ல் ஆரம்பம் என்றதற்கு எழுத்துமூல ஆதாரம் இருக்கு, 1975ல் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்றால் 2010ல் வைரவிழா கொண்டாடுவதுதானே நியாயம்.

இதை ஏன் இப்படிக் குழப்பிக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை.

ஆனால் ஒன்று, நீண்ட வரலாற்றுப் பின்னணிகொண்ட, பல சிறப்புகளைத் தாங்கிய, நான் மிகவும் நேசிக்கும் எனது பாடசாலை தன் பொன் விழாவினையும், வைரவிழாவினையும் கொண்டாடாமல் இருப்பது. மிகுந்த வேதனை அளிக்கிறது.
இனி வரும் காலங்களிலாவது பவள விழா, நூற்றாண்டு விழாக்களை சிறப்பாக கொண்டாட முன் வரவேண்டும்.

ஊர்த் தலைவர்கள், புத்தி ஜீவிகள், பழைய மாணவர்கள் ஒன்றினைந்து ஒரு கூட்டாக இந்த விடையத்தினை கையாள முன்வரவேண்டும்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

Mohamed Rizad M.B. சொன்னது…

உண்மையில் ஆக்க பூர்வமான பதிவு, பாடசாலையின் வரலாறு பற்றி குறிப்பிட்டது மிகவும் சிறப்பாக இருக்கிறது, அது மட்டுமில்லாமல் சிறந்த கேள்வியும் கூட (1950ல் ஆரம்பம் என்றதற்கு எழுத்துமூல ஆதாரம் இருக்கு, 1975ல் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்றால் 2010ல் வைரவிழா கொண்டாடுவதுதானே நியாயம்)- நன்றி சுகையில்

Ahamed Suhail சொன்னது…

@Mohamed Rizad M.B.
நன்றி சகோ நன்றிகள் கோடி

தங்க முகுந்தன் சொன்னது…

//எமது பாடசாலையின் முதலாவது மாணவர் அதாவது பாடசாலை சுட்டெண் இலக்கம் 1 இனை உடைய நபர் தனது 95 (95 அல்லது 98 என நினைக்கிறேன்.)
வயதையும் தாண்டி இன்னும் உயிரோடிருக்கிறார். தனது பாலர் வகுப்பில் பாடசாலையின் முதலாவது மாணவராக இணைந்து பாடசாலையின் சுட்டெண் 1 இனையும் உடைய ஒரு நபர் 95 வயதையும் தாண்டி இருக்கிறார் என்றால் எமது பாடசாலையின் வயதும் நிச்சயம் 95 இனைத் தாண்டியதுதான்.//

இந்தப் பெரியவரையும் சந்தித்து முழு விபரங்களையும் கேட்ட பின்னர் ஒரு முடிவுக்கு வரலாமே!

Ahamed Suhail சொன்னது…

@தங்க முகுந்தன்
நிச்சயமாக சகோ...

அடுத்த விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது அவரை சந்தித்து பேச ஆர்வமாய் இருக்கிறேன்.

அதுவரை அவர் நல்ல தேகாரோக்கியத்தோடும், ஞாபக சக்தியோடும் இருக்க வேண்டும்.


நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்