RSS

என் வாழ்வில் மற்றுமொரு மைல்கல்.

என் உள்ளத்து உணர்வுகளை என் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பேரவாவுடனேயே இப்பதிவினை எழுதுகின்றேன்.

2010ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே என் இலக்குகளில் ஒன்றை அடைந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் நான் திளைத்திருக்கின்றேன்.
(பில்டப் எல்லாம் போதும் விசயத்த சொல்லுப்பா என்று நீங்கள் சொல்றதெல்லாம் புரியிது நேரடியா விசயத்துக்கே வந்துவிடுகின்றேன்.)


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலின் பண்பலையில் ஒரு அறிவிப்பாளனாக எனது குரல் முதல் முறையாக ஒலித்துவிட்டது.(Alhamdhulilah)
கடந்த புதன் கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை தென்றலில் ஒலிபரப்பான “இதம் தரும் ரிதம்” நிகழ்ச்சியின் மூலமாகத்தான் எனது அறிமுகம் இடம்பெற்றது.

(13/01/2010புதன் கிழமை) இந்த ஒருநாளை அடைவதற்காக நான் கடந்துவந்த பாதையை சற்று திரும்பிப் பார்க்கின்றேன்.


கடந்த 2009ம் வருடம் ஏப்ரல் மாதம் பத்திரிகையில் வெளிவந்த பகுதி நேர அறிவிப்பாளருக்கான(Relief Announcer) விண்ணப்பங்களைக்
கோரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என்னோடு நட்போடு பழகிவந்த ரேனுகா அக்கா என்னை
அதற்கு விண்ணப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார். அவர் எனக்கு இவ்விடையத்தைச் சொல்லும் போது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு இரண்டு நாட்களே இருந்தன.
இருந்தபோதும் நான் அவ்வேளை கொழும்பில் இருந்ததால் எனது சான்றிதழ்களையும் இதர காகிதாதிகளையும் வீட்டிலிருந்து தொலை நகல்
மூலம் உடனடியாகப் பெற்று இரு நாட்களுக்குள் கிடைக்கும் வண்ணம் அனுப்பிவைக்க முடிந்தது. ரேனுகா அக்காவிற்கு எனது நன்றிகள் கோடி.

ஓரிரு மாதங்களில் எனக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து முதலாவது குரல் தேர்வுக்கு(Audition) அழைப்பு வந்தது.
அதனை வெற்றிகரமாக கடந்த அடுத்த சில வாரங்களில் நடைபெற்ற இரண்டாவது குரல் தேர்வையும் வெற்றிகரமாக முகம்கொடுத்தேன்.

அதன் பின்னர் சில வாரங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத்தேர்வில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் சரியாக
பதில்லளித்தாலும் ஒரே ஒரு விடையம் எனக்கு எதிராக அமைந்திருந்தது. அது எனக்கு எதிராக அமையும் என்று நான் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்திருந்தேன்.
அதுதான் என் பல்கலைக்கழக படிப்பு.

பல்கலைக்கழக மாணவனான என்னால் தொடர்ந்து ஒரு அறிவிப்பாளராக கடமையாற்ற முடியுமா?? ( பகுதி நேர) அறிவிப்பாளர் என்பவர்
எப்போது அழைக்கப்பட்டாலும் உடனே சென்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வேண்டும் அது என்னால் முடியுமா?? அதிலும் எனது
பல்கலைக் கழகம் இருப்பதோ மிகிந்தலையில் (அநுராதபுரம்). மிகிந்தலையிலிருந்து கொழும்பு செல்ல ஏறத்தாழ 6 மணித்தியாலங்கள் தேவை,
என்னால் முடியுமா?? அதிலும் வார நாட்களில் நிகழ்ச்சி செய்யவேண்டி வருமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கிடையில் என்னால் இது சாத்தியமா??
என் படிப்பை எவ்வித பாதிப்புமில்லாமல் கொண்டுபோக முடியுமா??
இவைதான் எனக்கிருந்த சவால்கள்.
இவ் அத்தனை கேள்விகளும் என்னிடம் கேட்கப்பட்டன.

எனக்கிருந்த சில சாத்தியக் கூறுகளைக் கூறி என்னால் முடியும் என்று சொல்லுவதைத் தவிர வேறு எந்த பதிலும் என்னிடமிருக்கவில்லை.

சரி நீங்கள் போகலாம் உங்களுக்கு முடிவை அறிவிக்கின்றோம். இதுதான் எனக்கு கிடைத்த பதில்.

அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு திரும்பிவிட்டேன். ஆனாலும் ஒரு சிறு நம்பிக்கை இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து ஒரு கடிதம். என்னை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு
அறிவிப்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் 2009/11/10 அன்று ஆரம்பமாகும் பயிற்சி நெறியில் என்னை இணைந்து கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. எப்படி இருக்கும்??

இறந்துவிட்டான் என்று நினைத்து கவலைப்பட்டு மறந்தும்விட்ட உயிர் நண்பன் திரும்பி வந்தால் எப்படியிருக்கும். அதே சந்தோசம்தான் எனக்கு.

எனது இலட்சியங்களில் ஒன்றை அடைவதற்கான முக்கியமான வாசல் திறந்துவிட்டது.
                                                            பயிற்சி ஆரம்பம்.

2009/11/10 எங்கள் பயிற்சி ஆரம்பமானது. முதல் 3 வாரங்கள் Library (சேமிப்பகத்தில்- சொல் பொருத்தமானதா என்று தெரியாது Library என்றுதான் பயன்படுத்துவார்கள்) பயிற்சிகள் இடம்பெற்றன.
இங்கே பல்லாயிரக் கணக்கான இறுவட்டுக்கள்(CD), இசைத்தட்டுக்கள்(Records), ஒலி நாடாக்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இல்லாத பழைய பாடல்கள் கொண்ட இசைத்தட்டுக்கள் கூட இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் ஒவ்வொன்றும் திரைப்படங்களின் பெயர்கள் அடிப்படையிலும், பாடல்களின் முதல் எழுத்துக்களின் அடிப்படையிலும்
வெவ்வேறாக தொகுத்தெழுதப்பட்ட பிரமாண்டமான புத்தகங்களும் இங்கே காணப்படுகின்றன. இங்கே பாடல்களைத் தொகுக்கும் விதம்,
பாடல்களைத் தேடி எடுக்கும் விதம், ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குமான பாடல் தெரிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது போன்ற
பல் வேறு விடயங்கள் சிரேஸ்ட அறிவிப்பாளர்களால் எங்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து செய்திப் பிரிவில் செய்திகளைத் திரட்டுதல் அவற்றைத் தொகுக்கும் விதம், அறிக்கைப்படுத்தல் என்பவை
தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இங்கு ஒருவாரம் சென்ற பிறகு.

புகழ் பெற்ற அறிவிப்பாளர்களால் தொடர்ச்சியான விரிவுரைகள் இடம்பெற்றன. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடித்த
பிறகு கலையக அவதானிப்பு (Obsservation) இடம்பெற்றது. முதன் முதலாக தென்றல் கலையக்த்திற்குள் செல்லும் போது ஏதோ சிகரத்தைத் தொட்டுவிட்ட உணர்வு. மிகுந்த மகிழ்ச்சியாகவிருந்தது.
இரண்டு வாரங்களுக்கு மேல் கலையக அவதானிப்பு இடம் பெற்றது.

உண்மையில் பயிற்சிக் காலத்தில் நான் மிகுந்த சிரமப்பட்டேன். காரணம் பயிற்சிகள் அனைத்தும் வார நாட்களில்
இடம்பெற்றமையினால் என்னால் பல்கலைக்கழக படிப்பையும், பயிற்சியையும் சமமாக கொண்டு போகமுடியவில்லை.
அங்கே சில நாட்கள் இங்கே சில நாட்கள் எனத் திண்டாடினேன்.

இறைவனின் அருளோடும், என் பெற்றாரின் ஆலோசனைகளோடும், சரா அண்ணா மற்றும் நண்பர்களின் ஆதரவோடும்
ஒருவாரக இவற்றையெல்லாம் கடந்து வந்துவிடேன்.


                                                முதலாவது நிகழ்ச்சி

ஏறத்தாள இரண்டுமாத பயிற்சிகளின் இறுதிக் கட்டமாக சிரேஸ்ட அறிவிப்பாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சி செய்யும் வாய்புக் கிட்டியது.

இதன்படி கடந்த 13/01/2010 புதன் கிழமை மாலை 3 - 6 மணிவரை இடம்பெற்ற இதம் தரும் ரிதம் நிகழ்ச்சிதான் என் முதலாவது நிகழ்ச்சி.
சிரேஸ்ட மூத்த அறிவிப்பாளரான கே.ஜெயகிருஷ்னா அண்ணா, சிரேஸ்ட அறிவிப்பாளர் ரஜினி அன்றூ அக்கா
ஆகியோரோடு இணைந்து முதலாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிட்டியது.

முதல் நாள் என்பதால் சற்று பயம், பதற்றம் காணப்பட்டது.
அதைவிடவும் இவ்விரு அறிவிப்பாளர்களுடனும் இணைந்து
நிகழ்ச்சியைத் தொகுக்க வேண்டும் என்பதும் என் பதற்றத்தை அதிகரித்தது. ஆனாலும் அவ்விருவரும் என்னோடு அன்பாகவும் நட்பாகவும் கதைத்து என்னை ஊக்கப்படுத்தியதோடு பேசுவதற்கு அதிக வாய்ப்புகளையும் தந்தார்கள்.
நிகழ்ச்சி ஆரம்பித்து செய்திச் சுருக்கமும் தொடர்ந்து (தேர்தல் காலம் என்பதால்) ஏராழமான விளம்பரங்களும் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் 41வது நிமிடத்தில்தான் எனக்கு பேசுவதட்கு முதல் வாய்ப்புக் கிட்டியது. தொலைபேசி நேயரோடு உரையாடும் வாய்ப்பு.
தொடர்ந்து பேச வாய்ப்புக்கள் கிடைத்தன.
அன்று இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் Idea கிண்ண இறுதிப் போட்டி இடம் பெற்றுக் கொண்டிருந்ததால் Score சொல்லும் வாய்ப்பும் கிட்டியது.

                                             மறக்கமுடியுமா???

தென்றலில் என் குரல் முதன் முதலில் ஒலித்த நேரம் : மாலை 3 மணி 41
நிமிடம்


நான் தென்றலில் பேசிய முதல் வார்த்தை : ”வணக்கம் ஹுசைன்”


முதலாவது நேயர் : ஹுசைன்


என் குரல் ஒலித்த பின்னர் ஒலித்த முதல் பாடல் : ஒரு வார்த்தை கேட்க ஒரு
வருஷம் காத்திருந்தேன்.


சக அறிவிப்பாளர்கள் : கே. ஜெயகிருஷ்ணா, ரஜனி அன்றூ


கலையகத்தின் மறுபக்கத்தில் : அனூஷா

(நன்றி சரா அண்ணா)

என் முதலாவது நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.(Alhamdhulilah)

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கூறிய கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தின.
வாழ்துரைத்த அத்துணை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இத் துறையில் பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற பேரவாவுடன் தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றேன்.(Insha Allah)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS