தேர்தலில்
நட்சத்திரங்களும்
சூரியனும்
போட்டியிட்டன
பெரும்பான்மை பலத்தால்
நட்சத்திரங்கல் வென்றன
சூரியனுக்கு
’டெபாசிட்’ பறிபோனது
நட்சத்திர அரசாங்கம்
அமைந்தது
வெளிச்சத்தைப் பேசச்
சூரியனுக்குத்
தடை விதிக்கப்பட்டது.
இருள்
அரசாங்கக் கொள்கையாயிற்று
தூக்கம்
தேசியத் தொழிலாக
அறிவிக்கப்பட்டது.
தாலாட்டு
நாட்டுப் பாடலாயிற்று
தீபங்களின் நாக்குகள்
துண்டிக்கப்பட்டன
இரவுராணிகளின் வாசம்
ஊரெங்கும்
உலா வந்தது
சூரிய காந்தி
பயந்துபோய்
‘நட்சத்திர காந்தி’ என்று
பெயர் மாற்றிக்கொண்டது
அரசாங்கத்தின் முதல் சாதனையாகப்
பாயும் தலையணையும்
இலவசமாக வழங்கப்பட்டன
கன்னக்கோல்களுக்குக்
கொண்டாட்டம்
தாமரைகள் மட்டும்
கூம்பிக் கிடந்தன
குனிந்து.
- கவிக்கோ.அப்துர் ரஹ்மான் -
