கட்டார் கணவா என்னும் இக்கவிதை வெளிநாடு சென்றுவிட்ட கணவனுக்காக தன் இழைமையோடு ஏங்கும் ஓர் இளம் மனைவியின் உளக் கிடக்கையை அப்படியே வெளிக்கொணருகிறது. இதை வாசிக்கும் போது என்னுள் என் மனதில் இனம் புரியாத பாரம். மனம் கனக்கிறது. அவளின் நிலைக்காக மனதில் பரிதாபம் மிகைக்கிறது.
நீங்களும் வாசித்துப் பாருங்களேன். அவ்வாறான ஒரு உணர்வு நிச்சயம் உங்களுக்குள் ஏற்படும்
என் கட்டார் கணவா!
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்….
என் கட்டார் கணவா!
கணவா… – எல்லாமே கனவா…….?
கணவனோடு இரண்டு மாதம்… கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா…?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ …
5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்… …
2 வருடமொருமுறை கணவன் …
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்…. முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை… கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் – நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் – நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் கட்டார் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து… தொட்டு பிடித்து… தேவை அறிந்து… சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…
வாரவிடுமுறையில் பிரியாணி… காசில்லா நேரத்தில் பட்டினி…
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்… இலங்கை வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது
என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு…
நீ தங்கம் தேடி கட்டார் சென்றாயே?
பாலையில் நீ... வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன…
பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் கட்டார் தேடுதலில்… தொலைந்து போனது -
என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு -
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே
கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )
திரும்பி வந்துவிடு என் கட்டார் கணவா… வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்….
குறிப்பு :
1. இது எனது சொந்த ஆக்கமல்ல. எனது நண்பரொவர் அவரின் ஃபேஸ்புக் சுவரில் பத்தித்துவிட்டது. எனக்கு ரொம்ப பிடித்துவிட்டதால் இங்கே பதிவேற்றியிருக்கின்றேன்.
உண்மையில் இந்த கற்பனைக்கு சொந்தக்காரர் யாரென்று எனக்கும் தெரியாது, என் நண்பனுக்கும் தெரியாது.
2.இக்கவிதையை எழுதியவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
வெளிநாட்டிலுள்ள கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் உளக்கிடக்கையை இதைவிட சிறப்பாக வெளிப்படுத்தமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அருமை
3.தொழிலுக்காக நாடு கடந்து சென்று உழைக்கும் பல்லாயிரக்கனக்கானோர் தங்கள் நிலையை கவிதையாய் வடிக்கும் போது அவை உருக்கமாகவும், உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும், அவர்களின் இயல்பு நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவும் அமைந்துவிடுகிறது. அந்தவகையில் அமைந்த ஒரு கவிதைதான் அயல்தேசத்து ஏழை இதை நான் நீண்ட நாட்களுக்கு முன்னர் பதிவிட்ட இக்கவிதையும் படித்துப்பாருங்களேன்.
(இதுவும் என்னுடைய சொந்த ஆக்கமல்ல)
2 comments:
இஸ்லாமிய செய்திகள், சிறுவர் கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவரும் புதிய வலைப்பூ "ஜும்ஆ" உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
எமது வளர்ச்சிக்கு உங்களின் கருத்துக்களையும் ஆதரவையும் தந்து உதவுங்கள்.
Jummalk.blogspot.com
Jumma.co.cc
உங்கள் எண்ணம் வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
உங்கள் பணி தொடரட்டும்.
கருத்துரையிடுக