இலங்கை இந்திய அனிகளுக்கிடையில் நேற்று (15-12-2009) இடம் பெற்ற விறுவிறுப்பான போட்டியை இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் மட்டுமல்ல உலக கிரிக்கட் ரசிகர்கள் கூட ஒரு போதும் மறந்திடமாட்டார்கள். அவுஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம் பெற்ற உலக சாதனை கிரிக்கட் போட்டிக்குப் பின்னர் ரசிகர்களுக்கு கிடைத்த மிகவும் சுவாரஸ்யமான போட்டி என்றால் அது நேற்றைய போட்டிதான்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சங்ககாரவின் வேண்டுகோளுக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தடிய இந்திய அணி 50 ஓவர்களில் 414 என்ற மிகப் பிரமாண்டமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டது. சேவாக்கின் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கையை இலகுவாகப் பெற முடிந்த்து.
415 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தை தரன்க - டில்சான் ஜோடி பெற்றுக்கொடுத்தது.
டில்சானின் அதிரடி துடுப்பாட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை படு பயங்கரமாகவே இருந்திருக்கும் இந்திய அணிக்கு. இறுதிவரை ரசிகர்களை கதிரையின் நுனியிலேயே இருத்திய இந்தப் போட்டியின் முடிவு இலங்கை ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தைத்தான் தந்தது. இவ்வளவு பெரிய இலக்கை துரத்தி செல்லும் ஆற்றல் இலங்கை அணிக்கு உள்ளது என்பதையிட்டு இலங்கை ரசிகர்கள் திருப்தி கொள்ளலாம்.
எது எவ்வாறாயினும் இலங்கை அணியின் தலைவரின் போக்குப் பற்றியும் அவரது தலைமைத்துவத்தின் இருப்புப் பற்றியும் தற்போது எதிர்ப்புகள் புகைய ஆரம்பித்துள்ளன. இந்தப் போட்டியில் அவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தமை மட்டுமல்ல இந்தியாவுடனான் 2வது 20-20 போட்டியின் போது முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்குக் காரணமாகவிருந்த சனத் ஜயசூரியவிற்கு ஒரு ஓவர் தன்னும் கொடுக்காமல் விட்டது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் இலங்கை அணி பரிதாபமாகத் தோற்றது அனைவரும் அறிந்ததே.
பொதுவாக சங்கக்கார சர்வாதிகார தலைமைத்துவத்தைத்தான் மேற்கொள்கின்றார்.
அணி வீரர்களுடன் சகஜமாகப் பழகுவதில்லை, பந்துவீச்சாளர்கள் தவறுவிட்டால் அவ்விடத்திலேயே கத்திப் பேசுவது, மேலும் எதிரணி வீரர்களுடன் முரண்பட்டுக் கொள்ளல், வாக்குவாதத்திலீடுபடல் மட்டுமல்ல மூத்த வீரர்களிடம் ஆலோசனைகளைக் கூட கேற்பதில்லை. இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த அர்ஜுன ரணத்துங்க கூட சக வீரர்களுடன் கலந்தாலோசித்து களத்தடுப்பு வியூகமமைத்தல், பந்து வீச்சு மாற்றம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் போது சங்கக்காரவிற்கு சக வீரர்களைக் கலந்தாலோசிப்பதில் என்ன பிரச்சினை? சாதரண வீரராக, அணியின் உபதலைவராக இருந்தபோது இருந்த அந்த பண்பட்ட சங்கக்கார இப்பொழுது எங்கே?? தலைமைப் பதவி சங்காவின் கண்ணை மறைத்துவிட்டதா???
சிறந்த கிரிக்கட் உணர்வை வெளிப்படுத்திய அணி (Sprit of Cricket) விருதினை தொடர்ச்சியாக 2 தடவை வென்று வந்த இலங்கை அணி சங்கக்காரவின் தலைமைத்துவத்தின் பின்னர் அதை இழந்துவிட்டது. பொதுவாக இலங்கை கிரிக்கட் அணி ஆரம்பப் போட்டிகளில் தட்டுத் தடுமாறி வெற்றியீட்டிய போதும் இறுதிப் போட்டியில் சிறப்பாக விழையாடி கிண்ணத்தைச் சுவீகரிப்பது வழக்கம். ஆனால் 20 - 20 உலகக் கிண்ணப் போட்டி தொடக்கம் அதாவது சங்கக்காரவின் தலைமைத்துவத்தின் பின் இந்த நிலைமை மாறிவிட்டது. ஆரம்பப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும் இறுதிப் போட்டிகளில் சொதப்பிவிடுவதே இலங்கை அணியின் வாடிகையாகிவிட்டது. இதற்குக் காரணம் தலைவர் சங்கக்கார சக வீரர்களை அரவணைத்துச் செல்லாமையும் மூத்த அனுபவம் வாய்ந்த வீரர்களின் ஆலோசனையைப் பெறாமையுமேயாகும்.
ஒரு துடுப்பாட்ட வீரராக, ஒரு சாதாரண வீரராக சங்கக்கார சிறந்த நுட்பங்களை கொண்டவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் ஒரு தலைவராக சங்கக்கார இன்னும் பண்பட வேண்டியிருக்கிறது. சங்கக்காரவின் இந்தப் போக்கினால் இலங்கை அணியினால் ஒரு கிண்ணத்தைக் கூட வெல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்தியாவுடனான இந்த சுற்றுத்தொடரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கட் நிர்வாகம் அடுத்த தலைமைத்துவத்தை பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.
இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தும் காத்திருப்போம்.
***************
0 comments:
கருத்துரையிடுக