ஆணாகப் பிறப்பதால் விரைவாக மரணம் சம்பவிக்கும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா ? அண்மைக்காலத்தில் 20 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி குறைந்த வயதிலே மரணிக்கும் ஆபத்து பெண்களைவிட ஆண்களுக்குப் பல மடங்கு அதிகம் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
இளம் ஆண்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் அதே வயதுப் பெண்களைவிட வாழ்க்கையில் அதிகமான ஆபத்துக்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். அவர்களுடைய பயமற்ற தன்மை, துணிச்சல், ஆபத்துக்களை வலிந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு என்பன காரணமாக அவர்கள் அதே வயதுப் பெண்களைவிட இளவயதிலேயே மரணமடைவதற்குரிய நிகழ் தகவு மிகக் கூடுதலாக காணப்படுகின்றது.
எனினும் இளவயதைக் கடந்தவர்களிலும் இதே நிலமைதான் காணப்படுகிறது.
உதாரணமாக 1998ல் ஐக்கிய அமெரிக்காவிலே 50 வயது வரையானவர்களில், சராசரியாகப் பெண்களைவிட இரண்டுமடங்காண ஆண்கள் மரணத்தைத் தழுவினார்கள். 80 வயதைத் தாண்டியவர்களைப் பொறுத்தமட்டில் ஆண்களின் மரணவீதம் இன்னும் அதிகாமாக இருந்ததைக் காணமுடிகிறது.
மரண வீதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான வேறுபாடு மிகக் கூடதாலகக் காணப்படுவது 20 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட கூட்டத்தினரிடையே ஆகும். இவ்வயதுப் பிரிவினரில் பெண்களை விட மூன்று மடங்கான ஆண்கள் மரணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
”இன்று இளவயதில் மரணம் நிகழ்வதற்கு ஏதுவாகும் காரணிகளுள், ஆணாக இருப்பது முக்கிய இடத்தை வகிக்கிறது” என்கிறார் மிக்சிக்கன் பலகலைக் கழக ஆய்வாளரான Randolph Nesse . ஆண்களின் மரணவீதத்தை பெண்களின் மரணவீதத்துக்கு குறைத்துவிட முடியுமானால் அது புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதைவிடப் பயனுடையதாக இருக்கும் என்கிறார் அவர். இவ்வாறு ஆண்களின் மரணவீதம் குறைக்கப்பட முடியுமாயின் ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 375,000க்கும் மேற்பட்ட மரணங்கள் தவிர்க்கப்படலாம் என Ness இன் சகாவான Daniel Kruger சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவில் திரட்டப்பட்ட இத்தரவுகளை, அயர்லாந்து அவுஸ்திரேலியா, ரஸ்யா, சிங்கப்பூர், எல்சல்வடோர் போன்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளும் உறுதி செய்கின்றன. இதன்படி உலகின் எப்பகுதியை நோக்கினாலும் ஆணாகப் பிறப்பது அதிக ஆபத்தானது என்பது பொது உண்மை ஒன்றாகவே விளங்குகின்றது.
கொலம்பியா போன்ற நாடுகளிலே நிலைமை மேலும் மோசமானதாகவே இருக்கின்றது. அங்கு 20 - 25 வயதுப் பிரிவினரிலே ஆண்களின் மரண வீதம் பெண்களுடையதைவிட ஐந்து மடங்கு கூடுதலானதாக இருக்கின்றது.
இதில் மேலும் ஆச்சரியம் தரத்தக்க விடயம் யாதெனில், மரணத்தை விளைவிக்கும் எல்லா வகைக் காரணிகளைப் பொறுத்த வரையிலும் வாகன விபத்து முதல் மாரடைப்பு வரை ஆண்களின் மரணவீதம் பெருமளவு கூடுதலாகவே இருக்கின்றது. வாகன விபத்துப்போன்ற புறக் காரணிகளால் ஏற்படும் மரணங்களைப் பொறுத்தமட்டில் மரண வீதத்தில் இரு பாலாருக்குமிடையில் காணப்படும் வேறுபாடு இளைஞ்சர்களிலேயே முனைப்பாகத் தெரிகின்றது.
அறுபது வயதைக் கடந்தவர்களிலும் இவ்வாறான ஒரு போக்கே காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் 60 வயதைத் தாண்டியவர்களில் பெண்களை விட ஆண்கள் இறக்கும் வீதம் 1.68 மடங்காக இருக்கின்றது. இந்த வயதினரிடையே பெரும்பாலும் நோய்களே மரணத்துக்கு காரணமாக அமைகின்றன.
மரணவீதத்தில் மேற்குறித்த பால்ரீதியான இடைவெளி அண்மைக் காலத்தில் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ்,ஜப்பான்,ஸ்வீடன் ஆகிய நாடுகளில் 1940களில் இருந்து பெறப்பட்டு வரும் புள்ளி விபரங்கள் இந்தப் போக்கினை நன்கு தெளிவுபடுத்துகின்றன.
இந்த பால் ரீதியான வேறுபாட்டுக்குரிய காரணங்கள் பற்றி ஆய்வாளர்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
தொற்று நோய்களின் பெருக்கமும், ஆண்கள் அதிகளவு தூரதேசப் பிரயாணங்களில் ஈடுபடுவதும் இணைந்து ஆண்களின் மரண வீதத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.
அதேவேளை தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக உருவாகியுள்ள அதிவேக வாகனங்கள்,நவீன துப்பாக்கிகள் போன்றவையும் ஆண்களைச் சாவிலே முந்தச் செய்கின்றன. அத்தோடு பொதுச்சுகாதார வசதிகளிலும் சேவைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பெண்களுக்கு அதிகளவு நன்மை பயத்துள்ளன எனவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஓய்வின்மை, மன உளைச்சல், மிகை உணவு, போதைப் பழக்கம், புகைத்தல், உடல் நலத்தைக் கவனியாமை, மருத்துவ ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்கத் தவறுதல் போன்ற காரணிகளும் ஆண்களை விரைவில் மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிடுகின்றன என்று சொல்கிறது இந்த ஆய்வு.
** நன்றி : அரும்பு
0 comments:
கருத்துரையிடுக