பாலூட்டிக் கொடிருந்த தாய்
தன் குழந்தையை திடீரென தூக்கி விழுங்கிவிட்டாள்
--------சுனாமி---------
(மூ.மேத்தா)
டிசம்பர் 26 சுனாமி சீற்றம் கொண்டு பல உயிர்களைக் காவுகொண்டுவிட்டு
அடங்கி இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.
ஆனால் அது ஏற்படுத்திய வலியும் சோகமும் மாறாத் துயராய் நம்மனதில்
இன்னும் தொடர்கின்றன.
இதில் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர், அநாதரவானவர்கள் பல லட்சம் பேர்
சுனாமியைப் பற்றி ஆராயவோ, அதன் சுவடுகளைப் பற்றிப் பேசவோ
நான் இந்தப் பதிவை எழுதவில்லை. இன்றைய நாளில் என் மனதில் எழுந்த
சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.
சுனாமியினால் பலியான பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, இன்றைய நாள் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட
மெளன அஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் வேண்டியிருந்தது.
இன்று காலை சரியாக 9.25க்கு அனைத்து வானொலிகளும் “சுனாமியினால் பலியான மக்களுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக எமது சேவை
2 நிமிடம் நிறுத்தப்படுகிறது” என்ற அறிவித்தலோடு தமது சேவையை 2 நிமிடங்கள் நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்தின.
அனைத்து தமிழ் சிங்கள ஆங்கில வானொலிகளும் தங்கள் சேவையை 2நிமிடம் இடை நிறுத்தி அஞ்சலி செலுத்தின.
(குறித்த ஒரு வானொலியில் மாத்திரம் சுனாமி தொடர்பான நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவர்கள் நேரத்தில ஏதும் பிழையா இல்லை வேறேதுமான்னு தெரியல)
தொலைக் காட்சிகளில் சுயாதீன தொலைக்காட்சி தவிர ஏனைய தொலைக்காட்சி சேவைகளில் கறுப்பான பிண்ணனியில் ”சுனாமியில் பலியானவர்களுக்கான மெளன அஞ்சலி” என்ற வாசகத்தோடு வைக்கப்பட்ட அகல்விளக்கொன்று அமைதியாக எரிந்துகொண்டிருந்தது.
சுயாதீன தொலைக்காட்சியில் மாத்திரம் பிரதான வீதியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள், பாதசாரிகள் சரியாக 9.25க்கு தாம் நின்ற இடத்திலேயே அமைதியாக நின்று மெளன அஞ்சலி செலுத்திவிட்டு,
9.27க்கு மீண்டும் தங்கள் பயணத்தை தொடரும் காட்சியை நேரடியாக ஒலிபரப்பினர்.
இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் இம்முறை என்னவோ என்னை அதிகம் பாதித்துவிட்டது. இனம் புரியாத இருண்ட சோகம் மனதுக்குள் சுமையாக தங்கிக்கொண்டது.
சுனாமியினால் எனதூர் பாதிக்கப்பட்வில்லையென்றாலும் சுனாமியின் கோரத்துக்கு இலக்கான அயலூர் மக்களை அரவணைத்து, ஆறுதல்படுத்திய ஊர்.
சுனாமியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உயிர்கள் நல்லடக்கப் செய்யப்பட்டதும் இங்கேதான். அந்த மக்களின் கதறல்கள்,புலம்பல்களை கஸ்ட்டங்களை நேரடியாக கண்டிருக்கிறோம்.
அவை எம் மனதில் மாறாத வடுக்கள்நேரடிப் பாதிப்பற்ற எமக்கே இந்த கவலை என்றால் நேரடிப்பாதிப்புக்குள்ளான அந்த மக்களின் உளநிலை எப்படி இருக்கும்..?
நினைத்தாலே கொடுமை..
ஆழிப் பேரலையின் ஆக்ரோசத்துக்கு இரையான உயிர்களின் ஈடேற்றத்துக்கு என் பிரார்த்தனைகளும், சுனாமியின் சீற்றத்தில் தம் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகட்டும்
ஆழிப்பேரலை தொடர்பாய் சக பதிவர் பிரஷாவின் வரிகள் கீழே
ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....
இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....
உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...
ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை......
0 comments:
கருத்துரையிடுக