RSS

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

இதுதான் மனிதம் (என்னை நெகிழ வைத்த சம்பவம்)

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார் 

இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள்

அந்தத் தந்தை சொன்னார்
நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” 
அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

”ஒரு நாள் மதிய வேளையில் நானும் என் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து என்னிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”


எனக்கு என் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்கவே தயக்கமாக இருந்தாலும்  அவர்களிடம் கேட்டுவைப்பதில் தவறில்லை என்று எண்ணினேன். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டேன்.

என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக என்னிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த எனக்கு மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.


பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு பந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும். 

ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச;  ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான்.

முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.

மைதானத்தில் ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட எனது கண்களில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்  போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர்.அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது. 
என்று கண்ணீர் மல்க,விம்மிய குரலில் சொல்லி முடித்தார் அந்தத் தந்தை

அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.


இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம்  முயற்சிப்போமா?

** சகோதரர் ஒருவர் தனக்கு வந்த மின்னஞ்சல் என்று சொல்லி அவரது ஃபேஸ்புக் குறிப்பில் இட்டதை நான் படித்த போது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது,மனதை உருக்கிவிட்டது. அதை உங்களோடும் பகிர்ந்திருக்கிறேன்.
நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்...?






Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

தயாளன் சொன்னது…

என் கண்ணிலும் நீரை வரவழைத்துவிட்டது. உண்மையில் இறைவன் படைப்பில் எந்த குறையும் இல்லை. குழந்தைகளிடம் உள்ள அந்த மனிதம் வளர்ந்து பெரியவர்களாகும்போது குறைந்து விடுகிறது, அல்லது மறைந்து விடுகிறது. அதற்கு இந்த சுயநல உலகமே காரணம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அருமை....அழகாக கருத்துக்கள்

aiasuhail.blogspot.com சொன்னது…

@தயாளன்

உண்மைதான் சகோதரா.


நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

aiasuhail.blogspot.com சொன்னது…

@பட்டாபட்டி....


நன்றி


நன்றி உங்கள் வருகைக்கு.