10வது உலகக் கிண்ண போட்டிகள் தொடர்பாக நான் இடும் இறுதிப் பதிவு இது என நம்புகிறேன்.
10வது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 2 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில். கிரிக்கட் ரசிகர்களிடம் பரபரப்பு அதிகரித்தவண்ணமே உள்ளது. தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி அனைத்திலும் உலகக் கிண்ணம் தொடர்பான செய்திகளும் அது தொடர்பான விளம்பரங்களும் ஆக்கிரமித்துள்ளன.
வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பரபரப்பு இம்முறை இலங்கையிலும் காணப்படுகிறது. இலங்கை வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த ஏராளமான விடையங்கள் இடம்பெறுகின்றன. பிரமாண்ட தோல் பந்து, ரசிகர்களின் கை பதிக்கப்பட்ட உலகக் கிண்ண மாதிரி, ரசிகர்களின் கையொப்பமிடப்பட்ட பிரமாண்ட துடுப்பு என்று ஒருபக்கம் இருக்க. மறு பக்கம்
உலகக்கிண்ண பாடல்கள் எக்கச்சக்கமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
சூரியன்,சக்தி,வெற்றி என்று ஒவ்வொரு வானொலிகளும் ஒவ்வொரு பாடல்,இசைக்குளுக்கள் மற்றும் பலர் என்று உலகக் கிண்ண பாடல்களுக்கு பஞ்சமே இல்லாமல் எக்கெச்சக்கமான பாடல்கள்.
இவையெல்லாம் ரசிகர்களாகிய நமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தாலும் மறுபுறம் எம் வீரர்களுக்கு மிதமிஞ்சிய அழுத்தத்தைக் கொடுத்துவிடுமோ என்ற பயமும் என்னுள் நிலவுகின்றது…
இம்முறை உலகக் கிண்ணம் வெல்ல அதிக வாய்புள்ள அணிகளாக நான் சொல்வது
1.இலங்கை
2.இலங்கை
3.இலங்கை
4.இந்தியா
5.தென்னாபிரிக்கா
இது ஒரு புறமிருக்க இம்முறை களமிறங்கும் இலங்கை அணி தொடர்பாக ஒரு பார்வையை செலுத்த ஆவல் கொள்கின்றேன்.
இம்முறை இலங்கை அணியின் சாதக பாதக நிலைகளைப் பார்த்தோமானால்..
முதலில் இலங்கை அணிக்கு பாதகமாக உள்ளவற்றைப் பார்ப்போம்…
என்னைப் பொறுத்தவரை சனத் மற்றும் வாஸ் இல்லாமை இலங்கை அணிக்கு மிகப் பெரும் பாதகமாகவே கருதிகின்றேன்… ஆரம்பத்தில் பரவாயில்லை என்று தோன்றினாலும் போகப் போக சனத் மற்றும் வாஸ் இல்லாமை ஒரு பெரும் இழப்பாகவே நான் கருதுகிறேன். இவ்விரு மாபெரும் வரலாற்றுச் சாதனையாளர்களை இந்த உலகக் கிண்ணத்தோடு கெளரவமாக வழியனுப்பியிருக்கலாம் அவர்களின் அனுபவத்தையும் பெற்றிருக்கலாம்…. இனி அதுதான் நடக்காத காரியம் என்றாயிற்றே…
அடுத்த பாதகமாக நான் சொல்வது இம்முறை எமது வீரர்கள் மீது ஊடகங்கள் மற்றும் ரசிகர்களால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள்.இவ்வழுத்தங்களால் எமது வீரர்களின் மீது அதிக அழுத்தம் உருவாகி அவர்களின் இயல்பான ஆட்ட்டம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் என்னுள் நிலவுகிறது.
இம்முறை சொந்த நாட்டில் நடைபெறுவதால் கிடைக்கும் மைதான அநுகூலத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளக் கூடிய அணிகள் பங்களாதேஸ் மற்றும் இந்தியா மாத்திரமே..இலங்கைக்கு இது கிடைக்கப்போவதில்லை,
காரணம் இலங்கையில் போட்டிகள் நடைபெறவுள்ள 3 மைதானங்களும் புதியவை. கெத்தாராம மைதானம் பழையது என்றாலும் அது புனர்நிர்மானம் செய்யப்பட்டு ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதால் அதையும் புதிது போன்றே கருதவேண்டியுள்ளது.
இம்மூன்று மைதானங்களிலும் போதியளவு போட்டிகளோ பயிற்சிகளையோ இலங்கை வீரர்கள் மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த வேதனையானதும் கவலையானதுமாகும்.இந்த விடையத்தில் இலங்கை கிரிக்கற் அதிகாரிகள் மீது நான் மிகவும் கோபம் கொள்கின்றேன். மிக முக்கியமான தொடர் அதுவும் உலகக் கிண்ணத் தொடர் சொந்த நாட்டில் நடைபெறும் பொழுது உள்ளூர் அணிக்கு எவ்வளவு அனுகூலங்களை எடுத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்றாற்போல் மைதான வேலைகள், போட்டி அட்டவணைகளை அமைத்திருக்கவேண்டும்….
இப்போது எவ்வித முன்னனுபவமும் இல்லாத மைதானங்களில் சொந்த நாட்டு அணி அதுவும் உலகக் கிண்ணத்தொடரில் ஆடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை…. இதை என்னென்று சொல்வது…
சொந்த நாட்டிலேயே பழக்கப்பட்ட பரீட்சையமான மைதானம்/ஆடுகளம் என்ற அநுகூலத்தை உள்ளூர் அணிக்கு பெறமுடியாது என்றால் அப்போட்டி சொந்த நாட்டில் நடந்தால் என்ன வேறு நாட்டில் நடந்தால் என்ன..?
எல்லாம் ஒன்றுதான்..
இறுதிப்போட்டி உற்பட ஏராளமான போட்டிகள் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவிருப்பதும் இலங்கை அணிக்கு பாதகமாகவே அமையும். காரணம் இரவு வேளையில் பனிப்பொழிவு சாத்தியம் இருப்பதால் சுழல்பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்ட எமது அணிக்கு பாதகமாகவே இருக்கும். அத்தோடு எமது வேகப்பந்துவீச்சின் முதுகெலும்பான லசித்மாலிங்க சைட் ஆர்ம் எக்சன் மூலம் பந்துவீசுவதால் அவருக்கும் இப்பனிப்பொலிவு சிக்கலாகவே அமையும். பந்தின் வழுக்கும் தன்மை காரணமாக தமது இலக்கில் பந்துவீச பந்துவீச்சாளர்கள் பெரிதும் சிரமப்படுவார்கள்.
இவை எமக்கு பாதகமாக இருக்க மறு புறத்தில் எமது அணிக்கு சாதகமான விடையங்களும் உள்ளன.
என்னதான் பரீட்சையமில்லாத உள்ளூர் மைதானங்கள் என்றாலும் உள்ளூரில் நடைபெறும் போட்டிகள் என்பதால் வீரர்களின் மனநிலைமை அவர்களுக்கு தெம்பாகவே இருக்கும் என நம்பலாம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சொந்த நாட்டில் பரீட்சயமான சீதோஸ்ண நிலையில் ஆடும் போது எமது வீரர்கள் தம் முழுத்திறமையையும் வெளிக்கொணர எவ்வித சிக்கலும் இருக்கப் போவதில்லை. இது இலங்கை அணிக்கு இருக்கும் மிகப்பெரும் சாதகமாகும்.(இந்திய பங்களாதேஸ் அணிகளுக்கும் இது பொருந்தும்)
உலகக்கிண்ணதுக்காக தெரிவாகியிருக்கும் வீரர்கள் உரிய காலகட்டத்தில் ஃபோமுக்கு திரும்பியிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும். குறிப்பாக டில்ஸான்,தரங்க,மஹெல,சங்ககார என அனைவரும் நல்ல ஃபோமில் இருக்கிறார்கள் அது போல மலிங்க,குலசேகர,முரளி ஆகியோரும் சிறப்பாக செயற்படுவது எமக்கு சாதகத் தன்மையை இன்னும் அதிகரிக்கும்.
எமது சாதனை மன்னன் முத்தைய்யா முரளீதரன் விளையாடும் கடைசி உலகக் கிண்ணம் அல்லது ஒரு நாள் தொடர் இது என்பதால் முரளி தன் முழு முயற்சியையும்,முழுப் பலத்தையும் பிரயோகித்து அணியின் வெற்றிக்காக பெரிதும் போராடுவார். இதுவும் எமக்கு உலகக் கிண்ணம் வெல்லுவதற்கு சாதகமானதே..
கடந்த காலங்களில் குமார் சங்கக்காரவின் தலைமைத்துவம் எனக்குப் பிடிக்கவே இல்லை. போராட்ட குணம், வீரர்களை சரியாக வழி நடத்தல், கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்தல் போன்ற எதுவும் அவரிடம் காணப்பவில்லை. அதிகமாக கோவப்படுதல், பந்துவீச்சாளர்களை ஏசிப்பேசுதல் என்று அவரின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் விடயம்”இலங்கை அணிக்கு ஒரு ஸ்டைல் இருக்கு எப்படியோ தட்டுத்தடுமாறி இறுதிப்போட்டிக்கு வந்து, இறுதிப்போட்டியில் அபாரமாகப் போராடி கிண்ணத்தை வெல்லுவார்கள், ஆனால் சங்ககார தலைவரான பிறகு இலகுவாக இறுதிப்போட்டிக்கு வந்து பரிதாபமாக தோற்றுப் போவார்கள்” என்று. ஆனால் இப்போது சங்கக்காரவின் செயற்பாடுகளில் மாற்றம் தெரிகிறது. அத்தோடு மகேல உபதலைவராக இருப்பதால் நம்பிக்கையும் ஆறுதலும் கிடைக்கிறது. இது வீரர்கள் மத்தியிலும் புது உத்வேகத்தைக் கொடுக்கும்.இதுவும் எமக்கு சாதகமானதே.
இளமை + அனுபவம் கலந்த சமபலமான அணி தெரிவு செய்யப்பட்டிருப்பதும், வீரர்களிடம் ஒற்றுமை போராட்ட குணம் அதிகரித்திருப்பது எமக்கு சாதகமானதே..
அவுஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுத் தொடர் வெற்றி, மே.இ.தீவுகள் அணிக்கெதிரான தொடர் வெற்றி, பயிற்சிப் போட்டிகளில் அபார வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளோடு உலக் கிண்ணத் தொடரை எதிர்கொள்வதால் வீரர்கள் உளவியல் ரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள் எனவே இதுவும் எமது அணி கிண்ணம் வெல்ல சாதகமானதே..
இப்படி பாதகங்களை விட சாதகமான தன்மைகள் அதிக இருப்பதால் உலகக் கிண்ணத்தை வெல்வதில் இலங்கை அணிக்கு எவ்வித சிக்கல்களும் இருக்கப் போவதில்லை.
அண்மையில் இலங்கை அணிப் பயிற்றுவிப்பாளர்” நாங்கள் வழமைக்கு மாற்றமாக 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கப்போகிறோம்” என்று கூறியிருந்தார் இது எவ்வாறான திட்டமோ தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் விளையாடப் போகும் இறுதிப் பதினொருவர் :
தரங்க,டில்ஸான்,சங்ககார,மஹெல,சமரவீர,சாமர சில்வா,மெத்தியூஸ்,மலிங்க,முரளி, குலசேகர,ஹெரத்.
இதில் சாமர சில்வாவின் இடம் கபுகெதர-பெரேரா-சாமர சில்வா இவர்களுக்கிடையில் மாறிக்கொள்ளும். ஹெரத்தின் இடம்
மென்டிஸ்-ஹெரத்-பெரேரா-டில்ஹார இவர்களுக்கிடையில் மாறிக்கொள்ளும். என நம்பலாம். இதில் மேற்சொன்ன 11வரும்தான் நான் எதிர்பார்க்கும் அதிகம் சாத்தியமான சிறந்த பதினொருவர்.
இறுதியாக இலங்கை அணியினருக்கு ஒரு விடயம்:
தரங்க,டில்ஸான்,சங்ககார,மஹெல,சமரவீர,சாமர சில்வா,கபுகெதர, ஆகியோர் துடுப்புடனும் மெத்தியூஸ்,மலிங்க,முரளி, குலசேகர,ஹெரத்,டில்ஹார,மெண்டிஸ், பெரேரா பந்துடனும் காத்திருக்க பெர்ஸி அங்கிள் தேசியக் கொடியுடன் சுத்தி சுத்தி வர மைதானம் முழுதும் ரசிகர்கள் நாங்க கரசோசத்தோடு உற்சாகமா இருக்க வேறென்னவேண்டும் உங்களுக்கு…? ஆனால் கிண்ணம் வேண்டும் எங்களுக்கு...
எது எப்படியோ உலகக் கிண்ண இறுதிப்போட்டி நடைபெறவுள்ள ஏப்ரல் இரண்டு என்னுடைய பிறந்த நாள், அன்று எனக்கு கிண்ணத்தை பிறந்த நாள் பரிசாகத் தரவேண்டியது இலங்கை கிரிக்கட் வீரர்களின் பொறுப்பு..
இலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகனான எனக்கு பிறந்த நாள் பரிசாக உலகக் கிண்ணத்தை வென்று தருவார்களா எமது அணியினர்..?
ஆவலோடு காத்திருக்கின்றேன்.
வெற்றி நமக்கே…. இன்ஸா அல்லாஹ்
** உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் அதே காலப்பகுதியிலேயே எனது பல்கலைக் கழக இறுதிப் பரீட்சைகளும் நடைபெறவிருப்பதால் இம்முறை உலகக் கிண்ணத்தை முழுமையாக திருப்தியாக கண்டுகளிக்க முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்
5 comments:
இலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகனான எனக்கு பிறந்த நாள் பரிசாக உலகக் கிண்ணத்தை வென்று தருவார்களா எமது அணியினர்..?//
அப்படியே நடக்கும் என எதிர்பார்ப்போம்..
உங்களுக்குப் பிறந்தநாள் பரிசு.. எங்களுக்கு உலகக் கிண்ணப் பரிசு
LOSHAN
www.arvloshan.com
அப்படியே நடக்கும் என எதிர்பார்ப்போம்..
உங்களுக்குப் பிறந்தநாள் பரிசு.. எங்களுக்கு உலகக் கிண்ணப் பரிசு
LOSHAN
www.arvloshan.com
@LOSHAN
நன்றி அண்ணா,
நம்பிக்கையோடு காத்திருப்போம்.
வெற்றி நமக்கே....
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா
இன்ஷா அல்லாஹ் இந்திய மண்ணிலிந்து உலக கோப்பையை நமது வீரர்கள் எடுத்துவரப்போகிரார்கள்,உங்களின் பிறந்த நாளை நம் நாடே கொண்டாடும்.
@aaa
நன்றி நன்றி.
வெற்றி நமதே...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கருத்துரையிடுக