RSS

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL)


2011ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ள நிலையில். இலங்கை கிரிக்கட் சபையினால் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) போட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது இலங்கை கிரிக்கட் முன்னதாகவே திட்டமிட்டதா இல்லை மிக அண்மையில் திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் எனக்கு என்னமோ இது மிக அண்மைய நாட்களில் கேள்விப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது.
இலங்கை கிரிக்கட்டின் மிக துணிகர செயலாக இதைக் கருதலாம். ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

இது ஒரு புறமிருக்க…20-20 போட்டிகளின்  வருகையால் டெஸ்ட் போட்டிகளின் நிலமை பரிதாபகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் மற்றும் SLPL இன் வருகையால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாமல் தேசிய அணிகளின் போட்டிகள் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் இருக்கின்றது. எதிர்காலத்தில் வேறு நாடுகளும் இதேபோல் தங்கள் நாட்டில் ஆரம்பித்தால் பிறகுசர்வதேச கிரிக்கட்டின் நிலை பரிதாபம்தான்..

SLPL  இன் வருகையானது இலங்கையின் கிரிக்கட் வீரர்களுக்கு விசேடமாக இளம் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.  இலங்கை கிரிக்கட் அமைப்புக்கும் வீரர்களை இனம்கண்டு வாய்ப்பு வழங்க சிறந்த சந்தர்ப்பமாகவும் இது அமையும். வீரர்களுக்கு SLPL இல் வாய்ப்பு வழங்குவதன் மூலம் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கி நாட்டின் கிரிக்கட்டை முன்னேற்ற முடியும். அந்த வகையில் SLPL இனை வரவேற்போம் வாழ்த்துவோம்.

SLPL அறிமுகம்:

இலங்கையின் 7 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 அணிகள் பங்குகொள்ளும் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) போட்டிகள் இலங்கையில் ஜூலை மாத இறுதி அளவில் ஆரம்பமாகவுள்ளன. உறுதியான போட்டி நிரல் வெளியிடப்படாத நிலையில் ஜூலை கடைசி முதல் ஆகஸ்ட் ஆரம்ப நாட்கள் வரை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

18 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு தடவை மாத்திரமே மோதவுள்ளன. இதில் அதிக புள்ளிகளைப் பெறும் முதல் நான்கு அணிகளும் அரைதியிறுதிப்போட்டிக்கு தெரிவாகும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகளுக்கு தகுதிபெறும்.

SLPL  போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட Somerset Entertainment  Ventures  (Singapore based Promotion Company. )
என்ற நிறுவனம் 5 வருடங்களுக்கு வாங்கியிருக்கின்றது.

போட்டிகள் இலங்கை நேரப்படி மாலை 4 மணி  மற்றும் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். ஒரு போட்டி மாத்திரம் நடைபெறும் நாட்களில் 8 மணிக்கு ஆரம்பமாகும்.

 இவ்வாண்டிற்கான ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்துகொள்ளும் 7 மாகாணங்களும் வருமாறு:
 
 Basnahira(மேல் மாகாணம்), Kandurata(மத்திய மாகாணம்), Nagenahira(கிழக்கு மாகாணம்), Ruhuna(தென் மாகாணம்), Uthura(வட மாகாணம்), Uva (ஊவா மாகாணம்), Wayamba(வட மேல் மாகாணம்)

அணிகளின் பெயர்கள் வருமாறு:
RUHUNA RHINOS, KANDURATA KITES, UVA UNICORNS, NAGENAHIRA NAGAS, BASNAHIRA  BEARS, WAYAMBA WOLVES, UTHURA ORYXES

வீரர்களைத் தேர்வு செய்தல்:
 
ஒவ்வொரு அணிக்குமான வீரர்களை இலங்கை கிரிக்கட் அமைப்பே தேர்வு செய்யவுள்ளது. வீரர்களைத் தெரிவு செய்யும்போது முடிந்தவரை அவர்கள் சார்ந்த மாகாண அணிகளுக்கே அவ்வீரர்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கியிருக்கும். ஒரு அணியில் 16 தொடக்கம் 18 வீரர்கள் உள்ளடங்கி இருப்பார்கள்.


சர்வதேச வீரர்களை ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்யும்போது ஐ.பீ.எல் இல் இருந்து மாறுபட்ட விதத்தில் அதாவது வீரர்களை ஆடு மாடுகள் போல் ஏலம் கேற்காமல் இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களினால் ஒவ்வொரு அணியினது பலம் பலவீனத்தைப் பொறுத்து ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். இது வீரர்களுக்கு கெளரவமான ஒரு முடிவாக இருக்கும் என நம்பலாம்.


விழையாடும் இறுதிப் பதினொருவரையும் தேர்வு செய்யும் முறை:
 
போட்டியில் விளையாடும் இறுதிப் பதினொருவரில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 7 இலங்கை வீரர்களும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்கியிருப்பர். அதிலும் ஒருவீரராவது 21 வயதுக்குட்பட்ட இலங்கை வீரராக இருப்பார்.

இலங்கையின் பிரபலமான முன்னாள் வீரர்கள் அணிகளுக்கான ஆலோசகர்களாக அல்லது பயிற்றுவிப்பாளர்களாக இருப்பார்கள்.


இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் வெளிநாட்டு வீரர்களாக இம்முறை SLPL இல் விளையாடவுள்ள வீரர்கள்:
கிரன் பொலார்ட்,க்ரிஸ் கெயில்,சஹீட் அஃப்ரிடி,டேனியல் விட்டோரி,டேனியல் க்ரிஸ்டியன், ஹேர்சல் கிப்ஸ் மற்றும் கெவின் ஓப்ரைன்

SLPL  இல் இந்திய வீரர்களின் பங்களிப்பையும் இலங்கை கிரிக்கட் எதிரிபார்த்திருக்கிறது.  இது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய தேசிய மற்றும் உள்ளூர்ப் போட்டிகளோடு முரண்படாவண்ணம் இந்திய வீரர்கள் SLPL  இல் விளையாடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லைஎன்று குறிப்பிட்டிருக்கின்றது.

எனவே இனிவரும் நாட்களில் இந்திய வீரர்களும் SLPLஇல் இணைந்து கொள்வார்கள் என நம்பலாம். அத்தோடு SLPL காலப்பகுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதனால் அத்தொடரில் விளையாடாத இந்திய வீரர்கள் SLPL இல் இணைந்துகொள்ளக்கூடும்.



இலங்கையில் மொத்தம் 9மாகாணங்கள் உள்ள நிலையில் 7 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு அணிகளே இம்முறை SLPL இல் களமிறங்குகின்றன. மீதமுள்ள இரண்டு மாகாணங்களான ரஜரட்டை மற்றும் சப்ரகமுவா ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி எந்த அணிகளும் களமிறக்கப்படவில்லை.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் நிசாந்த ரணதுங்க தெரிவிக்கையில்

SLPLஇன் துவக்கத்திலே அதிக அணிகளை இணைப்பதைவிட அணிகளின் எண்ணிக்கையினைக் குறைத்து போட்டித்தொடரின் விறுவிறுப்பையும் போட்டித்தன்மையையும் அதிகரிக்கும் முகமாக அணிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அணிகள் களமிறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த பல மைதானங்கள் அதிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற மைதானங்கள் பல உள்ள நிலையில் அனைத்து போட்டிகளையும் ஆர்.பிரேமதாசா மைதானத்திற்கு மட்டுப்படுத்தியமை தொடர்பில் நிசாந்த ரணதுங்க கருத்துக் கூறுகையில்


சர்வதேச ரீதியில் ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் பல போட்டித் தொடர்கள் உள்ளன.எனவே எமது SLPL போட்டிகளை 18 நாட்களுக்குள் நடாத்தி முடிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடாத்தும் போது மிகக் குறைந்த காலப்பகுதிக்குள் வீரர்கள் அதிக பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும். இது வீரர்களுக்கு சோர்வையும் அசெளகரியத்தையும் கொடுக்கும் இதனைக் கருத்தில் கொண்டே போட்டிகள் அனைத்தும் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு மட்டுப்படுத்தினோம் என்று தெரிவித்தார்.


SLPL தொடர்பாக அதன் 5 வருட உரிமையினை வாங்கியிருக்கும்  Somerset Entertainment  Ventures  நிறுவனத் தலைவர் இவ்வாறு கூறுகின்றார்.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (SLPL) வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS