ஆரம்பம் முதல் இன்றுவரை திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஐக்கிய அமெரிக்காவே முன்னிலையில் இருந்து வருகின்றது. கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொலிவூட் என்ற நகரே திரைப்பட உலகின் தலைநகராகக் கருதப்படுகின்றது.
Academy of Motion Picture Arts and Sciences (திரைப்படக் கலைகள், இயல்கள் என்பவற்றுக்கான அகடெமி) என்ற அமைப்பு 1927 மே மாதத்தில் ஹொலிவூட்டில் ஸ்தாபிக்கப்பட்டது. திரைப்படத் தொழிற் துறையில் கலாசார, கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் அதன் பிரதான நோக்கமாக அமைந்தது. அத்தோடு திரைப்படத் தொழிலில் அரிய சாதனைகளைப் புரிவோரை அங்கீகரித்துப் பாராட்டுவதும் அதன் இன்னொரு நோக்கமாக இருந்தது.
இந்த ஸ்தாபனத்தின் தொழிற்பாடுகளுள் மிகவும் பிரசித்தமானது வருடம் தோறும் அது நடத்தும் அகெடமி விருதுகள்(Academy Awards) வழங்கும் நிகழ்ச்சியாகும். திரைப்பட உற்பத்தி, நடிப்பு ஆகிய துறைகளில் வருடந்தோறும் 25 வகையான தனியாள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு அகெடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இன்று திரைப்படத்துறையில் அகடெமி விருது பெறுவது பெருஞ்சாதனையாகவும் பெருமைக்குரியதாகவும் கருதப்படுகின்றது.
முதலாவது அகடெமி விருதுகள் 1929 மே 16ம் திகதி வழங்கப்பட்டன. 1927 / 28 காலப்பிரிவில் உற்பத்திசெய்யப்பட்ட திரைப்படங்களே இவ்விருதுகளுக்காகக் கவனத்தில் எடுக்கப்பட்டன. முதல் தடவையாக அகடெமி விருது பெற்றவர்களுள் Emil Jannings(சிறந்த நடிகர்), Janet Gaynor(சிறந்த நடிகை), Frank Borzage(சிறந்த நெறிப்படுத்துனர்), என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வருடத்தில் Wings என்ற திரைப்படமே சிறந்த படைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது.
அகடெமியின் 2,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விருதுக்குரிய படத்தையும் ஆட்களையும் தெரிவுசெய்கின்றனர். வாக்கெடுப்பின் முடிவுகள் சுயாதீனமான கணக்காய்வு நிறுவனம் ஒன்றைக்கொண்டு அட்டவணைப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு ‘ஒஸ்கார்’(Oscar) என்றழைக்கப்படும் தங்கமுலாம் பூசப்பட்ட சிறிய வெண்கலச் சிலை பரிசாக வழங்கப்படுகின்றது. Cedric Gibbons என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இச்சிலை George Stanly என்ற சிற்பியினால் வார்க்கப்பட்டது.
இது 34.3cm உயரமும் 3.9kg நிறையும் கொண்டது. 1931ம் ஆண்டிலேயே அதற்கு ‘ஒஸ்கார்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது.
அகடெமியின் நிர்வாகப் பணிப்பாளராக வந்த Margaret Herrick என்பவர் முதன் முதலாக இச்சிலையைக் கண்டபோது “ இது எனது மாமன் ஒஸ்காரைப் போல் இருக்கிறது” என்று குறிப்பிட்டாராம். பின்னர் அப்பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. இப்போது அகடெமி விருதினை ‘ஒஸ்கார் விருது” எனவும் அழைக்கின்றனர்.
அகாடெமி விருதுகள்
- சிறந்த நடிகருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
- சிறந்த துணை நடிகருக்கான அகாடெமி விருது: 1936 - தற்போதுவரை
- சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
- சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருது: 1936 - தற்போதுவரை
- சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 2001 - தற்போதுவரை
- சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாடெமி விருது: 1948 - தற்போதுவரை
- சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(சிறப்பு) அகாடெமி விருது: 1943 - தற்போதுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(குறுங்கதை) அகாடெமி விருது: 1941 - தற்போதுவரை
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1935 - தற்போதுவரை
- சிறந்த வேறு மொழி படத்திற்கான அகாடெமி விருது: 1947 -தற்போதுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
- சிறந்த ஒப்பனைக்கான அகாடெமி விருது: 1981 - தற்போதுவரை
- சிறந்த அசல் இசைக்கான அகாடெமி விருது: 1934 - தற்போதுவரை
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாடெமி விருது:1934 - தற்போதுவரை
- சிறந்த படத்திற்கான அகாடெமி விருது :1928 - தற்போதுவரை
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாடெமி விருது: 1963 - தற்போதுவரை
- சிறந்த இசைக்கான அகாடெமி விருது: 1930 - தற்போதுவரை
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாடெமி விருது: 1939 - தற்போதுவரை
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1928 - தற்போதுவரை
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடெமி விருது: 1940 - தற்போதுவரை
சிறப்பு அகாடெமி விருதுகள்
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
- சிறப்பு அகாடெமி விருது: 1929 - தற்போதுவரை
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடெமி விருது: 1931 - தற்போதுவரை
- கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போதுவரை
- ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போதுவரை
- இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போதுவரை
** நன்றி : அரும்பு + விக்கிபீடியா.
0 comments:
கருத்துரையிடுக