RSS

T20 உலகக் கிண்ணம் 2012 - இலங்கை அணி


ICC T20 உலகக் கிண்ணம் 2012. கிரிக்கட் உலகமே இலங்கை பக்கம் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறது. கிரிக்கட் ரசிகர்கள் சாரை சாரையாக இலங்கையை நோக்கி வந்தவண்ணமுள்ளனர். மாபெரும் கிரிக்கட் திருவிழா நாளை ஆரம்பமாகிறது.

ICC T20 உலகக் கிண்ணம் என்ற ஒரே இலக்கை நோக்கி 12 நாடுகள் பலப்பரீட்சை நடாத்த தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தத்தம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த பதினைவருடன் களத்திற்கு வந்திருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியிலும் விளையாடப் போகும் இறுதிப் பதினொருவரும் யார்? ஒவ்வொரு அணியினதும் வியூகங்கள், அனுகுமுறைகள் எப்படி இருக்கப் போகின்றன? எந்த அணி சாதிக்கப் போகின்றது என்று கிரிக்கட் ஆர்வலர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இம்முறை களமிறங்கும் 12 அணிகளில் வெற்றிவாய்ப்புகள் அதிகமுள்ள 5 அணிகள் அல்லது கிண்ணம் வெல்ல வாய்புள்ள முதல் 5 அணிகள் முறையே 1. இலங்கை 2.தென்னாபிரிக்கா 3. பாக்கிஸ்தான் 4. இந்தியா 5.மேற்கிந்தியத் தீவுகள்

இலங்கை அணி வீரர்களின்  பலம் பலவீனம்...


இலங்கை அணி அடுத்தடுத்த உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறி இறுதிப் போட்டியில் இலக்கை அடைய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள நிலையில் இந்த உலக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளை எதிர்கொள்கிறது. கடந்த கால அனுபவங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தப்  போட்டிகளை இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மஹெல ஜயவர்தனவின் சிறப்பான தலைமைத்துவத்தின் கீழ் புதிய பயிற்றுவிப்பாளர் புதிய திறமையான இளம் வீரர்கள் என புது இரத்தம் பாய்ச்சப்பட்டு சிங்கங்கள் களத்தில் குதிக்கின்றன.

மஹெலவின் தலைமைத்துவம் பலமாய் ஒரு புறமிருக்க SLPL போட்டிகளில் பெற்றுக்கொண்ட ஃபோர்ம் இலங்கை வீரர்களுக்கு இம்முறை பெரிதும் உதவும்.   SLPL போட்டிகளில் என்னைக்கவர்ந்த இளம் வீரர்களில் இவர்கள் இம்முறை T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலவீரர்களில் முக்கியமானவர்களான டில்சான் முனவீர, அகில தனஞ்ஜைய இருவரும் அணியில் இணைக்கப்பட்டமை இலங்கை கிரிக்கட் ரசிகன் என்ற வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.

23 வயதான டில்சான் முனவீர SLPL போட்டிகளில் மிகவும் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக SLPL T20 போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் பெற்று அணிவெற்றிபெற வழிவகுத்திருந்தார் என்பது சிறப்பாகும். திலகரட்ன டில்சான் போலவே அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய முனவீர நீண்ட கால அடிப்படையில் டில்சானின் பிரதியீடாகவே கருதப்படுகிறார்.

இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் TM டில்சானுடன் இவர்தான் ஆரம்பவீரராகக் களமிறங்குவார் என மிகப் பரவலாக நம்பப்படுகிறது. இலங்கையின் துடுப்பாட்டம் அனுபவம் வாய்ந்த வீரர்களான டில்சான் சங்கா மற்றும் தலைவர் மஹெல ஆகிய மூவரிலேயே பெரிதும் தங்கியிருப்பதால். மஹெல இம்முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அல்லாமல் 4ம் இலக்க வீரராகவே களமிறங்க அதிக வாய்புள்ளது. அதுதான் இலங்கை அணிக்கு சிறந்ததும்கூட

எனவே TM டில்சானுடன் டில்சான் முனவீர ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குமிடத்து இலங்கையின் மத்திய வரிசை பலம்பெறுவதுடன் அட்டகாசமான அதிரடியான ஆரம்பம் கிடைக்கும்.

18 வயதான அகில தனஞ்சைய. இம்முறை பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இளைய அறிமுக வீரர். SLPL தவிர்ந்த எந்தவிதமான முதற்தரப் போட்டிகளிலும் விளையாடிய அனுபவமில்லாத இவரின் தெரிவு பாரிய விமர்சனங்களை உருவாக்கிய போதும் இவர்மீது அணியின் சிரேஸ்ட்ட வீரர்கள் , அணியின் பயிற்றுவிப்பாளர் மட்டுமல்லாம் அணியின் தலைவர் மஹெல ஜயவர்த்தன ஆகியோயிரின் பலத்த ஆதரவுடன் குறிப்பாக மஹெலவின் பாரிய ஆதரவுடன் உலகக் கிண்ண அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.

தனது சுழல் பந்துவீச்சில் பலவகையறாக்களை கொண்டு துடுப்பாட்டவீரர்களை இவர் திணரடிப்பதால் இவருக்கு சிறந்த ஒரு எதிர்காலம் உண்டு.  SLPL போட்டிகளில் சிறப்பாக தனது திறமையினை வெளிக்காட்டியிருந்த இவருக்கு தலைவர் உட்பட அணியில் பலரது பலத்த ஆதரவு இருந்த போதும் விளையாடும் இறுதிப் பதினொருவரில் இவர் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொள்வதில் பாரிய போட்டி இருக்கப்போகின்றது.

இலங்கை அணியின் தற்போதை அனுகுமுறை, வீரர்களின் திறமை மற்றும் அனுபவம் அடிப்படையில் விளையாடும் இறுதிப் பதினொருவரில் ஒரு சுழல்பந்துவீச்சாளருக்கே வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு சுழல்பந்துவீச்சாளருடன் விளையாடுவதாயின் சுழல்பந்துவீச்சில்  ஸ்திரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட தற்போது ஃபோமில் இருக்கும் ரங்கன ஹெரத்,  ICC T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4வது இடத்தில் இருக்கும் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன் அகில தனஞ்சைய போட்டியிடவேண்டியிருக்கும். மூத்த இரு சுழல் பந்துவீச்சாளர்களின் அனுபவ அடிப்படையில் ஒப்பிடுகையில் அகில தனஞ்சையவுக்கு ஒரு போட்டியிலேனும் வாய்ப்புக் கிடைப்பது மிகவும் சிரமமானது அப்படிக் கிடைத்தால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்.

இலங்கை அணியின் துடுப்பாட்டவரிசையைப் பொறுத்தவரையில் மஹெல, டில்சான், சங்கா ஆகியோரோடு சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிசும் ஃபோமில் இருப்பது திருப்தி. திரிமான்னவும் தன் பங்கிற்கு சிறப்பாக செயற்படுகின்றார். இலங்கை அணியின் உபதலைவரும் சகலதுறை நட்சத்திரமுமான ஏஞ்சலோ மெத்யூஸ் தனது துடுப்பாட்டத்தில்  Go Slow முறையைக் கைவிட்டு அதிரடியாக ஆடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  இலங்கையின் Good Finisher ஆன மெத்யூஸ் அதிரடி கலந்த ஃபோமில் இருப்பது இலங்கை அணிக்கு கூடுதல் பலம்.

மஹெல, சங்கா,டில்சான் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் முதுகெலும்புகள். இவர்கள் நல்ல ஃபோமில் இருக்கின்றனர். சங்கக்கார தனது ஸ்ட்ரைக்  ரேட்டைக் கூட்டவேண்டும், மஹெல, டில்சான் அவசரப்படாமல், அநாவசியாமான Shot Selections கு செல்லாமல் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும் அவ்வளவுதான்.

பாவம் சந்திமல் ஃபோர்முக்கு வருவதில் தடுமாறிக்கொண்டிருக்கின்றார். இம்முறை விளையாடும் இறுதிப் பதினொருவரில் சந்திமாலுக்கு வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முனவீர அல்லது மத்திய வரிசை வீரர் திரிமான்ன இருவரில் ஒருவர் சோபிக்கத் தவறும் பட்சத்திலேயே சந்திமலுக்கான வாசல் திறக்கப்படும்.

இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மலிங்க, குலசேகர,  இரங்க ஆகியோர் வேக/மிதவேக பந்துவீச்சாளர்களாக இருக்க மெண்டிஸ்,ஹேரத், தனஞ்சய ஆகியோர் முழு நேர சுழல் பந்துவீச்சாளர்களாகவும் அணியில் இடம் பிடித்துள்ளனர். சகலதுறை வீரர்களாக மெத்யூஸ், திசர பெரேரா,ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இம்முறை இலங்கை அணியானது அனுபவம் இளமை இரண்டும் சம அளவில் கலந்த ஒரு கலவையாகவே உள்ளது. துடுப்பாட்டம், சகல துறை, சுழல் , வேகம் என்பவற்றில தற்போது ஃபோமில் உள்ள வீரர்களே தெரிவு செய்யப்பட்டிருப்பதால் 100% சிறப்பான பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பாக விளையாடப் போகும் இறுதிப் பதினொருவர்கள் இவர்கள்தான்.

1.டில்சான் முனவீர
2.டில்சான்
3.சங்கக்கார
4.மஹெல ஜயவர்த்தன
5.திரிமான்ன
6.ஏஞ்சலோ மெத்யூஸ்
7.ஜீவன் மெண்டிஸ்
8.திசர பெரேரா
9.நுவன் குலசேகர
10.லசித் மலிங்க
11.ரங்கன ஹெரத்/ அஜந்த மெண்டிஸ்

சந்திமல் ஃபோமில் இல்லாததால் வாய்ப்புக் கிடைப்பது கொஞ்சம் கஸ்ட்டமானவிடையம், சமிந்த இரங்க சிறப்பாகப் பந்துவீசினாலும் அவருக்கான வாய்ப்பும் குறைவு. ஏனெனில் ஏனையவீரர்கள் அவருக்கான இடத்தினை தம்வசப்படுத்திக்கொண்டார்கள்.

வீரர்கள் தம் திறமையினை 100% வெளிப்படுத்துமிடத்து வெற்றி நமதே….

சொந்த நாட்டில் விளையாடுவது என்பதும் இலங்கை அணிக்கு சாதகமான நிலைமையைக் கொடுக்கும்.

இலங்கை அணியின் குழு C இனைப் பொறுத்தவரை தற்போது Test, ODI, T20 மூன்றிலும் தரப்படுத்தலில் முதலிடம் பிடித்திருக்கும் தென்னாபிரிக்க அணியும் சிம்பாப்பே அணியும் இடம்பெறுகின்றன.  இலங்கை அணிக்கு தென்னாபிரிக்க அணியின பாரிய சவாலாக இருப்பார்கள் என்பது உறுதி. அவர்களின் ஸ்விங் மற்றும் அசுர வேகப்பந்து வீச்சாளர்களையும் டிவில்லியர்ஸ் ,அம்லா போன்ற தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் சமாளிப்பதில்தான் இலங்கை அணியின் சாமர்த்தியம் மற்றும் அணியின் பலம் என்பன அனைவருக்கும் வெளிப்படும்.

ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் இரண்டும் ஹம்பாந்தோட்டையிலேயே இருக்கின்றன. கொழும்பில் போட்டிகளை வைத்திருந்தால் இலங்கை ரசிகர்களின் ஆதரவு பலமாக இருந்திருக்கும்.  சொந்த மைதானம் என்றபோதும் ஆர்.பிரேமதாச மைதானமானது ஹம்பாந்தோட்டை சூரிய வெவ மைதானத்தைவிட  ஒப்பீட்டளவில் இலங்கை அணியினருக்கு மிகவும் பரீட்சையமானது. இது இப்படி இருக்க எதற்காக இலங்கை அணியின் முதலிரு போட்டிகளையும் ஹம்பாந்தோட்டையில் வைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மழையினால் பாதிப்பு வரலாம் என்ற சந்தேகமோ தெரியாது..

எது எப்படி இருந்த போதும் சம பலம் பொருந்திய அணி இம்முறை T20 உலகக்கிண்ணத்தை வெல்லும். வெல்ல வேண்டும்.

இலங்கை அணிக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS