RSS

---------இதுவும் கடந்துபோகும்---------சொல்றதுக்கு எதுவுமே இல்லைங்க…. குறித்த நாளில் சிறப்பாக விளையாடிய அணி இறுதியில் வென்றது. அது இறுதிப் போட்டியாக இருந்ததும் எமது இலங்கை அணியாக இல்லாது விட்டதும் எமக்கு வேதனைதான்…

தொடர்ச்சியாக 4 உலகக் கிண்ண இறுதிப்போட்டிகள் வருவதற்கு தனித்தன்மையான / அதீத திறமை வேண்டும். அந்த இறுதிப்போட்டிகளில் வெல்வதற்கு கொஞ்சம் அதிர்ஷ்ட்டமும் வேண்டும்…. எமக்கு கிண்ணம் வெல்லும் திறமையும் இருந்தது அதனை வெல்ல முழுத்தகுதியும் இருந்தது.
ஆனால் அதிர்ஷ்ட்டம்தான் இதுவரை கிட்டவில்லை.

உலகக் கிண்ணம் எனும் என் ஆசை, கனவு, பிரார்த்தனை எல்லாம் 4வது முறையும் தவிடு பொடியானதில் எனக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.
எவளவோ ஏமாற்றங்கள் கண்ட மனது என்றாலும் இந்த மாதிரியான ஏமாற்றங்கள் ஏற்படுத்தும் வலி பாரியதாகவே இருக்கின்றது.
கடந்த தோல்விகளைவிட இந்தத் தோல்வி சொந்த மண்ணில், சொந்த நாட்டு ரசிகர்களின் முன்னால் பெறப்பட்ட இந்தத் தோல்வி கொடுமையானது.
ஆரம்பச் சுற்றுடனே வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு கவலை வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இலங்கை அணியின் தோல்வியை கிரிக்கட் ரசிகனாக ஏற்றுக்கொள்கிறேன்…..ஆனால் இலங்கை கிரிக்கட்டின் ரசிகனாக இந்தத் தோல்வியை மனம் ஏற்க மறுக்கிறது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் சொல்லவரவில்லை, சொல்லியும் பயனில்லை. எம்மவர்களின் பிழைகள் முதல் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களைக் கொடுத்துவிட்டு மீதிப் பத்து ஓவர்களில் 105 ஓட்டம் கொடுத்த போது எமது வெற்றியின் முதல் படி சறுக்கியது, மலிங்க 4 ஓவர்களில் 54 ஓட்டம் கொடுத்தபோது இரண்டாவது படி சறுக்கியது, டில்சானின் டக் அவுட் மூலம் 3வது படியும், மழையின் சிறு தூத்தலைக் கண்டு மஹெல டக்வேர்த் லூயிஸ் ஓட்ட இலக்கை கடக்க அவசரப்பட்டு ஆட்டமிழந்தபோது நாம் தோற்றேவிட்டோம்.

மீதமான வீரர்கள் தமது நம்பிக்கையை இழந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையும் இறுதி நம்பிக்கையாய் இருந்த ஜீவன் மெண்டீஸ் - திசெர பெரேராவின் ரன் அவுட்டோடு நாம் படு தோல்வி அடைந்தோம். அந்நேரம் இலங்கை ரசிகர்களாகிய எம் மனதில் பேரிடி விழுந்தது.

இறுதிப் போட்டியின் மொத்தம் 40 ஓவர்களில் முதல் பத்து ஓவர்கள் மாத்திரம் எம் கை ஓங்கியிருந்தது அதன் பின்னரான 30 ஓவர்களும் மே.இ.தீவுகள் அணியின் கை ஓங்கியிருந்தது.

மே.இ.தீவுகள் அணியை விட திறமையால் எம் அணி மேலோங்கித்தான் இருந்தது. ஆனால் எம் அணியினர் இலகுவாக அழுத்தத்திற்கு ஆளாகித் தவித்தார்கள் ஆனால் மே.இ.தீவுகள் அணியினர் சிறப்பாக அழுத்தத்தினைக் கையாண்டார்கள் கட்டுப்படுத்தினார்கள். ஒவ்வொரு ஆட்டமிழப்பின் போதும் அவர்களின் நடனம் நமக்கு வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது ஆனால் அதுதான் அவர்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவியது என்றால் மிகையாகாது.. அந்த இடத்தில்தான் இலங்கை அணி சறுக்கிவிட்டது.

திசேர பெரேராவின் ஆட்டமிழப்போடு என்னால் அதற்கு மேல் மெச்சைப் பார்க்கவே முடியவில்லை. பார்க்கும் சக்தி எனக்கிருக்கவில்லை அதற்குப் பின்னர் என்ன நடந்தது, யார் யார் எத்தனை ஓட்டங்கள் பெற்றார்கள்? மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக் கொண்டாட்டம் எப்படி இருந்தது? (நிச்சயமாக Gangam Style இருந்திருக்கும் என்பது உறுதி) எதுவுமே தெரியாது.இலங்கை அணி எத்தனை ஓட்டங்களால் தோற்றது என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

இந்தத் தோல்விக்குப் பின்னர் நான் பார்க்கும் எல்லோரும் சந்தோசமாய் இருப்பது போலும், எல்லோரும் என்னைப் பரிதாபமாய்ப் பார்ப்பது போலும் ஒரு உணர்வு.

வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு இந்தத் தோல்வியால் எவ்வளவு அழுத்தம், கவலை இருக்குமோ அதைவிட பலமடங்கு அழுத்தம், கவலை அந்த வீரர்களுக்கு இருக்கும். உண்மையில் 4 உலக்கிண்ண இறுதிப்போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி என்பது எவ்வளவு பெரிய கவலை என்பது இலங்கை அணியின் ரசிகர்களாகிய எமக்குத்தான் தெரியும்.

இலங்கை கிரிக்கடின் Die Heart Fan ஆன எனக்கு இந்தத் தோல்வி தந்த ரணம் ஆறுவதற்கும் கவலை நீங்கி வழமைக்குத் திரும்பவும் பல நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு முறையும் இலங்கை அணி தோற்கும் போதும் இலங்கை அணி மீது வெறுப்பு வந்ததே இல்லை. கிரிக்கட் மீது வெறுப்பு வரும். இனி கிரிக்கட் பார்க்கவே கூடாது கிரிக்கட்டுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனால் அடுத்த தொடர் ஆரம்பமாகும் போதும் முன்னரைவிட பல மடங்கு நேசத்தோடு இலங்கை அணிக்கு என் ஆதரவு இருக்கும்….. முடியவில்லை இலங்கை கிரிக்கட்டிலிருந்து என்னால் தூரமாக முடியவில்லை.

அணிக்கு ஆதரவு வழங்குவதும் அப்புறம் மனம் நொறுங்குவதும் பின்னர் மீண்டும் ஆதரவு வழங்குவதும் என்று செல்கிறது என் வாழ்க்கை.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கைக் கிரிக்கட் அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த தலைவர் மஹெல ஜயவர்த்தன. வீரர்களை ஆக்ரோசமாக அதே நேரம் கிரிக்கட் ஸ்ப்ரிட்டோடு வழி நடத்துவதில் வல்லவர். மஹெலவின் பல தன்மைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்குப் பல காரணங்கள். இப்படி என்னை மிகவும் கவர்ந்த தலைவர் மஹெல தனது தலைமையில் ஒரு உலகக் கிண்ணத்தைதானும் வெல்லவேண்டும் என்பது எனது மிகப் பெரிய ஆசை. ஆனால் இவ்வாசை இனி நிறைவேற வாய்ப்பில்லை என்பதே எனக்கு மிகப் பெரும் கவலை.

கடந்த 2011 உலகக் கிண்ணக்கிரிக்கட் போட்டிகள் நடைபெற்றபோது எனக்கு பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோற்றபோது எந்நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. என்னால் படிக்கக் கூட முடியவில்லை. என் தாய் ஃபோன் பண்ணி என்னிடம் நல்லாப் படிக்காய் தானே என்று கேட்டபோது என்னால் பொய் சொல்ல முடியவில்லை. என்னால் படிக்க முடியவில்லை இலங்கையணியின் தோல்வி என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று வேதனையோடு கூறினேன். அவர்களுக்கும் என் வேதனை புரிந்தது எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என் பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னைத் தேற்றியதால்தான் என்னால் மீதமிருந்த பரீட்சையை எழுதிமுடிக்க முடிந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி? ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான ரசிகனாக் இருக்கிறேன் என்று எனக்கு புரியவே இல்லை.

அப்படி ஒரு நிலைதான் இம்முறையும் ஆனால் நல்லவேளை இம்முறை பரீட்சைகள் எதுவுமில்லை. ஆனாலும் மனதில் இருக்கும் வலி இன்னும் ஆறவில்லை. ஆனால் மற்றவர்கள் வழமைக்குத் திரும்பிவிட்டதைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.
ஏன் என்னால் மட்டும் முடியவில்லை….? ஹ்ம்ம் இதுவும் கடந்து போகும்.

கிரிக்கட் ஒரு விளையாட்டுதான் அதற்கு நான் இப்படி அடிமையாய்க்கிடப்பது அதிகம்தான்… மூளை சொல்கிறது மனது கேட்குதில்லையே.

இந்தத் தோல்வி தந்தவலி இன்னும் அதிகமாகும் என்பதால் FB,Cricinfo போன்ற தளங்கள் பக்கமோ வேறேதும் இணையத்தளங்கள்பக்கமோ, டீவி, ஸ்போர்ட்ஸ் நியூஸ் பக்கமோ போகவே இல்லை.இந்த இரண்டு நாட்களையும் கடத்த நான் பட்டபாடு ஹ்ம்ம்ம்… மனதை ஆறுதல்படுத்த என்னென்ன செய்யலாம் என்று தேடிய போதுதான் நான் இருக்கும் மாபோளை நகருக்கு மிக அண்மையில் எலகந்த என்னுமிடத்தில் ஒரு அழகிய கடற்கரை இருப்பது அறியக்கிடைத்தது. புண்பட்ட நெஞ்சுக்கு ஒரு ஆறுதல்….ஹ்ம்ம்ம்

பார்ப்போம் இதுவும் கடந்து போகும்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS