RSS

ரஜரட்டைப் பல்கலைக் கழகமும் தமிழ்வின்னின் பிழையான பரப்புரைகளும்.

தமிழ்வின் இணையத்தளத்தில் கடந்த  புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010 அன்றும்  வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010 அன்றும் இடம்பெற்ற ரஜரட்டைப் பல்கலைக் கழகம் தொடர்பான செய்திகளைப் பார்த்தவுடன் நான் மிகவும் கவலையும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.

ரஜரட்டைப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு மாணவன் என்ற வகையில் தமிழ் வின்னின் இந்த இரு செய்திகளையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.
பரபரப்பிற்காக கட்டுக்கதைகளை அள்ளிவிடவேண்டாமென்றும் அதாரமற்ற அபாண்டமான தகவல்களை வெளியிடவேண்டாமென்றும் தமிழ்வின்னின் குழுமத்தைக் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் வின் வெளியிட்ட செய்திகள் இவைதான்


(க்லிக் செய்வதன் மூலம் முழுவதுமாகப் படிக்கவும்)

இவை இரண்டுமே திரிபுபடுத்தப்பட்ட அபாண்டமான செய்திகள்.

குறித்த பல்கலைக் கழக மாணவன் என்ற வகையிலும், விடயங்களை அறிந்தவன் என்ற வகையிலும் இது தொடர்பான விளக்கத்தினை வழங்குவது என் கடமை.

அண்மைய சில நாட்களாக இலங்கையின் பல பல்கலைக் கழகங்களில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுவருவது உண்மை.

இம்முறை இந்த பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அண்மைய இப்பிரச்சினை ஆரம்பித்தமைக்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.

ஒன்று ரஜரட்டை பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை
மற்றையது பேராதெனிய பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை.

ரஜரட்டைப் பலகலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை.

மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உரிய முறையில் அனுமதி பெற்று ஒரு நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகினர்இலவசக் கல்வியின் மகத்துவத்தைப் பற்றியும் தனியார் பல்கலைக் கழகத்தினால் வரப்போகும் பிரச்சினைகளையும் வலியுறுத்தி இந்நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மாலை 4 மணியளவில் அரங்கேற இருந்த அந்நாடகத்திற்கான முற்கூட்டிய ஏற்பாடுகளைச் செய்ய சென்ற மாணவர்களுக்கு பல்கலைக் கழக கேற்போர் கூடத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டதோடு அவர்களது நாடகத்தினை அரங்கேற்ற அனுமதியும் மறுக்கப்பட்டது.இதனால் மாணவர்களின் ஆயிரக்கணக்கான பணமும் வீணாகிப்போனது. வெளியிலிருந்து வருகை தந்த நாட்டியக் குழுவினரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதன் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக் கழக பீடாதிபதியின் காரியாலையத்தைச் சுற்றிவழைத்து உபவேந்தரை வெளியேறவிடாமல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்துவைத்தனர். இதனால் உபவேந்தர் பொலீசாரை வரவழைத்து பிரச்சினையை கட்டுப்படுத்த முனைந்தார். இதன் போது 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேராதனையில் இடம்பெற்ற பிரச்சினை

தனியார் பலகலைக் கழகங்களை ஆதரிக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பேராதனைப் பலகலைக் கழகத்திற்கான வருகையை எதிர்த்து கூக்குரலிட்ட மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு மாணவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டியதால் மாணவர்களுக்கு பல்கலை கழக வழாகத்திற்குள் வருவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது

இவைதான் பல்கலைக் கழகங்களகங்கள் இரண்டிலும் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலமைகளிற்கான அடிப்படைக் காரணிகள்.

இதன் பின்னர் இரு பல்கலைக் கழக மாணவர்களும் கூட்டாக இணைந்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவேண்டும், தனியார் பல்கலைக் கழகங்களைத் தடைசெய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன்  கொழும்பிலுள்ள பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குளு கட்டிடத்துக்கு முன்பாகா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பொலீசாருடன் ஏற்பட்ட மோதலினால் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனால்  பிரச்சினை பூதாகரமானது.

பொலீசார் மற்றும் உயர்கல்வி அமைச்சரின் இச்செயல்களைக் கண்டிக்கும் பொருட்டும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டுமென்று கோரியும் ரஜரட்டை பல்கலைக் கழக மாணவர்கள் அனைவரும் விரிவுரைகளைப் பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இறுதி ஆண்டு மாணவர்களும், ICT மாணவர்களும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவும் கூட்டாக எடுக்கப்பட்டது. காரணம் இறுதியாண்டு மாணவர்களின் கடைசி செமஸ்ட்டர் இது. அத்துடன் ICT மாணவர்களின் பரீட்சைக்காலம் இது. இது தவறும் பட்சத்தில் மேலும் ஒருவருடம் இவர்கள் காத்திருக்கவேண்டிவரும் எனவே அவர்கள் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகளுக்கு செல்ல மற்ற மாணவர்கள் விரிவுரைகள் பகிஸ்கரிப்பது என்பதுதான் திட்டம்.
முகாமைத்துவ பீட இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கும்  பரீட்சைக் காலம் ஆனால் அவர்கள் முற்றாக பரீட்சைகளைப் பகிஸ்கரிக்கின்றனர்.

உண்மையில் குறித்த Batch மாணவர்கள் அனைவரும் கூட்டாகப் பரீட்சைகளைப் பகிஸ்கரித்தால் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. மாறாக ஒரு மாணவனாவது பரீட்சை மண்டபத்திற்குள் சென்று பரீட்சை எழுதினாலும் அதாவது முத்திரையிடப்பட்ட பரீட்சைத் தாள்ப் பொதி உடைக்கப்பட்டால் அந்த Batch இல் மீதமுள்ள அனைத்து மாணவர்களும் Refferd அல்லது Fail பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்ற நிலைக்கு ஆளாகின்றனர்.
இது பல்கலைக் கழக பரீட்சை விதிகளில் ஒன்று.

நிலைமை இப்படி இருக்க கடந்த திங்கட் கிழமை அன்று
மாணவ சங்கத்தோடு ஒத்துப் போகாத முகாமைத்துவ பீட  மாணவ மாணவியர் சிலர் வீம்பிற்காக சென்று பரீட்சைகள் எழுதினர். இதனால் ஆத்திரமடைந்த முகாமைத்துவ் பீட மாணவிகள் சிலர் பரீட்சை எழுதிய மாணவிகளுடன் வாய்த்தர்க்கத்திலீடுபட்டனர். இது இறுதியில் கை கலப்பில் முடிந்தது.
காயத்திற்குள்ளான 4 மாணவிகள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சண்டை தொலைக் காட்சிகளிலும் காட்டப்பட்டது.

இதன் பின்னர்தான் பொலீசார் வரவழைக்கப்பட்டனர். அதுவும் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை ஆரம்பமாக சில மணி நேரம் முன்னதாக வரும் பொலீசார் பரீட்சை மண்டபத்திற்கும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் மட்டும் பாதுகாப்பு வழங்குகின்றனர். பரீட்சை முடிவடைந்து மண்டபத்தைவிட்டு மாணவர்கள் வெளியேறிய பின்னர் பொலீசாரும் பல்கலைக் கழக வழாகத்திலிருந்து வெளியேறிவிடுகின்றனர். இதுதான் இந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் நிகழ்வு.
திரும்பவும் சொல்கிறேன் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை  நடைபெறும் நேரத்தில் மாத்திரம் பரீட்சைகள் தடையின்றி நடைபெறவும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவுமே பொலீசார் வந்து செல்கிறார்களே தவிர தமிழ்வின்னில் சொல்லப்பட்டதுபோல் பலகலைக் கழகம் முற்றாக பொலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வரவோ, மாணவர்கள் விடுதிகளிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்படவோ இல்லை.

இந்த செய்தி பிரசுரிக்கப்பட்ட
புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 11:57.02 AM GMT +05:30இந்த நேரத்தில் நான் பல்கலைக் கழகத்தில் Integer Programming Problem விரிவுரையில் இருந்தேன். என்னுடன் பலமாணவர்கள் இருந்தார்கள்அன்று முழுநாளும் அனைத்து விரிவுரைகளும் நடந்தன. மாணவர் வருகை மிகக் குறைவு என்றாலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் நடந்தன.
(நிலமை இப்படி இருக்க ஏன்  இப்படி ஒரு பொய்யான தகவல்  தமிழ்வின்னிடமிருந்து..?)


இரண்டாவது செய்தி பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை.

அந்த செய்தியில் வெளிவந்ததுபோல் மாணவிகளின் கைய்யைப் பிடித்து இழுக்க பொலீசார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் இருக்கவே இல்லை.(பல்கலைக் கழக வளாகத்திற்குள்தான் விடுதிகளும் உள்ளன. தவிரவும் இப்படியான அசாதாரான நிலைமை பல்கலைக் கழகத்திற்குள் இருக்கையில் மாணவர்களின் துணையின்றி மாணவிகள் விடுதிக்கு வெளியே நடமாடுவதே இல்லை)

நான் பதிவை எழுதும் இந்நேரம் வரையில் மாணவர்களின் அமைதியான பகிஸ்கரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறதே தவிர மாணவர்கள் கொதித்தெழவுமில்லை, வேரெந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுமில்லை.

அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பொலீசாருக்கு எதிராக ஆக்ரோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும். அப்படி எதுவுமே நடக்கவில்லை.. எல்லாம் சுத்தப் பொய்.

தமிழ்வின்னின் இரு செய்திகளிலும்
எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்என்று அடிக்கடி வருகிறதே.. மேலும் குறிப்பிட்ட அந்த செய்தியாளர் யார்????????
உண்மையில் அவர் மிகிந்தலையில் இருக்கிறாரா? இல்லை வேரெங்குமிருந்துகொண்டு சினிமாக் கதை எழுதுகிறாரா? அல்லது குறைந்த பட்சம் ரஜரட்டைப் பல்கலைக் கழக தகவல்களை நேரடியாக அறிந்துகொள்ளும் தூரத்திலாவது இருக்கிறாரா..?

தயவு செய்து உண்மையான செய்திகளைக் கொடுங்கள் இப்படி கற்பனையில் அபாண்டம் சுமத்தாதீர்கள்..


குறிப்பு 1: 
அத்துடன் ஏற்கனவே கைதாகியுள்ள மாணவர்கள் தொடர்ந்து 12ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டங்கள் அனைத்தும் பூதகராமாகுமே தவிர அடங்கப்போவதில்லை.
எதிர்வரும் வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்ளாக அமையலாம்ஒன்றில் போராட்டங்கள் பூதாகரமாகி பல்கலைக் கழகங்கள் மூடப்படலாம் இல்லையேல் பலகலைக் கழக போராட்டங்கள் வித்தியாசமான முறையில் அடக்கப்படலாம்... பொறுத்திருந்து பார்போம்

குறிப்பு 2:
அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை இவ்வாறு முரட்டுத் தனமாக கையாளக் காரணம் என்ன..? என்பதை அடுத்த பதிவில் தருகிறேன்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS